

உலகம் முழுக்க கடந்த 2019 ஆம் ஆண்டு பரவிய கொரோனா வைரஸ், பல்வேறு வடிவங்களில் உருமாறி பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது. நல்லவேளையாக இதற்கு மாற்று மருந்து கண்டுபிடிக்கப்பட்டதால், இதன் பாதிப்பில் இருந்து பொதுமக்களை சுகாதாரத் துறை பாதுகாத்தது. மேலும் கொரோனா வைரஸை எதிர்கொள்ளும் அளவிற்கு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பொதுமக்கள் தயாராகத் தொடங்கினர்.
இந்நிலையில் அவ்வபோது கொரோனா வைரஸ் தனது வடிவத்தில் இருந்து உருமாறி, பரவுவதாக செய்திகள் வலம் வந்து கொண்டிருந்தன. தற்போது தமிழ்நாட்டில் பருவகால நோயாகவே கொரோனா வைரஸ் பரவுவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது தமிழ்நாட்டில் பனிக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பருவ கால மாற்றத்தால் உடல் வலி, இருமல், காய்ச்சல் மற்றும் சளி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்த பாதிப்புகள் உருமாறிய கொரோனா வைரஸால் தான் ஏற்படுகிறது என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் இதற்கு பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை எனவும், தகுந்த நேரத்தில் சாதாரண சிகிச்சை மேற்கொண்டாலே போதும் எனவும் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக பருவகால மாற்றத்தால் பொதுமக்களுக்கு சிறுசிறு உடல் நலக் கோளாறுகள் ஏற்படுவது வழக்கமானது தான். இருப்பினும் இம்முறை பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள உடல் பாதிப்புகளுக்கு உருமாறிய கொரோனா வைரஸ் தான் காரணம் எனத் தெரிய வந்துள்ளது.
ஆகையால் கூட்ட நெரிசலான இடங்களுக்கு பொதுமக்கள் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும், பொதுவெளியில் முக கவசத்தை பயன்படுத்த வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அறிவுரைத்துள்ளது.
தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் வீரியமற்றது என்பதால், பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அலட்சியமாக இருப்பதை தவிர்த்து, சாதாரண சிகிச்சைகளை மேற்கொள்வது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலுக்கு காரணமான கோவிட்-19 வைரஸ், பல்வேறு வடிவங்களில் உருமாற்றமடைந்து சமூகத்தில் இரண்டறக் கலந்து விட்டது.
இதன் காரணமாகவே பருவகாலத் தொற்றுநோயாக கொரோனா வைரஸ், பொதுமக்கள் மத்தியில் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், “கடந்த 2020 முதல் 2023 ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக இருந்தது. அதன் பின்னர் இதன் தீவிரம் குறைந்து, பருவ கால தொற்றுநோயாகவே மாறிவிட்டது. பருவ கால தொற்று நோய் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளித்தால், மூன்று நாட்களிலேயே குணமடைந்து விடுவார்கள். ஒரு சிலருக்கு காய்ச்சலுக்குப் பிறகும் இருமல் இருக்கக்கூடும். இதற்கும் சாதாரண சிகிச்சையே போதுமானது.
தற்போது பரவி வரும் வீரியமற்ற கொரோனா வைரஸ்க்கு பொதுமக்கள் யாரும் பயப்படத் தேவையில்லை. முக கவசம் அணிந்து, தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு, வழக்கமான சிகிச்சையை எடுத்துக் கொண்டாலே போதுமானது” எனத் தெரிவித்தனர்.
மழைக்காலங்களில் எலி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் அதிகரித்து வந்த நிலையில், தற்போது கொரோனா வைரஸ் பரவலும் அதிகரித்து வருகிறது. இருப்பினும் பருவ கால தொற்று நோய்களிலிருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள, தண்ணீரைக் காய்ச்சி குடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.