
சென்னையில் இரயில் போக்குவரத்திற்கு அடுத்தபடியாக பெரும்பாலான மக்கள் சாலைப் போக்குவரத்தைப் பயன்படுத்துகின்றனர். ‘மகளிர் விடியல் பயணத் திட்டம்’ தமிழகத்தில் அறிமுகமான பின்பு, பேருந்தில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
சென்னையில் ஓடும் எம்டிசி பேருந்துகளின் வருகை நேரத்தை பயணிகள் தெரிந்து கொள்ள ‘சென்னை பஸ் (Chennai Bus)’ என்ற செயலி தற்போது பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில் பேருந்துகளின் வருகை நேரத்தை பயணிகள் மிக எளிதாக தெரிந்து கொள்ள டிஜிட்டல் போர்டுகளை நிறுவ சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.
சென்னை பஸ் செயலி பயணிகளுக்கு உபயோகமானதாக இருந்தாலும், ஒருசில பேருந்துகளின் வருகை சரியாக காட்டப்படவில்லை. அதோடு மொபைல் போன் இல்லாத பயணிகள் மற்றும் ஒருசில மூத்த குடிமக்களுக்கு இந்த வசதி எட்டாக் கனியாகவே உள்ளது. இந்நிலையில் பேருந்து நிலையங்களில் அடுத்தடுத்து எந்தெந்த பேருந்துகள் வரவுள்ளன என்பதை டிஜிட்டல் போர்டுகள் வழியாக அறிந்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி, மெட்ரோபாலிடன் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் (MTC) மற்றும் சென்னை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் ஆகியவை இணைந்து பேருந்து நிலையங்களில் டிஜிட்டல் போர்டுகளை நிறுவுகின்றன. பேருந்து எண், வருகை நேரம் மற்றும் வழித்தடங்கள் ஆகிய தகவல்கள் டிஜிட்டல் போர்டுகளில் காண்பிக்கப்படும். இரயில் நிலையங்களில் இருப்பது போலவே தற்போது பேருந்து நிலையங்களிலும் டிஜிட்டல் போர்டு வசதி வந்துள்ளதால், சென்னை மாவட்ட பேருந்து பயணிகளுக்கு வசதியாக இருக்கும். இந்த வசதி குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
616 பேருந்து நிலையங்கள் மற்றும் டெர்மினல்களில் ‘Intelligent Transport System’ என்ற திட்டத்தின் கீழ், டிஜிட்டல் போர்டு வசதி நிறுவப்பட உள்ளது. இதன்படி 10, 4 மற்றும் 2 வரிகள் என 3 விதமான டிஜிட்டல் போர்டுகள் நிறுவப்படும். இந்த போர்டுகளில் இணைய இணைப்புடன் சிம் கார்டு பொருத்தப்படும். பேருந்துகளில் தானியங்கி இருப்பிட சாதனத்தைப் பொருத்துவதன் மூலம், டிஜிட்டல் போர்டுகளில் வருகை நேரம் துல்லியமாக தெரியும்.
இதுகுறித்து MTC உதவி மேலாளர் சரவண ராஜா கூறுகையில், “கடந்த டிசம்பர் மாதத்தில் தொடங்கப்பட்ட பணியில் இதுவரை சென்னையில் 406 டிஜிட்டல் போர்டுகள் நிறுவப்பட்டுள்ளன. சோதனை முறையில் 50 போர்டுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. விரைவில் பிரத்யேகமான இணையதளமும் தயாராகி விடும். டிஜிட்டல் போர்டுகள் நிறுவப்பட்ட பின், அடுத்த 5 ஆண்டுகளுக்குப் பராமரிக்கப்படும்” என்று கூறினார்.