
நாட்டில் ரயில்வே துறையை முன்னேற்றுவதில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மின்சார ரயில் மற்றும் அதிவிரைவு ரயல்களின் வரிசையில் மெட்ரோ ரயில் மற்றும் வந்தே பாரத் போன்ற ரயில்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. மேலும் புல்லட் ரயிலுக்கான பணிகளையும் செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஹைட்ரஜன் ரயிலை இயக்குவதற்கான திட்டமும் மத்திய அரசிடம் உள்ளது. இதற்கான சோதனை முயற்சிகளை சென்னையில் உள்ள ஐசிஎஃப் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இன்று சென்னை ஐசிஎஃப் நிறுவனம் நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயிலை இயக்கி சோதனை செய்தது. இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்ததால், இந்தியன் ரயில்வே துறை மகிழ்ச்சியில் உள்ளது.
உலகில் சீனா, ஜெர்மனி, ஸ்வீடன் மற்றும் பிரான்ஸ் ஆகிய 4 நாடுகளில் மட்டுமே ஹைடர்ஜன் ரயில் இயக்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவின் ஹைட்ரஜன் ரயில் சோதனை வெற்றியானது உலகளவில் மிகவும் கவனிக்கத்தக்கதாக பார்க்கப்படுகிறது.
பெட்ரோல், டீசல் மற்றும் மின்சாரம் என எதுவும் இல்லாமல் ஹைட்ரஜன் எரிபொருளைக் கொண்டு மணிக்கு 140கி.மீ. வேகத்தில் சீறிப்பாயும் தன்மை கொண்டது ஹைட்ரஜன் ரயில். இந்த ரயில் பயன்பாட்டுக்கு வந்துவிட்டால் உலகளவில் ஹைட்ரஜன் ரயிலை இயக்கிய 5வது நாடு இந்தியா என்ற பெருமையை நம் தேசம் அடையும்.
உலகின் மற்ற நாடுகள் 500 முதல் 600 குதிரைத் திறன் கொண்ட ஹைட்ரஜன் ரயிலையே இயக்கி வருகின்றன. இந்நிலையில் இந்தியா தனது முதல் ஹைட்ரஜன் ரயிலை 1,200 குதிரைத் திறனுடன் இயக்கவுள்ளது ரயில்வே துறையில் மிகப்பெரிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
மத்திய ரயில்வே துறை அமைச்சரான அஷ்வினி வைஷ்ணவ் சென்னை ஐசிஎஃப் செய்த சாதனையை வெகுவாக பாராட்டியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “சென்னை ஐசிஎஃப் நிறுவனம் நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயிலை இயக்கி வெற்றி கண்டுள்ளது. ஹைட்ரஜன் வாயு மூலம் ரயில் என்ஜின் இயக்கப்பட்டது. இந்த என்ஜினில் ரயில் பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளன. இது ரயில்வே துறையின் மிகப்பெரிய சாதனை. 1,200 குதிரைத் திறனை உள்ளடக்கிய ஹைட்ரஜன் ரயிலை இந்தயா தயார் செய்து வருகிறது. உலகில் ஹைட்ரஜன் எரிபொருளைக் கொண்டு ரயில்களை இயக்கும் நாடுகளின் பட்டியலில் விரைவில் இந்தியாவும் இடம் பிடிக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு ஹைட்ரஜன் ரயிலைத் தயாரிக்கு ரூ.80 கோடி வரை செலவாகும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2023-24 நிதியாண்டில் மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் 35 ஹைட்ரஜன் ரயிலை உருவாக்க சுமார் ரூ.2,800 கோடியை ஒதுக்கீடு செய்தது. சென்னை ஐசிஎஃப் உருவாக்கும் முதல் ஹைட்ரஜன் ரயில் வடக்கு ரயில்வேயின் புதுடெல்லி பிரிவுக்கு வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.