திமுக கூட்டணியில் சலசலப்பு : காங்கிரஸ், தேமுதிகவுக்கு கூடுதல் சீட்.. எங்களுக்கு ஏன் குறைவு..? - சிபிஎம் கேள்வி!

dmk alliance
dmk alliance
Published on

இன்றோ , நாளையோ தேர்தல் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு உள்ள நிலையில் , தமிழகத்தின் தேர்தல் களம் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது. தமிழகத்தின் முக்கிய கூட்டணியான அதிமுகவில், இதுவரை தொகுதி பங்கீடு பற்றிய பேச்சு வார்த்தைகள் எதுவும் நடைபெறவில்லை. ஆனால் , திமுகவில் கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தைகள் தினசரி நடைபெற்று வருகின்றன.

இதுவரை திமுக கூட்டணியில் காங்கிரஸ் , தேமுதிக , மதிமுக , மமக , ஐயூஎம்எல், கொமதேக போன்ற கட்சிகளுக்கு ஏற்கனவே தொகுதி பங்கீடுகள் நிறைவடைந்துள்ளன. திமுக கூட்டணியில் 22 க்கும் மேற்பட்ட கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை ஒதுக்குவதில் கடும் சிக்கலை சந்தித்து வருகிறது. காங்கிரஸ் கட்சிக்கு கூடுதலாக 3 தொகுதிகள் கொடுக்கப்பட்டதால், தற்போது திமுகவிற்கு தொகுதிப் பங்கீட்டில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலை என்னவாக இருக்கும்? என்ற கேள்வி எழுந்துள்ளது. பாஜக பங்கேற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் கட்டாயம் இணைவதற்கு வாய்ப்பில்லை. அதே நேரம் அவர்கள் திமுக கூட்டணியில் அதிக தொகுதிகளை எதிர்பார்க்கின்றனர். கடந்த சில நாட்களாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வந்த கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தைகளில், கம்யூனிஸ்ட் கட்சி ஈடுபட்டு வந்தது. ஆயினும் இந்த பேச்சுவார்த்தைகளில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு முன்பு கூட்டணியில் போட்டியிட்ட தொகுதிகளை விட, குறைவான தொகுதிகளையே இந்த முறை திமுக ஒதுக்க முன்வந்துள்ளது.

இந்நிலையில் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்(CPIM) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் ,செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய கருத்துக்கள் கூட்டணியில் உள்ள சலசலப்பை வெளியே கொண்டு வந்துள்ளது. ​" இந்த சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலக்கத் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதுதான் எங்கள் கட்சியின் விருப்பமாக உள்ளது. ஆனால், திமுக தரப்பிலோ கூட்டணிக்குள் பல புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் நீங்கள் எதிர்பார்க்கும் தொகுதியை கொடுப்பது கடினமாக இருக்கிறது" என்று கூறியுள்ளதாக சண்முகம் தெரிவித்திருந்தார்.

புதிய கட்சிகள் இணைந்ததினால் ஏற்படும் சிக்கல்களை நாங்களும் உணர்கிறோம். ஆனால், மற்ற கட்சிகளுக்கு வழங்கப்படும் முன்னுரிமையை எங்களுக்கும் வழங்க வேண்டும். "இதே நெருக்கடிக்கு மத்தியில்தான் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் தொகுதிகளை வழங்க திமுக முன் வந்துள்ளது. அதேபோல் தேமுதிகவிற்கும் அதிக இடங்களை ஒதுக்கி உள்ளனர். அவர்களுக்கெல்லாம் அதிக இடங்களை ஒதுக்கும்போது , நீண்ட காலமாகவே திமுகவுடன் தோழமையுடன் பயணிக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு மட்டும் தொகுதிகளை எதற்காக குறைக்க வேண்டும்? என்று பெ.சண்முகம் கேள்வி எழுப்பினார்.

ஏற்கனவே இரண்டு கட்டங்களாக நடைபெற்ற திமுக – கம்யூனிஸ்ட்(சிபிஎம்) பேச்சுவார்த்தைகள் முன்றாம் கட்டமாக இன்று (மார்ச் 14) நடைபெற இருந்தது. இந்நிலையில் , நாளை தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த திமுக மும்முரமாக உள்ளதால் , இன்று கம்யூனிஸ்ட் கட்சியுடன் நடைபெற இருந்த பேச்சுவார்த்தை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கம்யூனிஸ்ட்(சிபிஎம்) கட்சியின் கருத்துகள் அனைத்தும் திமுக தலைமையிடம் கூறப்பட்டு சாதகமான முடிவுகள் வரும் என்று இடதுசாரிகள் எதிர்பார்க்கின்றனர். கூட்டணியில் புதியவர்கள் சேரும்போது , பழையவர்களுக்கு சங்கடம் ஏற்படுவது அரசியலிலும் நீடிக்கிறது.

இதையும் படியுங்கள்:
#BREAKING : ஒரு யூனிட்டிற்கு ரூ.2 மானியம்..! – சிலிண்டர் தட்டுப்பாட்டால் மானியம் அறிவித்த தமிழக அரசு..!
dmk alliance

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com