டெல்லியில் கடுமையான குளிர் அலை வீசி வருகிறது. கடந்த 1996ம் ஆண்டுக்கு பிறகு தற்போதுதான் இவ்வளவு கடுமையான குளிர் அலை வீசுகிறது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்தியா முழுவதும் இயற்கையின் கோரத் தாண்டவம் தலைவிரித்தாடுகிறது. தென்னிந்தியாவில் பல மாநிலங்களில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டு பலத்த மழை பெய்து வருகிறது. அதேபோல் வட மாநிலங்களில் பலத்த குளிர் அலை வீசி வருகிறது. ஹிமாச்சல், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது.
தலைநகர் டெல்லியிலும் பனி மூட்டத்துடன் காணப்படுகிறது. இந்த குளிர் காலத்தின் மிகக் குறைந்த வெப்பநிலையை இன்று பதிவு செய்துள்ளது டெல்லி. சஃப்தர்ஜங் நிலையத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 4.5 டிகிரி செல்சியஸாக பதிவானது. டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 4.9 டிகிரி செல்சியஸாக இருந்தது. பூசா மற்றும் அயநகர் நிலையங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 3.2 டிகிரி செல்சியஸ் மற்றும் 3.8 டிகிரி செல்சியஸ் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1996ம் ஆண்டுக்கு பிறகு இன்றுதான் 5 டிகிரிக்கும் குறைந்த செல்சியஸ் உள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கைப்படி இனி வரும் காலங்களில் இதைவிடவும் அதிக குளிரை மக்கள் எதிர்கொள்ளும் நிலை வருமாம். வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கடும் குளிர் அலை வீசும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. டெல்லியில் ஒருசில இடங்களில் குளிர்ந்த அலை நீடிக்கும் என்றும் இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.
அடுத்த இரண்டு நாட்களில் குளிர் காற்று, வடமேற்கு திசையில் இருந்து மணிக்கு 16கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 4 முதல் 6 டிகிரி செல்சியஸ் வரையிலும், அதிகபட்சமாக 23 முதல் 24 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனால் டெல்லி மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். தங்கள் வீடுகளின் வாசல்களில் தீமூட்டி குளிர்க் காய்ந்து வருகின்றனர்.