

தமிழ்நாட்டில் சாலை விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்க முதல்வர் விஜய் தீவிர இதை எடுத்து வருகிறார் இதன் முதல் படியாக, தமிழ்நாட்டில் சாலை விபத்துகளை குறைக்க தனி செயல் திட்டத்தை உருவாக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இன்று காலை சென்னை மாநிலக் கல்லூரியில் நடந்த பணி நியமன ஆணை வழங்கும் விழாவில் நலம் TN இணையதளத்தைத் தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய். பிறகு, கால்நடைத் துறை மற்றும் பால்வளத் துறை செயல்பாடுகள் குறித்து அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார் முதல்வர். பட்ஜெட் குறித்த விவாதங்களும் இந்த ஆலோசனையில் மேற்கொள்ளப்பட்டன.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் சாலை விமத்துகளைக் குறைக்க என்ன செய்யலாம் என்பது தொடர்பாக நெடுஞ்சாலைத் துறையுடன் ஆலோசனை மேற்கொண்டார் முதல்வர். இந்த ஆலோசனையில் ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளார் முதல்வர்.
2030-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைந்தபட்சம் 50% குறைப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஜோசப் விஜய் பிறப்பித்த உத்தரவில், “தமிழகத்தில் சாலை விபத்துகளை குறைக்க தனி செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும். சாலை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அடுத்த 10 ஆண்டுகளுக்கான செயல் திட்டம் உருவாக்கப்பட வேண்டும். இந்தத் திட்டத்தில் அதிவிரைவு சாலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
அனைத்து சாலைகளையும் தரம் உயர்த்தி, அதனைத் தொடர்ந்து சீரான முறையில் பராமரிக்க வேண்டும். சாலை பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து, விபத்துகளை குறைத்திட நெடுஞ்சாலைத் துறை சீராக செயல்பட வேண்டும்” என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக தமிழ்நாட்டில் சாலை விபத்துகளை குறைப்பது, தவெக அரசின் மிக முக்கிய முன்னுரிமை என்று பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்திருந்தார்.
செயல் திட்டத்தின் நோக்கம்:
* சாலை விபத்துகள் அதிகம் நடக்கும் இடங்களைக் கண்டறிந்து, அங்கு தேவைப்படும் திருத்தங்களைச் செய்யப்படும். இதற்காக சாலை பாதுகாப்பு தணிக்கை குழு வலுப்படுத்தப்பட உள்ளது.
* தனி செயல் திட்டத்தின் படி சாலை விபத்துகளில் சிக்குபவர்களுக்கு விரைந்து சிகிச்சையளிக்க, விபத்துகள் அதிகமாக நடக்கும் நெடுஞ்சாலைப் பகுதிகளில் பிரத்யேகமாக மருத்துவமனைகள் அமைக்கப்படவுள்ளன.
* நெடுஞ்சாலைகளில் ரோந்துப் பணிகளை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் எதிராபாராமல் சாலை விபத்து நடந்தவுடனேயே, விரைவான மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும்.
* தமிழ்நாடு முழுவதிலும் முக்கிய மேம்பாலங்கள் மற்றும் பாலங்களின் உறுதித் தன்மையை ஆராய கட்டமைப்பு தணிக்கை மேற்கொள்ளப்படும்.
சாலைகளில் வேகக் கட்டுப்பாட்டை உறுதி செய்வதற்கு ஏற்கனவே கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதோடு போக்குவரத்து விதிமீறல்களுக்கு கடுமையான அபராதச்களும் விதிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் இளம் தலைமுறையினர் சாலைகளில் வேகமாக பயணிக்கின்றனர். ஆகையால் சாலை விபத்து குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கூடுதலாக நடத்தப்பட உள்ளது.
மத்திய அரசு அளித்த தகவலின் படி கடந்த ஆண்டில் (2025) தேசிய நெடுஞ்சாலைகளில் நடந்த விபத்துகளின் எண்ணிக்கையில் தமிழ்நாடு தான் முதலிடம். தற்போது முதல்வர் கொண்டு வந்துள்ள தனி செயல் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் விபத்துக்கள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் தமிழக அரசின் இந்த சீரய நடவடிக்கைக்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியது அவசியம்.