

வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் நிரப்புதல், மானியம் மற்றும் பிற சேவைகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய, வாடிக்கையாளர்கள் அனைவரும் ஆதார் அடிப்படையிலான இ-கேஓய்சி சரிபார்ப்பை முடிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அந்தபடி, எல்பிஜி (LPG) சிலிண்டர் பெறும் இண்டேன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி கேஸ் வாடிக்கையாளர் அனைவரும் ஆதார் அடிப்படையிலான முக அங்கீகார ‘இ-கேஒய்சி’-யை (eKYC) வரும் ஆகஸ்ட் 15-க்குள் (eKYC சரிபார்ப்பு) முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இறந்தவர்களின் பெயரில் உள்ள கேஸ் இணைப்புகள், ஒரே முகவரியில் இருக்கும் போலி மற்றும் கூடுதல் இணைப்புகளை கண்டறிந்து அவற்றை நீக்குவதே முதன்மை நோக்கமாகும்.
மேலும மானிய விலையில் வீடுகளுக்கு வழங்கப்படும் சிலிண்டர்கள், உணவகங்கள், ஓட்டல்கள் மற்றும் தொழில் சாலைகளுக்கு சட்டவிரோதமாக அதிக விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.'
இதன்படி வரும் 15-ம்தேதிக்குள் கேஒய்சி சரிபார்ப்பை நிறைவு செய்யாத வாடிக்கையாளர்களுக்கு சமையல் எரிவாயுக்கான அரசு மானியம் நிறுத்தப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதை முடிக்காதவர்களுக்கு அடுத்தடுத்த சிலிண்டர் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு இது குறித்து குறுஞ்செய்திகளை அனுப்பி வருகின்றன.
வாடிக்கையாளர்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலமாகவோ அல்லது அருகிலுள்ள கேஸ் ஷோரூமிற்கு நேரில் சென்றோ eKYC-ஐ எளிதாக முடித்துக் கொள்ளலாம்.
இந்தியாவில் உள்ள இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14 கிலோ எடையுள்ள சமையல் கேஸ் சிலிண்டரை தொடர்ச்சியாக விநியோகம் செய்து வருகின்றன. சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.957.50-க்கும், வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.2,906-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் நிரப்புதல், மானியம் மற்றும் பிற சேவைகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய, நுகர்வோர் அனைவரும் ஆதார் அடிப்படையிலான இ-கேஓய்சி சரிபார்ப்பை முடிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இ-கேஒய்சி முடிக்காதவர்கள், அது நிறைவடையும் வரை உள்நாட்டு விலையில் எல்பிஜி சிலிண்டர் பெற தகுதியற்றவர்களாகலாம் என இந்தியன் ஆயில் தெரிவித்துள்ளது. அதேநேரம் ஏற்கனவே, இ-கேஓய்சி சரிபார்ப்பை முடித்தவர்கள் மீண்டும் செய்யத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது
வாடிக்கையாளர்கள் இ-கேஓய்சி சரிபார்ப்பை முடிப்பது எப்படி?
வாடிக்கையாளர்கள் அந்தந்த கேஸ் நிறுவனங்களின் செயலி அல்லது இணையதளம் வாயிலாக இ-கே.ஓய்.சி சரிபார்ப்பை முடிக்கலாம்:
இண்டேன் (Indane) வாடிக்கையாளர்கள் IndianOil ONE செயலி, விநியோக ஊழியர்கள் அல்லது விநியோகஸ்தர் மூலம் இ-கேஒய்சி செய்யலாம்.
பாரத் கேஸ் (Bharat Gas) வாடிக்கையாளர்கள் Hello BPCL செயலி மூலமும், ஹெச்பி கேஸ் (HP Gas) வாடிக்கையாளர்கள் HP Pay அல்லது Aadhaar FaceRD செயலி இ-கேஒய்சி செய்யலாம்.
சிலிண்டர் டெலிவரி செய்ய வரும் ஊழியர்களிடம் உள்ள பிரத்யேக இயந்திரம் மூலமாகவும் உங்கள் கைரேகையைப் பதிவு செய்து இ-கேஒய்சியை முடிக்க முடியும்.
ஆன்லைனில் இ-கேஓய்சி-ஐ முடிக்க தெரியாதவர்கள், சிலிண்டர் விநியோகம் செய்யும் நபர்கள் மூலமாகவோ அல்லது கேஸ் நிறுவனத்திற்கு நேரில் சென்றோ இ-கேஓய்சியை முடிக்கலாம்.
அமெரிக்கா- ஈரான் இடையே ஏற்பட்ட போர் சூழல் காரணமாக சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது. மேலும் சிலிண்டர் முன்பதிவு செய்யும் விதிமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டது.
ஆதார் இ-கேஒய்சி நடைமுறை வெளிப்படைதன்மையை அதிகரிக்கவும், கள்ளச்சந்தையை தடுக்கவும், உண்மையான வாடிக்கையாளர்களுக்கு சிலிண்டர் கிடைப்பதை உறுதி செய்யவும் இ-கேஓய்சி கடுமையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் நீங்கள் ஆகஸ்ட் 15-ம்தேதிக்குள் இ-கேஓய்சி சரிபார்ப்பை முடிக்காவிட்டால், உங்களுக்கு சிலிண்டர் முன்பதிவு செய்வதிலும், உஜ்வாலா திட்டத்தின் கீழ் மானிய விலையில் சிலிண்டர் பெறுவதிலும் சிக்கல் ஏற்படலாம்.
மானிய விலையில் அல்லது குறைந்த விலையில் கேஸ் சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் தகுதியையும் வாடிக்கையாளர்கள் இழக்கலாம். உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு கிடைக்கும் சிலிண்டருக்கும் மானிய தொகை வரமால் போக வாய்ப்புள்ளது.