காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் காலமானார்

தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், தமிழிசை சௌந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் காலமானார்.
Kumari Ananthan
Kumari Ananthan
Published on

தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், தமிழிசை சௌந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் காலமானார். அவருக்கு வயது 93. இலக்கியவாதியான இவர் வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல் பாதிப்பு மற்றும் சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்த அவர் சென்னை வானகரத்தில் உள்ள அத்தி இயற்கை மற்றும் ஆராய்ச்சி மருத்துவமனையில் பல்துறை மருத்துவர்கள் குழுவினரின் கண்காணிப்பில் பராமரிக்கப்பட்டு வந்தார். அதன்பிறகு, உடல்நிலை மோசம் அடைந்ததால் அப்போலோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட குமரி அனந்தனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 12.15 மணியளவில் குமரி அனந்தன் உயிர் பிரிந்தது. இதனை அவரது மகளும், பாஜக மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் உறுதி செய்தார்.

இதனையடுத்து, மறைந்த குமரி அனந்தன் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள தமிழிசை சவுந்தரராஜன் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இசை இசை... என்று கூப்பிடும் என் அப்பாவின்... கணீர் குரல்... இன்று காற்றில்.. இசையோடு கலந்து விட்டது....என்று தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியலில் பாராளுமன்றத்தில் முதன் முதலில் தமிழில் பேசியவர் என்ற பெருமை மறைந்த குமரி அனந்தனையே சேரும். இவர் 5 முறை எம்.எல்.ஏ.வாகவும், ஒரு முறை நாகர்கோவில் தொகுதி எம்.பி.,யாகவும் பதவி வகித்துள்ளார்.

தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதியாக இருந்த குமரி அனந்தன் பெருந்தலைவர் காமராஜருடன் இணைந்து பணியாற்றிய பெருமை பெற்றவர்.

சாத்தான் குளம் ராதாபுரம், திருவெற்றியூர் தொகுதிகளில் எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1977-ம் ஆண்டில் நடைபெற்ற லோக்சபா தேர்லிலில் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். மணியாச்சி ரயில் நிலையத்திற்கு வாஞ்சி மணியாச்சி என பெயர் வர காரணமாக இருந்தவர்.

முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர், முன்னாள் இந்திய மக்களவை உறுப்பினர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், தமிழ் இலக்கியங்களில் புலமை பெற்றவர், இலக்கியப் பேச்சாற்றல் மிக்க தமிழ் இலக்கியவாதி என பன்முகத் திறன் கொண்டவர். தமிழில் முதுகலை மற்றும் முனைவர் பட்டங்கள் பெற்றார். சிறிது காலம் தமிழாசிரியராக மதுரையில் பணியாற்றினார்.

இதையும் படியுங்கள்:
12 மணி நேர வேலை மசோதாவில் அரசியல் செய்ய கூடாது - ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்!
Kumari Ananthan

இவர் கலித்தொகை இன்பம், படித்தேன், கொடுத்தேன், நல்லாட்சி தந்த நாயகன் காமராஜ், குமரி அனந்தனின் தமிழ் அமுது, சிந்தனைப் பண்ணையில் பாரதியார், சிந்தனைப் பண்ணையில் பாரதிதாசன் உள்பட 29 நூல்களின் ஆசிரியர்.

தமிழக தலைவர்களில் அதிகமாக பாத யாத்திரை சென்றவர் குமரி அனந்தன் ஆவார். இவர் 1967-ம் ஆண்டு முதல் பல பாத யாத்திரைகளை மேற்கொண்டு வந்தார்.

குமரி அனந்தன் கன்னியாகுமரி மாவட்டம், குமரிமங்கலம் என்ற அகத்தீச்வரத்தில், சுதந்திரப் போராட்டத் தியாகி அரிகிருச்சுணன் - தங்கம்மாள் தம்பதிக்கு முதல் மகனாக 1933 மார்ச் 19-ம் தேதியன்று பிறந்தார். இவருடைய இயற் பெயர் அனந்தகிருட்டிணன். குமரிமங்கலம் அனந்தகிருட்டிணன் பின்னாளில் குமரி அனந்தன் ஆனார். மறைந்த தொழில் அதிபர் காங்., எம்.பி., வசந்தகுமார் இவரது சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது மனைவி பெயர் கிருஷ்ணகுமாரி. இவர்களுக்கு 4 மகள்களும், மகன் ஒருவரும் உள்ளனர். இவரின் மகள் தமிழிசை சௌந்தரராஜன் ஒரு மருத்துவரும், அரசியல்வாதியும், முன்னாள் புதுச்சேரி ஆளுநரும், தெலங்காணா ஆளுநரும் ஆவார்.

மறைந்த குமரி அனந்தன் உடலுக்கு அரசியல் கட்சித்தலைவர்களும், பிரபலங்களும், தொண்டர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:
குமரி அனந்தனுக்கு வீடு வழங்கியது தமிழக அரசு!
Kumari Ananthan

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com