கம்பீரமாய் களமிறங்கும் ‘சிங்கப்பெண்’ படை! இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்..!!

Singappen Special Task Force
Singappen Special Task Force
Updated on

தமிழ்நாட்டின் 13வது முதல்வராகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் சி. ஜோசப் விஜய் கடந்த மே மாதம் 10-ம்தேதி முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். முதலமைச்சரானதும் விஜய் போட்ட மூன்று கையெழுத்துகளில் ஒன்று ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ என்ற புதிய திட்டம் தொடங்கப்படும் எனத் தெரிவித்தார்.

பெண்களின் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டுள்ள ஒரு பிரத்யேகக் காவல் பிரிவு சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையாகும்.

அந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் நோக்கம், பொது இடங்கள், பேருந்து நிறுத்தங்கள், கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள் மற்றும் இணைய வழியிலும் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களைத் தடுத்து, அவசர காலங்களில் உடனடிப் பாதுகாப்பை வழங்குவதாகும்.

மேலும் குற்றச் சம்பவங்கள் நிகழ வாய்ப்புள்ள இடங்களை முன்கூட்டியே கண்டறிந்து கண்காணித்தல், ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்துதல் மற்றும் ஆபத்தில் உள்ள பெண்களை உடனடியாக மீட்டல் போன்ற பணிகளை இப்படை மேற்கொள்ளும்.

முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்க உள்ள சிங்கப்பெண் சிறப்புப் பிரிவுக்கு ஐஜியாக (IG)கே. பவானீஸ்வரி நியமிக்கப்பட்டார். அதோடு முதலமைச்சர் விஜய்யின் நேரடி வழிகாட்டுதல் மற்றும் கண்காணிப்பின் கீழ் இந்த அதிரடிப்படை பிரத்தியேகமாகச் செயல்படவுள்ளது.

இதையும் படியுங்கள்:
விஜய் சொன்னது போலவே தொடங்கிடுச்சு..! சேலம் மாநகரில் சிங்கப்பெண் அதிரடிப்படை அமைப்பு..!
Singappen Special Task Force

குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கப்படுகிறது.

முதலமைச்சர் விஜய் பொறுப்பேற்றவுடன் குழந்தைகள், பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்படும் என்று அறிவித்தார்.

இதனையடுத்து, இந்த திட்டத்தை முழு வீச்சில் செயல்படுத்தும் நோக்கில் காவல்துறையினரும், அரசு அதிகாரிகளும் தீவிரமாகச் செயலாற்றி வந்தனர். இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் சிறப்புப் படையில் பணிபுரிய இருக்கும் பெண் காவலர்களுக்குப் பிரத்தியேக உடைகள் மற்றும் வாகனம் உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்பட்டு, தயார் செய்யப்பட்டு வந்தது.

இந்த அதிரடிப்படையில் இடம்பெறும் பெண் போலீஸ் மற்றும் பெண் சப் இன்ஸ்பெக்டர்களுக்கு சர்வதேச காவல்துறை தரத்திற்கு இணையாக, முற்றிலும் புதிய மற்றும் நவீன வடிவமைப்புடன் கூடிய நீலநிற சட்டை, காக்கி நிற பேண்ட் என சிறப்பு சீருடை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் கருப்பு நிற தொப்பியும், கருப்பு நிற ஷூவும் வழங்கப்பட்டுள்ளது.

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை கடந்த 29-ம்தேதியன்று முதலமைச்சர் விஜய் தொடங்கி வைப்பதாக இருந்தது. ஆனால் நிர்வாக காரணங்களுக்காக கடைசி நேரத்தில் இந்த நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டது. பதவியேற்று ஒரு மாதம் நிறைவடையவுள்ள நிலையில், இன்னும் இத்திட்டத்தைத் தொடங்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தார்கள். தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் இன்றளவும் தமிழக அரசு சிங்கப்பெண் திட்டத்தை துவங்கி வைக்காதது ஏன் ? என்ற கேள்விகள் எழுந்தது.

அந்த கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை முதலமைச்சர் விஜய் இன்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 9-ம்தேதி) மாலை 5 மணிக்கு தொடங்கி வைக்க உள்ளார். மேலும் முதலமைச்சர் விஜய் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்க விழாவில் உரையாற்றி, சில அறிவிப்புகளை வெளியிடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கான விழா சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகளை காவல்துறையினர் நடத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:
மே 27 முதல் ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’: முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்..!
Singappen Special Task Force

சென்னையில் இந்த திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தவுடன் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை போலீசார் தங்கள் பணியை தொடங்க உள்ளனர்.

logo
Kalki Online
kalkionline.com