

தமிழகத்தில் வரும் 2030ம் ஆண்டிற்குள் குடிசைகளே இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற உன்னத இலக்கை அடைய, தமிழக அரசு 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தை அறிவித்து மிகத் தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது. கலைஞர் கனவு இல்லம் திட்டம் மூலமாக கிராமப்புறங்களில் வசிக்கும் குடிசை இல்லாமல் ஓட்டு வீடுகளில் வாழும் ஏழை குடும்பங்களுக்கு தமிழக அரசு வீடு கட்டி வழங்குகிறது. இதனால், ஏழை, எளிய மக்கள் நேரடியாகவே பலனடைந்து வருகின்றனர்.
கலைஞர் கனவு இல்லம் திட்டம் மூலம் தகுதியான குடும்பங்களுக்கு தலா ரூ.3.50 லட்சம் மானியத்துடன் சிமெண்ட் மற்றும் கான்கிரீட் கூரையுடன் கூடிய புதிய வீடுகளை தமிழக அரசு கட்டி தந்து வருகிறது.
ஒவ்வொரு வீட்டிற்கும் அரசு தரப்பிலிருந்து 3,50,000 ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது. இந்தத் தொகையானது பயனாளிகளின் வங்கிக் கணக்கில் மூன்று நிலைகளில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது. இதுதவிர கட்டுமானப் பணிகளுக்காக கூடுதல் நிதி தேவைப்படும் பட்சத்தில், பயனாளிகள் வங்கிகள் மூலம் 1,50,000 ரூபாய் வரை கடன் பெற்றுக் கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதற்காக முதற்கட்டமாக, ஒரு வீட்டிற்கு ரூ.3.50 லட்சம் என்ற அடிப்படையில் ஒரு லட்சம் வீடுகள் கட்ட ரூ.3500 கோடியை தமிழக அரசு ஒதுக்கி அரசாரணை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு லட்சம் வீடுகள் கட்டும் பணிகள் பல்வேறு நிலைகளில் நடைபெற்று வரும் சூழலில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த கூடுதல் வீடுகள் ஊரகப் பகுதிகளில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
யாருக்கெல்லாம் கிடைக்கும்
கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடுகளை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
* தமிழ்நாடு பூர்வீகமாகப் கொண்டவராக இருக்க வேண்டும்.
* ஏழை, எளிய மக்களுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்படும்.
* இந்த திட்டத்தில் வீடுகளை பெற கிராமப்புறங்களில் குடிசை வீட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
* வீடு கட்டுவதற்கு 360 சதுர அடி நிலமும், அந்த நிலத்திற்கான பட்டாவும் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
* உங்களுக்கு சொந்தமான நிலத்தை வாடகைக்கு, குத்தகைக்கு விட்டிருந்தால் விண்ணப்பிக்க முடியாது.
* சொந்த நிலத்தை வணிக நோக்கங்களுக்காகவோ அல்லது மாடு, ஆடு விலங்குகளின் தங்குமிடமாகவோ வைத்திருந்தாலும் விண்ணப்பிக்க முடியாது.
* ஏற்கனவே கான்கிரீட் வீடு வைத்திருப்பவர்களும் விண்ணப்பிக்க முடியாது.
* புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கும் இந்தச் சலுகை பொருந்தாது.
* குடிசையில் ஒரு பக்கம் சீட்டு, கான்கிரீட் போட்டிருந்தாலும், விண்ணப்பிக்க முடியாது.
* மத்திய, மாநில அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க முடியாது.
தேவையான ஆவணங்கள் :
ரேஷன் கார்டு,
ஆதார்,
பாஸ்போர்ட் சைஸ் போட்டோ,
வருமான சான்றிதழ்,
நிலத்திற்கான பட்டா,
பத்திரம் நகல்,
வங்கிக் கணக்கு விவரங்கள்
இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் பொதுமக்கள் தங்களின் பட்டா, சிட்டா, ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் வருமானச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களுடன் தங்கள் பகுதி ஊராட்சி மன்ற அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம்.
அந்தந்த ஊராட்சி மன்றத் தலைவர் தலைமையிலான குழுவினர் தகுதியான விண்ணப்பங்களை ஆய்வு செய்து, கிராம சபையின் ஒப்புதலைப் பெற்ற பின்னரே இறுதிப் பட்டியலைத் தயார் செய்து தகுதியானர்களை தேர்வு செய்வார்கள்.
தமிழக அரசு கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் மேலும் ஒரு லட்சம் வீடுகள் கட்ட முடிவு செய்துள்ளதால் இதற்கு முன்பு கணக்கெடுப்பில் விடுபட்டவர்கள் அருகில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு தெரிவிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.