

அண்மையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ‘கோல்ட்ரிப்’ இருமல் மருந்தை உட்கொண்ட 24 குழந்தைகள் பலியான சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து இருமல் மருந்தை தயாரித்த நிறுவனத்தின் மீதும், அந்நிறுவனத்தின் உரிமையாளர் மீதும், மத்திய அரசு கடுமையான நடவடிக்கையை எடுத்தது.
இந்நிலையில் இனி இருமல் மருந்தை மருத்துவர் பரிந்துரை இல்லாமல் வாங்க முடியாது என்ற புதிய கட்டுப்பாட்டை அமல்படுத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. வெகு விரைவில் இந்த புதிய கட்டுப்பாடு அமலுக்கு வரவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் இருமல் மருந்தை உட்கொண்ட குழந்தைகள் பலியான செய்தி, நாடு முழுவதும் மிகப்பெரும் பிரச்சினையாக உருவெடுத்தது. மேலும் இந்த சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தி விட்டது. இந்நிலையில் பெற்றோர்கள் யாரும் மருத்துவர் பரிந்துரை இல்லாமல் மருந்தகங்களில் மருந்துகளை வாங்க வேண்டாம் எனவும் அரசு அறிவுறுத்தியது.
ஆங்கில மருந்துகள் அவற்றின் தரம் மற்றும் பக்கவிளைவுக்கு ஏற்ப அட்டவணைப்படுத்தப்பட்டு உள்ளன. அவ்வகையில் இருமல் மருந்து குறைந்த அபாயம் கொண்ட ‘கே’ அட்டவணையில் இடம் பெற்றுள்ளது. இதன் காரணமாக இருமல் மருந்தை மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் தாமாகவே மருந்தகங்களில் வாங்கிச் செல்ல முடியும். ஆனால் மகாராஷ்டிரா சம்பவத்திற்கு பிறகு இருமல் மருந்தை கே அட்டவணையில் இருந்து நீக்க மத்திய மருந்து குழு ஆலோசித்து வருகிறது.
பாரசிட்டமால் மாத்திரைகள், சிறுசிறு காயங்களுக்குப் பயன்படும் பேண்டேஜ், கிரைப் வாட்டர் மற்றும் கிருமி நாசினிகள் உள்ளிட்டவையும் அட்டவணை 'கே'-வின் கீழ் வரிசைப்படுத்தப்பட்டு உள்ளன. இதன்படி கே அட்டவணையில் உள்ள மருந்துகளை பொதுமக்கள் வாங்குவதற்கோ அல்லது மருந்தகங்கள் விற்பனை செய்வதற்கோ, பெரிய அளவில் கட்டுப்பாடுகள் ஏதுமில்லை.
இதன் காரணமாகவே இருமல் மருந்தையும் யாராக இருந்தாலும் எப்போது வேண்டுமானாலும் வாங்கலாம் என்ற சூழல் உள்ளது. இந்நிலையில் இருமல் மருந்தை கே அட்டவணையில் இருந்து நீக்கி விட்டால், இம்மருந்தை வாங்க மருத்துவர்கள் பரிந்துரை அவசியமாகி விடும்.
ஏற்கனவே சில மாநிலங்களில் இருமல் மருந்து விற்பனைக்குப் புதிய கட்டுப்பாடுகள் வந்து விட்டன. இதனை நாடு முழுக்க விரிவுபடுத்த வேண்டும் என மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இதற்கான பரிந்துரை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதற்கு விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பாரக்கப்படுகிறது. அட்டவணை கே-வில் இருந்து இருமல் மருந்து நீக்கப்பட்டால், பொதுமக்களுக்கு மருத்துவர்களின் பரிந்துரைச் சீட்டு இருந்தால் மட்டுமே விற்பனை செய்யப்படும். அதோடு மருந்தாளுநர்களும் இருமல் மருந்தை விற்பனை செய்ய உரிமம் அவசியமாகி விடும்.