
உலகளவில் பெரும்பாலான மக்கள் எதைப் பற்றியாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், கூகுள் குரோம் பிரவுசரைத் தான் முதலில் பயன்படுத்துவார்கள். எத்தனையோ பிரவுசர்கள் இருந்தாலும், குரோம் பிரவுசர் மட்டும் இன்று வரைத் தனித்து நிற்கிறது. அதோடு பயனாளர்களுக்கு சௌகரியமான உணர்வையும் தருகிறது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கூகுள் குரோம் பிரவுசர் மெதுவாக இயங்குகிறது என்ற குற்றச்சாட்டுகள் எழுகின்றன. எதைத் தேட வேண்டும் என்றாலும், அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது. அதிலும் அதிக டேப்களை பயன்படுத்தினால், கணனியின் வேகமும் குறைகிறது. இதற்கெல்லாம் முடிவு கட்டும் விதமாக தற்போது செயற்கை நுண்ணறிவில் இயங்கும் ‘காமெட்’ பிரவுசர் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த பிரவுசரை பெர்ப்ளெக்சிட்டி ஏஐ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாக செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உலகளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. அனைத்துத் துறைகளிலும் ஏஐ தொழில்நுட்பம் கால்பதிக்கவே வேலைவாய்ப்பின்மையை ஏற்படுத்தி விடும் என வல்லுநர்கள் அஞ்சுகின்றனர். இருப்பினும் ஏஐ தொழில்நுட்ப உதவியால் தற்போது வரை பல சாதனைகளும், புதிய கண்டுபிடிப்புகளும் நிகழ்த்தப்பட்டுள்ளன. இந்த வரிசையில் தற்போது காமெட் பிரவுசரும் அறிமுகத்திற்கு வந்துள்ளது.
முற்றிலும் செயற்கை நுண்ணறிவால் இயங்கும் இந்த பிரவுசர், பயனாளர்களுக்கு அதிவேக பிரவுசிங் அனுபவத்தை வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு சைட்பார் தான் காமெட் பிரவுசரில் உள்ள சிறப்பம்சம். இது ஒரே நேரத்தில் பல வேலைகளை அசராமல் செய்கிறது. உதாரணத்திற்கு மின்னஞ்சல் அனுப்புதல், கட்டுரைகளை சுருக்கிக் கொடுத்தல், ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் சந்திப்புகளைப் பதிவு செய்தல் போன்ற பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்து முடிக்கும் வல்லமை இதற்கு உண்டு. மேலும் கட்டுரைகளில் ஏதேனும் திருத்தங்கள் செய்ய வேண்டி இருந்தால், அதையும் காமெட் பிரவுசர் பரிந்துரை செய்யும்.
காமெட் பிரவுசர் கூகுளின் குரோமியம் தளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. இதனால் குரோம் பிரவுசரில் உள்ளது போலவே புக்மார்க் உள்ளிட்ட வசதிகள் இதிலும் கிடைக்கும். அதோடு தகவலைத் தேடும் போது, மற்ற பிரவுசர்கள் போல் பொதுவான தகவல்களை அளிக்காமல், பயனரின் பழக்கவழக்கத்திற்கு ஏற்ப தகவல்களை வழங்கும் தனித்துவமான பிரவுசர் காமெட்.
காமெட் பிரவுசரில் ஒர்க் ஸ்பேஸ் என்ற அம்சம் உள்ளது. இதனால் தேவையான டேப்களை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவற்றை தவிர்த்து விடும். இந்த அம்சத்தால் கணிணியின் வேகம் குறையாமல் இருப்பதோடு, தேவையற்ற குழப்பமும் குறையும்.
ஒரு பொருளை வாங்குவதற்கு முன்பு, அதன் விலையை சரிபார்ப்பது அவசியம். காமெட் பிரவுசர் ஒரு பொருளின் விலை எந்தெந்த வர்த்தக இணையதளங்களில் எவ்வளவு விலை என்பதை ஒப்பிட்டுக் காட்டி விடும். இதன்மூலம் பொருளை வாங்குவது நமக்கு மிகவும் எளிதாகி விடும்.
மொபைல், கணிணி உள்ளிட்ட சாதனங்களில் மேக் ஓஎஸ் மற்றும் விண்டோஸ் ஆகியவற்றுக்கு காமெட் பிரவுசர் சப்போர்ட் செய்யும். காமெட் பிரவுசரைப் பயன்படுத்த பெர்ப்ளெக்சிட்டி ப்ரோ சந்தா தேவை. சந்தா செலுத்திய பிறகு பெர்ப்ளெக்சிட்டி இணையதளத்தில் உள்நுழைந்து காமெட் பிரவுசரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இருப்பினும் ஏர்டெல் பணியாளர்களுக்கு மட்டும் ஓராண்டு சந்தா இலவசமாக கிடைக்கும்.