பேருந்தில் பயணம் செய்த நபர் ஒருவரிடம் 100 ரூபாய் வாங்கிவிட்டு பயணக் கட்டணம் போக 80 ரூபாய் திரும்பத் தராமல் ஏமாற்றிய நடத்துனர் மற்றும் போக்குவரத்து மண்டல மேலாளருக்கு ரூ.8000 அபராதம் விதித்தது ஸ்ரீவில்லிப்புத்தூர் நுகர்வோர் நீதிமன்றம்.
பொதுவாகப் பேருந்தில் சில்லறை இல்லாமல் ஏறினாலே அனைவருக்கும் பயமாகத்தான் இருக்கும். சில கண்டக்டர்களிடம் சில்லறை இல்லையென்று 100ரூ அல்லது 200 ரூ கொடுத்துவிட்டு, மீதிப் பணத்தை வாங்குவதற்குள் ஒரு போராட்டமே நடந்து விடுகிறது. இந்தப் பிரச்சனை பல பேருக்கு இருக்கிறது. அந்தவகையில் கடந்த 2019ம் ஆண்டு சாத்தூரில் இருந்து விருதுநகர் நோக்கி அரசு பேருந்தில் ஜெயபாரதி என்பவர் பயணித்தார்.
அப்போது சரியான சில்லறை இல்லாததால் 100 ருபாய் நோட்டை கண்டக்டரிடம் கொடுத்தார். டிக்கெட் விலை 22 ரூபாய் ஆகும். இதனையடுத்து நடத்துனர் ஜெயபாரதியிடம் 2 ரூபாய் கொடுங்கள் 80 ரூபாயைத் திருப்பித் தருகிறேன் என்று கூறியிருக்கிறார். ஜெயபாரதி இரண்டு ரூபாயை நடத்துனரிடம் கொடுத்துவிட்டு 80 ரூபாயைத் திருப்பிக் கேட்டுள்ளார். அவர் தருகிறேன், தருகிறேன் என்று கூறியே மழுப்பியிருக்கிறார். ஜெயபாரதி இறங்கும் நேரம் வந்தும்கூட நடத்துனர் மீதிப் பணத்தைக் கொடுக்கவில்லை. ஜெயபாரதி இறங்கும் நேரத்தில் பணத்தைத் திருப்பிக் கேட்டபோது பணத்தைக் கொடுக்காமல் தகாத வார்த்தைகளில் திட்டியும் இருக்கிறார். இதனால் மனம் உடைந்துப்போன ஜெயபாரதி ஸ்ரீ வில்லிப்புத்தூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி சக்கரவர்த்தி, “நாகர்கோவில் மண்டலத்திற்கு உட்பட்ட நடத்துனர் எட்வின் மற்றும் மண்டல மேலாளர் ஆகியோர் இணைந்தோ அல்லது தனித்தனியாகவோ டிக்கெட்டுக்கான மீதித் தொகை 80 ரூபாயை ஜெயபாரதிக்குத் தர வேண்டும். அவருக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக ஒரு 5000 ரூபாயும் வழக்குச் செலவுத் தொகை ஒரு 3000 ரூபாயும் வழங்க வேண்டும்" என உத்தரவு பிறப்பித்தார்.