

தமிழக முதல்வர் விஜய் தலைமையில் இன்று காலை ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு மற்றும் திட்டங்களை செயல்படுத்துதல் குறித்து இந்த மாநாட்டில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இன்று மற்றும் நாளை என மூன்று அமர்வுகளாக நடைபெறும் இந்த மாநாட்டில் முதல் அமர்வு தற்போது முடிவு பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஜூலை 2வது வாரத்தில் முதல்வர் விஜய் கரூர் செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற முதல்வர் செல்லவிருக்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மக்கள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. அப்போது எதிர்பாராத விதமாக ஒரு கடையின் மேற்கூரை சரிந்து விழுந்ததினாலும், கட்டுக்கடங்காத கூட்டத்தினாலும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 120 பேர் வரை படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்து குறித்த விசாரணையை சிபிஐ மேற்கொண்டு வரும் நிலையில், தமிழக முதல்வர் விஜய், தவெக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் உள்பட அனைவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
தமிழக சட்டமன்ற தேர்தல் காரணமாக இந்த வழக்கின் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், ஜூன் மாதத்தில் விசாரணையை மீண்டும் தொடங்கியது சிபிஐ. இந்நிலையில் ஜூலை மாதத்தின் 2வது வாரத்தில் முதல்வர் விஜய் கரூர் மாவட்டத்திற்கு செல்லவிருப்பதாக சற்றுமுன் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து முதல்வர் ஆறுதல் கூற இருக்கிறார்.
கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த பிறகு, தவெக தலைவர் விஜய் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்காமல் இருந்தது விவாதத்தை ஏற்படுத்தியது. அப்போதைய ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் இதனை வன்மையாக கண்டித்தனர். இந்நிலையில் கிட்டத்தட்ட 9 மாதங்களுக்குப் பிறகு கரூருக்கு முதல்வர் விஜய் செல்லவிருக்கிறார்.
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடந்த போது, பாதுகாப்பு காரணங்களுக்காக பிரச்சாரத்திற்கு கூட கரூருக்கு முதல்வர் விஜய் செல்லவில்லை. மேலும் விஜய் பிரச்சாரம் நடத்திய இடங்களில் எல்லாம் அதிக பாதுகாப்பும், கட்டுப்பாடுகளும் காவல்துறையினரால் விதிக்கப்பட்டது.
இந்நிலையில் கரூர் மாவட்டத்திற்கு முதல்வர் விஜய் செல்லவிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஆறுதல் கூறுவது மட்டுமின்றி, தமிழக அரசு சார்பில் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்திற்கு ஏதேனும் உதவிகள் செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் ஏற்பட்ட போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக மட்டுமே இருந்த விஜய், இன்று தமிழக முதல்வராக இருக்கிறார். ஆகையால் முதல்வரின் இந்த கரூர் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
இன்று அதிமுகவின் கரூர் தொகுதி எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், தவெக-வில் இணைய இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. ஆகையால் முதல்வர் விஜய் உடன் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூருக்கு செல்வாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.