

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று இரவு சென்னை விமான நிலையத்திலிருந்து அவர் லண்டன் புறப்பட்டுள்ளார் . அவருடன் தமிழக அரசின் முக்கிய அதிகாரிகள் ஒரு சிலரும் உடன் சென்றுள்ளனர். இது விஜய் முதல்வராக பொறுப்பேற்ற பின் செல்லும் முதல் அரசு முறை வெளிநாட்டு பயணமாகும். சர்வதேச அளவில் முதலீட்டாளர்களை நேரில் சந்தித்து பேசவும், தமிழ்நாட்டுக்கு தேவையான முதலீடுகளை கொண்டு வருவதற்கும் இந்த பயணம் உதவும்.
முதல்வரின் இந்த அதிகாரப்பூர்வ பயணம் செப்டம்பர் 16ஆம் தேதி வரை நீடிக்கிறது. லண்டனில் தங்கும் அவர் அங்குள்ள பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் மற்றும் உயர் அதிகாரிகளை சந்திக்க உள்ளார். இதை தொடர்ந்து இங்கிலாந்தின் புகழ்பெற்ற
சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் நடைபெறவுள்ள, லெ மான்ஸ் கோப்பை சர்வதேச கார் பந்தயப் போட்டியின் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார்.
2026 ஆம் ஆண்டிற்கான லே மான்ஸ் கோப்பை கால்பந்தயத்தின் 5 வது சுற்றில் சிறப்பு விருந்தினராக முதல்வர் விஜய் கலந்து கொள்ள உள்ளார். இந்த கார் பந்தயத்தில் தமிழக நடிகர் அஜித்குமார் கலந்து கொள்ள உள்ளார். மேலும் இந்த கார் பந்தயத்தை அதிகாரப்பூர்வமாக கொடியசைத்து விஜய் துவக்கி வைக்க உள்ளார்.
இந்தப் போட்டி இந்த வார இறுதியில் சில்வர்ஸ்டோனில் நடைபெற உள்ளது. மேலும் விஜய் இந்த போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய மற்றும் சர்வதேச கார் பந்தய வீரர்களை உற்சாகப்படுத்துவார். தனிப்பட்ட முறையில் இந்தியாவை சேர்ந்த வீரர்களையும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் மற்றும் கார் பந்தய வீரர் அஜித்தையும் அவர் ஊக்கப்படுத்துவார்.
இந்த கார்பந்தயத் தொடரில் அஜித் தனது சொந்த அணியான அஜித் ரெட்ஆன்ட் (Ajith RedAnt) அணிக்காக எல்எம்பி3 புரோ/ஆம் (LMP3 Pro/Am) பிரிவில் களமிறங்குகிறார். அஜித்தின் கார் பந்தய அணியில் இந்தியாவின் சார்பாக ஃபார்முலா 1 பந்தயங்களில் கலந்து கொண்ட அனுபவமிக்க ஆதித்யா பட்டியலும் இருக்கிறார். இந்த சுற்றில் உலக புகழ்பெற்ற கார் பந்தய வீரர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ரோமெய்ன் வோஸ்னியாவும் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக தமிழக முதல்வர் விஜய் சட்டமன்றத்தில், தமிழ்நாட்டில் சர்வதேச தரம் வாய்ந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி (Motor Sports City) மற்றும் நவீன ஒலிம்பிக் நகரம் அமைக்கப்படும், என்று விதி 110-ன் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் சிறப்பான கார் பந்தய வீரர்களையும் , மற்ற துறை விளையாட்டு வீரர்களையும் உருவாக்க முடியும். இந்த திட்டத்தை பாராட்டி அஜித்குமார் அப்போதே ஒரு நன்றி அறிக்கையை வெளியிட்டு இருந்தார்.
30 ஆண்டு காலமாக தமிழ் சினிமாவில் விஜய்க்கும் அஜித்திற்கும் இடையில் கடுமையான நேரடி போட்டி நிலவி வந்தது. இருவரின் ரசிகர்களும் யார் பெரிய நடிகர்? என்று விவாதத்தை நீண்ட காலமாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து கொண்டிருந்தனர். ஆனால், தற்போது காட்சிகள் மாறிவிட்டன. கரூர் நெரிசல் சம்பவத்தில் விஜய்க்கு ஆதரவாக அஜித் பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் கலந்து கொள்ளும் விளையாட்டு நிகழ்ச்சியினை துவக்கி வைக்கும் சிறப்பினை விஜய் பெற்றுள்ளார்.