
சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தவிர்க்க தற்போது எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் இயற்கை எரிவாயுவில் இயங்கும் வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. மக்கள் மத்தியில் இந்த வகை வாகனங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே, இயற்கை எரிவாயுவில் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கையை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்தது.
மத்திய அரசுக்கு மாநில அரசுகளும் ஒத்துழைப்புக் கொடுத்து, தங்கள் மாநிலங்களில் சிஎன்ஜி பேருந்து மற்றும் எலக்ட்ரிக் பேருந்துகளை அறிமுகப்படுத்தின. அவ்வகையில் தற்போது தமிழ்நாட்டில் குறைந்த எண்ணிக்கையிலான எலக்ட்ரிக் பேருந்துகளும், சிஎன்ஜி பேருந்துகளும் பயன்பாட்டில் உள்ளன. கொஞ்சம் கொஞ்சமாக இந்த எண்ணிக்கையை உயர்த்த தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள சிஎன்ஜி பேருந்துகளின் மூலம் ரூ.2 கோடியை சேமித்துள்ளது தமிழ்நாடு அரசு. இதன்மூலம் சிஎன்ஜி பேருந்துகள் குறைந்த செலவில் இயங்குவதோடு, சுற்றுச்சூழலுக்கும் ஏற்றது என்பது நிரூபணமாகியுள்ளது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் தற்போது 55 சிஎன்ஜி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. டீசல் பேருந்துகளுக்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட இந்தப் பேருந்துகள் தான் ரூ.2 கோடியை மிச்சப்படுத்தியுள்ளன. சுற்றுச்சூழலை எந்த வகையிலும் பாதிக்காத அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு தான் சிஎன்ஜி பேருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது. இதனால் டீசல் செலவு வெகுவாக குறைந்துள்ளது. இதனால் சிஎன்ஜி பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
முதலில் 3 டீசல் பேருந்துகளை சிஎன்ஜி தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு தமிழக அரசு மாற்றி அமைத்தது. தற்போது இந்த எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. சிஎன்ஜி பேருந்துகள் எரிபொருள் செலவை மிச்சப்படுத்தியதுடன், அதிக மைலேஜையும் கொடுத்தன.
இதுகுறித்து தமிழகப் போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், “2024 ஆகஸ்ட் மாதம் முதல் 2025 ஆகஸ்ட் மாதம் வரையிலான ஓராண்டு காலத்தில் மட்டும் 55 சிஎன்ஜி பேருந்துகள் இயற்கை எரிவாயுவின் மூலம் 51,59,744 கி.மீ. தூரத்திற்கு இயக்கப்பட்டன. டீசல் பேருந்துகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், 1 கிலோமீட்டருக்கு ரூ.3.85 சேமிக்கப்பட்டு, மொத்தம் ரூ.2 கோடி அளவிளான எரிபொருள் சேமிக்கப்பட்டுள்ளது.
இதனால் அடுத்த கட்டமாக சுமார் 1,000 பேருந்துகள் சிஎன்ஜி தொழில்நுட்பததிற்கு மாற்றப்பட்டு வருகின்றன. விரைவில் இந்தப் பேருந்துகள் பயன்பாட்டிற்கு வரவுள்ளன. 1,000 சிஎன்ஜி பேருந்துகளும் பயன்பாட்டிற்கு வந்துவிட்டால் எரிபொருள் செலவு பெருமளவு குறைவதோடு, சுற்றுச்சூழல் மாசுபாடும் குறையும்” என அதிகாரிகள் தெரிவித்தனர்.