ஒரு கிராமிற்கு ரூ.10,000 அறிவிப்பு ஓகே.. கைல வர்றது எவ்ளோ தெரியுமா? நகைக்கடனில் தொடரும் கெடுபிடிகள்!

கூட்டுறவு நகைக்கடன்: கிராமிற்கு ₹10,000 உயர்த்தியும் முழுத் தொகை கிடைக்காதது ஏன்?
Gold loan waiver
Gold loan waiver
Updated on: 

கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் நகைக்கடன்களுக்கு ஒரு கிராமுக்கு ரூ.10,000 வரை கடன் வழங்கப்படும் என்ற அறிவிப்பு சில தினங்களுக்கு முன் தமிழக அரசு வெளியிட்டது.

இந்நிலையில் இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை; கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் நகைக்கடன்களுக்கு ஒரு கிராமுக்கு ரூ.10,000 வரை கடன் வழங்கப்படும். அல்லது நகைகளின் சந்தை மதிப்பில் 75 சதவீதம் என மாற்றியமைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

இதுகுறித்து கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கூட்டுறவு நிறுவனங்களில் தங்க நகைககளுக்கு இனி கிராமிற்கு ரூ.10,000 வரை கடன் வழங்கப்படும். கடந்த ஆண்டில் நகைக் கடன்களுக்கான அதிகபட்ச வட்டி விகிதம் 12 சதவீத்தில் இருந்து 13 சதவீதமாக உயர்த்தப்பட்டிருந்தது. மேலும், தங்கத்தின் சந்தை மதிப்பில் 75 சதவீதம் அல்லது கிராம் ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ. 7,000 என்ற ரீதியில் கடன் வழங்கப்பட்டு வந்தது.மேலும், 6 மாத கால அவகாசம் கொண்ட கடன்களுக்கு, மாதாந்திர சராசரி சந்தை மதிப்பைக் கணக்கில் கொண்டு 75 சதவீதம் வரை கடன் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், 05.10.2026 நடைபெற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில், நகைக் கடன்கள் தொடர்பாக பின்வரும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.அதன்படி, நகைக் கடன்களுக்கு (Jewel Loan) ஒரு கிராமிற்கான கடன் தொகை அதிகபட்சமாக ரூ. 10,000 வரை அல்லது நகைகளின் சந்தை மதிப்பில் 75 சதவீதம் என மாற்றியமைத்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் (DCCBs) தங்களது சொந்தக் கிளைகள் மூலம் வழங்கும் நகைக் கடன்களுக்கான வட்டிக்கும், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்கள் (PACCS) மூலம் வழங்கப்படும் நகைக் கடன்களுக்கான வட்டிக்கும் இடையே பெரும் வேறுபாடு நிலவி வந்தது.இதனைச் சீரமைக்கும் வகையில், நகைக்கடனுக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் (DCCBs) விதிக்கும் வட்டி விகிதம், அதன் கிளைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் நகைக் கடன் வட்டியை விடக் குறைந்தபட்சம் 1.25 சதவீதம் குறைவாக இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களின் லாப வரம்பு (Margin) 2.25%-க்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த உயர்த்தப்பட்ட கடன் அளவானது, இனி புதிதாக வழங்கப்படும் நகைக் கடன்களுக்கும் மற்றும் ஏற்கனவே பெறப்பட்டு தற்போது புதுப்பிக்கப்படும் (Renewal) நகைக் கடன்களுக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

gold loan
gold loan

பொதுமக்கள் கவனத்திற்கு - நகைக்கடனில் தொடரும் கெடுபிடிகள்:

தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் வழங்கி வரப்படும் நகைக்கடனுக்கான உச்சவரம்பு ஒரு கிராமிற்கு ₹10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ள போதிலும், பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகள் காரணமாக இதற்கான முழுமையான பலனைப் பொதுமக்கள் பெற முடிவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கூட்டுறவு வங்கிகளில் நகையின் மொத்த எடையைக் கணக்கிடும் போது, ஆபரணத் தங்கத்தில் உள்ள கல், அரக்கு, தாலிப்பொட்டு மற்றும் இணைப்புக் கொக்கிகள் போன்ற கூடுதல் எடைகள் முற்றிலும் கழித்து மதிப்பிடப்படுகின்றன. இதனால், பொதுமக்கள் அடமானம் வைக்கும் நகையின் நிகரத் தங்க எடை (Net Weight) கணிசமாகக் குறைந்து, அவர்கள் எதிர்பார்க்கும் கடன் தொகை கிடைப்பதில்லை.

மேலும்,புதிய விதியின்படி, "ஒரு கிராமிற்கு ₹10,000 வரை அல்லது நகைகளின் சந்தை மதிப்பில் 75 விழுக்காடு இதில் எது குறைவோ அதுவே கடனாக வழங்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய தங்க விலையின் அடிப்படையில் 75% கணக்கிடப்படும் போது, பல நேரங்களில் முழுமையாக ₹10,000 கடன் தொகை கைக்குக் கிடைப்பதில்லை.

கடன் ஒப்புதல் அளிக்கப்படும் போது மதிப்பீட்டுக் கட்டணம் (Appraisal charges), காப்பீடு மற்றும் இதர கூட்டுறவுச் சங்கக் கட்டணங்கள் கழிக்கப்படுவதால், நிகரக் தொகை குறைகிறது.

பழைய கடன்களுக்கான வட்டிச் சுமை: ஏற்கனவே வாங்கிய கடனைப் புதுப்பிக்கும் போது (Renewal), புதிய வரம்பான ₹10,000 பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டாலும், முந்தைய கடனுக்கான வட்டி மற்றும் நிலுவைத் தொகையைக் கழித்துக் கொண்டே புதிய தொகை கணக்கிடப்படுகிறது.

எனவே, அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட ₹10,000 நகைக்கடன் சலுகை ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சென்றடையும் வகையில், நகைக் கழிவு எடைக் கணக்கீட்டு முறைகளில் தளர்வுகள் அளிக்கப்பட வேண்டும் என்றும், கடன் வழங்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்தக் கூட்டுறவுத் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முன்பெல்லாம் கூட்டுறவு வங்கிகளில் நகையைக் கொடுத்த அடுத்த 15 நிமிடங்களில் ரொக்கம் வழங்கப்படும். ஆனால் தற்போது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளைப் போல சிபில் ஸ்கோர் மற்றும் பான் கார்டு (PAN Card) கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், கிராமப்புற மக்கள் கடன் பெற முடியாமல் அலைக்கழிக்கப்படுகின்றனர்.கூட்டுறவு வங்கிகளில் நிலவும் இந்த கடும் நிபந்தனைகளைப் பயன்படுத்திக் கொண்டு, அடகு கடைகளுடனும் தனியார் நிதி நிறுவனங்களுடனும் மக்கள் கையேந்தும் சூழல் உருவாகியுள்ளது. அங்கு வட்டி அதிகம் என்றாலும் கழிவுகள் இன்றி உடனடியாகப் பணம் கிடைப்பதால் மக்கள் அங்கு படையெடுக்கின்றனர்.

விவசாயத் தேவைக்காக நகைக் கடன் பெற வரும் விவசாயிகளிடம் சிட்டா, அடங்கல் போன்ற கூடுதல் வருவாய் ஆவணங்கள் கேட்கப்படுவதால், அவசர விதைப்பு மற்றும் உரத் தேவைகளுக்குக் கடன் பெற முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
முதியோர்களுக்கான அரசு சலுகைகள்: மருத்துவச் செலவைக் குறைத்து நிதியைச் சேமிப்பது எப்படி?
Gold loan waiver
இதையும் படியுங்கள்:
சொந்தமாக தொழில் தொடங்க ஆசையா? ரூ.5 கோடி கடன் தரும் வெற்றி மகளிர் திட்டம்..!
Gold loan waiver
logo
Kalki Online
kalkionline.com