

மத்திய பிரதேசத்தில் உள்ள சிந்த்வாரா மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருமல் மருந்தை உட்கொண்ட 20 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் நாட்டையே உலுக்கியது. இந்த வழக்கில் கைதான இருமல் மருந்து உரிமையாளர் ரங்கநாதனுக்குச் சொந்தமான ரூ.2.04 கோடி சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
குழந்தைகள் உயிரிழந்த விசாரணையில் கோல்ட்ரிப் என்ற இருமல் மருந்தை உற்பத்தி செய்தது, தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசன் பார்மா தான் என்பது தெரிய வந்தது. பிறகு நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன் மற்றும் கோல்ட்ரிப் மருந்தைப் பரிந்துரைத்த அரசு மருத்துவர் பிரவீன் சோனி ஆகியோரை காவல துறையினர் கைது செய்தனர்.
சோதனையின் முடிவில் இருமல் மருந்தில் அளவுக்கு அதிகமான கெமிக்கல்ஸ் கலந்ததே குழந்தைகளின் இறப்புக்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டது
இருமல் மருந்தின் உற்பத்தி செலவை குறைக்கவும், லாபத்தை அதிகரிக்கவும் அதிகளவிலான வேதிப் பொருட்களை பயன்படுத்தி இருந்தது விசாரணையில் அம்பலமானது. இதனைத் தொடர்ந்து கோல்ட்ரிப் இருமல் மருந்திற்கு தடை விதிக்கப்பட்டதோடு, ஸ்ரீசன் பார்மா நிறுவனததின் உரிமமும் ரத்து செய்யப்பட்டது. தமிழ்நாடு, மத்திய பிரதேசம், கேரளா, ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலும் இம்மருந்து தடை செய்யப்பட்டது.
அதிகளவிலான வேதிப் பொருட்களால், சிறுநீரகம் செயலிழந்து குழந்தைகள் உயிரிழந்ததால், கோல்ட்ரிப் இருமல் மருந்து உரிமையாளர் ரங்கநாதன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். தரமற்ற மூலப்பொருட்களை உரிய சோதனைகள் இன்றி பயன்படுத்தியதும், மூலப்பொருட்களை ரொக்கமாக சரியான ஆவணமின்றி வாங்கியதும் விரசாரணையில தெரிய வந்தது. மேலும் ஸ்ரீசன் பார்மா நிறுவனததில் தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் ஆண்டுதோறும் சோதனை நடத்தத் தவறியதும் விசாரணையில் அம்பலமானது.
கோலட்ரிப் சிரப் இருமல் மருந்தில் டை-எதிலீன் கிளைகோல் 48.6% பயன்படுத்தப்பட்டிருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வேதிப் பொருளாகும்.
இந்நிலையில் இன்று அமலாக்கத் துறை நடத்திய சோதனையில், ரங்கநாதனுக்குச் சொந்தமான இரண்டு மாடி வீடு உள்பட ரூ.2.04 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டன. இந்த சொத்து முடக்கம் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் செய்யப்பட்டதாக அமலாக்கத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையில் நிறுவனத்தின் நிதி நடவடிக்கைகள் மற்றும் கலப்படம் செய்யப்பட்ட உற்பத்தி தொடர்பான பல்வேறு முக்கிய ஆதாரங்களும கைப்பற்றப்பட்டன.
இருமல் மருந்து விவகாரத்தில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் நடந்திருப்பதாக அமலாக்கத் துறை சோதனையை மேற்கொண்டது. இதனடிப்படையில் ரங்கநாதனுக்கு சொந்தமான 10 இடங்களில் சோதனை செய்யப்பட்டது. இதில் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள இரண்டடுக்கு மாடி வீடு முடக்கப்பட்டுள்ளது.
இனி இருமல் மருந்தை மருத்துவர்கள் அனுமதியின்றி வாங்க முடியாது என்ற முடிவை விரைவில் அமல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. வெகு விரைவில் இதற்கான அறிவிப்பு வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.