விவாகரத்துக்கு பின் மனைவியிடம் ஜீவனாம்சம் கோர கணவருக்கு உரிமை உண்டா? சட்டம் சொல்வதென்ன?

ஒருவர் தனது திருமணத்தை முறித்துக்கொள்ள விரும்பினால், அவ்வாறு செய்வதற்கு அவருக்கு சட்டப்பூர்வ உரிமை உண்டு.
Divorce
Divorces...
Updated on

விவாகரத்து என்பது திருமணமான தம்பதியினர் பிரிந்து செல்வதற்கான ஒரு செயல்முறையாகும். அதாவது ஒரு திருமணத்திற்கு முறையான முடிவை வழங்கும் சட்டப்பூர்வமான செயல்முறையாகும். ஒருவர் தனது திருமணத்தை முறித்துக்கொள்ள விரும்பினால், அவ்வாறு செய்வதற்கு அவருக்கு சட்டப்பூர்வ உரிமை உண்டு. மேலும், அவர் தனது வாழ்க்கைத் துணையிடமிருந்து ஜீவனாம்சத்தையும் கோரலாம். இந்தியாவில், ஜீவனாம்சத்தை நிர்வகிக்கும் ஐந்து முக்கிய சட்டங்கள் உள்ளன. அவற்றுள் 1955-ஆம் ஆண்டின் இந்து திருமணச் சட்டம், முஸ்லிம் தனிநபர் சட்டம், 1869-ஆம் ஆண்டின் இந்திய விவாகரத்துச் சட்டம், 1936-ஆம் ஆண்டின் பார்சி திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டம், மற்றும் 1955-ஆம் ஆண்டின் சிறப்புத் திருமணச் சட்டம் ஆகியவை அடங்கும்.

விவாகரத்து செய்ய நினைக்கும்போது சமூகத்தில் ஏற்படும் அவமானம், குடும்ப கௌரவம் மற்றும் பாரம்பரிய நம்பிக்கைகள் ஆகியவை மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. பலரும் தங்களின் தனிப்பட்ட மகிழ்ச்சியை விட சமூகத்தின் பார்வைக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். இருப்பினும், திருப்தியற்ற அல்லது ஆரோக்கியமற்ற மற்றும் கொடுமையான உறவுகளில் தொடர்வதை விட, விவாகரத்து பெற்று பிரிந்து செல்வது ஒருவரின் மனநலனுக்கும் பாதுகாப்புக்கும் சிறந்தது என்பதை சமூகம் தற்போது புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளது.

விவாகரத்து என்பது தோல்வி அல்ல, மாறாக ஒரு புதிய தொடக்கம் என்பதையும், அதற்கான சட்ட மற்றும் மனநல ஆலோசனைகள் எளிதாகக் கிடைப்பதையும் சமூகம் ஏற்றுக்கொள்கிறது. சில சூழ்நிலைகளில் விவாகரத்து சில கடினமான சூழ்நிலைகளில் மன அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அவசியமான ஒரு முடிவாகப் பார்க்கப்படும் விழிப்புணர்வு இப்போது அதிகரித்து வருகிறது.

விவாகரத்திற்குப் பிறகு ஒரு கணவன் தன் மனைவிக்கு அல்லது சட்டப்படி தகுதியுள்ள நபருக்கு வழங்கும் நிதி உதவி ஜீவனாம்சம் (Alimony / Maintenance) எனப்படும்.

இது பிரிய நேரும்போது பொருளாதாரத்தில் பின்தங்கியவர் தன் வாழ்க்கைத் தரத்தை தக்கவைக்க உதவும் சட்டப்பூர்வமான வழியாகும். அதாவது கணவனைப் பிரிந்து வாழும் மனைவி தன் சுயமரியாதையுடன் வாழவும், பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்படாமல் இருக்கவும் இது உதவுகிறது.

ஜீவனாம்சம் பொதுவாக மாதாந்திர தவணைகளாகவோ அல்லது ஒரே முறை செலுத்தப்படும் மொத்தத் தொகையாகவோ (One-time lumpsum settlement) நீதிமன்ற உத்தரவுப்படி வழங்கப்படுகிறது.

இதில் இருவரின் சம்பளம் மற்றும் சொத்து மதிப்புகளை நீதிமன்றம் சரிபார்க்கும். கணவரின் நிகர மாத வருமானத்தில் சுமார் 25 சதவீதம் வரை ஜீவனாம்சமாக வழங்க இந்திய உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதுள்ளது. சிலசமயம் மனைவி ஏற்கனவே நல்ல முறையில் சம்பாதித்தாலோ அல்லது போதிய வருமானம் மற்றும் சொத்துகள் இருந்தாலோ நீதிமன்றம் ஜீவனாம்சம் வழங்க மறுக்கலாம்.

பாரம்பரியமாக, பணத்திற்காகத் தங்கள் கணவர்களைச் சார்ந்திருந்த மனைவிகளே ஜீவனாம்சத் தொகையில் பெரும்பகுதியைப் பெற்றனர்.

ஜீவனாம்சம்|பராமரிப்புத் தொகை
ஜீவனாம்சம்|பராமரிப்புத் தொகைAI Image

இருப்பினும், நிலைமை மாறிவிட்டது, இப்போது, ​​அவரவர் குறிப்பிட்ட சூழ்நிலைகளின் அடிப்படையில், கணவன்களும் மனைவிடம் ஜீவனாம்சம் கோரலாம். அதாவது இந்தியச் சட்டப்படி குறிப்பிட்ட சில சூழ்நிலைகளில் கணவர்கள் தனது மனைவியிடமிருந்து ஜீவனாம்சம் கோர உரிமை உண்டு.

விவாகரத்து வழக்கில் மனைவியிடம் இருந்து கணவர் ஜீவனாம்சம் (பராமரிப்புச் செலவு) கோர சட்டரீதியாக உரிமை உண்டு. இந்து திருமணச் சட்டம், 1955-ன் பிரிவு 24 மற்றும் 25-ன் கீழ் கணவரும் பராமரிப்புத் தொகை அல்லது நிரந்தர ஜீவனாம்சம் பெற மனு தாக்கல் செய்யலாம். அதாவது பாலின வேறுமின்றி கணவன் அல்லது மனைவி இருவரில் யார் வேண்டுமானாலும் ஜீவனாம்சம் கோரலாம்.

இந்து திருமணச் சட்டம் பிரிவு 24 (வழக்கு நடக்கும் காலத்தில் இடைக்கால ஜீவனாம்சம்) மற்றும் பிரிவு 25 (நிரந்தர ஜீவனாம்சம்) ஆகிய பிரிவுகள் பால் பேதமின்றி இருபாலருக்கும் பொருந்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

கடுமையான நோய், உடல்நலக் குறைவு, உடல் ஊனம் அல்லது நிரந்தர உடல் ஊனம் காரணமாக வேலை செய்து சம்பாதிக்க முடியாத சூழலில் உள்ள கணவர்களுக்கு நீதிமன்றம் ஜீவனாம்சம் வழங்க உத்தரவிடும். கணவருக்கு சொந்தமாக எந்தவொரு நிலையான வருமானமும் இல்லை என்பதையும், பிழைப்பு நடத்த வழியில்லை என்பதையும் நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!மனைவி சம்பாதித்தாலும் கணவர் ஜீவனாம்சம் தர வேண்டும்..!
Divorce

அதேசமயம் மனைவி நல்ல வருமானம் ஈட்டுபவராகவோ அல்லது கணவரை விட அதிக சம்பளம் பெறுபவராகவோ இருக்க வேண்டும்.

தனக்குச் சுயாதீனமான வருமான ஆதாரம் இல்லை என்பதை நிரூபிக்க முடிந்தால், வழக்கு நிலுவையில் இருக்கும்போது மனைவி மட்டுமல்லாது கணவரும் ஜீவனாம்சம் கோர பிரிவு 24 அனுமதிக்கிறது என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், உடல் அல்லது மன குறைபாடு காரணமாக தன்னால் சம்பாதித்து தனது குடும்பத்தை ஆதரிக்க முடியவில்லை என்பதை கணவர் நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். கணவர் உடல்நலம் குன்றாதவராகவும், மனநலம் குன்றாதவராகவும், அவரது தொழில் தோல்வியடைந்த ஒரே காரணத்திற்காகவும், அவருக்கு எந்த ஜீவனாம்சமும் வழங்க முடியாது, ஏனெனில் அது சட்டத்தின் பிரிவு 24-இன் நோக்கத்திற்கு முரணானது.

அதேசமயம் கணவரால் சம்பாதிக்க முடிந்தும் பணம் சம்பாதிக்கவில்லை என்றால், அவர் தனது மனைவியிடமிருந்து ஜீவனாம்சம் கோர முடியாது.

அதேபோல் கடந்த 2017-ம் ஒரு வழக்கில் வேலை செய்ய இயலாமை இல்லாத நிலையில் கணவருக்குப் பராமரிப்பு வழங்குவது சோம்பலை ஊக்குவிக்கும் என்று கேரள உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
கணவர் இறந்துவிட்டால் மாமனாரிடம் ஜீவனாம்சம் கோர முடியுமா? நீதிமன்றம் சொல்வதென்ன..?
Divorce

அவர் நிரந்தரமாக வேலை செய்யவும் சம்பாதிக்கவும் இயலாதவர் என்பதை நிரூபித்த பின்னரே, கணவர் பராமரிப்பு கோர முடியும் என்று தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உடல் ஆரோக்கியத்துடன் வேலைக்குச் சென்று சம்பாதிக்கக் கூடிய தகுதி இருந்தும், சோம்பேறித்தனமாக இருக்கும் கணவர்களுக்கு நீதிமன்றங்கள் ஜீவனாம்சம் வழங்க மறுத்துவிடும்.

இரு தரப்பினரின் நிதிச் சூழல், வருமானம், மற்றும் குடும்பச் சூழ்நிலைகளை ஆராய்ந்தே நீதிமன்றம் இறுதி உத்தரவை வழங்கும்.

இருப்பினும், கவலைக்குரிய முக்கிய விஷயங்களில் ஒன்று என்னவென்றால், இந்து தனிநபர் சட்டங்களைத் தவிர வேறு எந்தத் திருமண அல்லது விவாகரத்துச் சட்டத்திலும் கணவருக்கான ஜீவனாம்சத்திற்கு விதிகள் இல்லை.

இதையும் படியுங்கள்:
ஜீவனாம்சம் குறித்து நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு : சமரசம் செய்தாலும் ஜீவனாம்சம் கேட்கலாம்..!
Divorce

மதச்சார்பற்ற சிறப்புத் திருமணச் சட்டம் கூட, கணவருக்கு ஜீவனாம்சம் கோரும் உரிமையை வழங்குவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com