

'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தை தொடக்கி வைக்க தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு இன்று வருகை தந்தார். இதனால் அரசு மருத்துவமனை முன்பு, தவெக கட்சித் தொண்டர்கள் ஏராளமானோர் குவிந்திருந்தனர்.
முதலமைச்சரின் வருகையை ஒட்டி, காவல் துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மருத்துவமனையை சுற்றி ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இதனிடையே முதல்வர் விஜய்யை பார்ப்பதற்காக விமான நிலையத்திலிருந்து ராஜாஜி மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஏராளமான அவரது ரசிகர்களும் பொதுமக்களும் காத்திருந்தனர்.
நீண்ட நேரமாக வெயிலில் நின்று காத்திருந்த நிலையில், கூட்டத்தில் இருந்த 10-க்கும் மேற்பட்டோருக்கு திடீரென மயக்கம் மற்றும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் உடனடியாக விரைந்து சென்று மயக்கம் அடைந்தவர்களை மீட்டு முதலுதவி அளித்தனர்.
சிறுவர்கள், பெண்கள், பெரியவர்கள் என ஒவ்வொருவராக மயங்கி விழுந்ததும், அவர்களை காவல் துறையினர் தூக்கிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர்.பின்னர், ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மூவரும் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவர்களின் உடல்நிலை தொடர்பான விரிவான தகவல்கள் மருத்துவமனை தரப்பில் வெளியாகவில்லை.
தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்த பகுதிக்குள் மயக்கம் அடைந்தவர்களுக்கு அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தண்ணீர் கொடுத்து, முதலுதவி செய்து, ஆசுவாசப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கூட்ட நெரிசல் மற்றும் வெயிலின் தாக்கம் காரணமாக சிலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல்துறையினர் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி பாதுகாப்பு ஏற்பாடுகளை மேலும் தீவிரப்படுத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கனிமலர் என்ற நர்சிங் மாணவி காலை 8 மணிக்கு வந்து காத்திருந்ததால், வெயில் காரணமாக மயக்கமடைந்தார்.
தமிழகத்தில் தற்போது கடும் வெயில் சுட்டெரிக்கிறது. இந்த நிலையில், வெயிலையும் பொருட்படுத்தாமல் குறிப்பாக குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு சென்றவர்கள் மயக்கமடைந்திருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏற்கனவே கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி முதல்வர் விஜய் கரூருக்கு பிரச்சாரத்துக்கு சென்ற போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிர் இழந்தனர். இந்த பெருந்துயரத்தின் முதலாவது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது