

20-ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஏற்பட்ட பொருளாதார புரட்சி என்றே கிரெடிட் கார்டுகளை அழைக்கலாம். பிளாஸ்டிக் பணம் என்று அழைக்கப்படும் கிரெடிட் கார்டு உண்மையில் ஒரு கத்தியைப் போன்றது. சரியாக பயன்படுத்தத் தெரியவில்லை என்றால் கையை கிழித்துக் கொள்ள நேரிடும்.
கையில் ரொக்கம் இல்லாவிட்டாலும், அவசரத் தேவைகளுக்கு கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம். கார்டுகளை பெறுவதைப் போன்றே, அதனை பயன்படுத்துவதும் முக்கியமானது என்று கூறுவது இதனால் தான். அவசர தேவைக்கு கடன் வாங்குவதற்கு பதிலாக கிரெடிட் கார்டை ஒரு 'தயார் நிலையில் இருக்கும் தேர்வாக' பயன்படுத்திக் கொள்ளலாம். நாற்பது நாட்களுக்கு வட்டி ஏதும் இன்றி, உங்களின் நிதிசார் தேவைகளுக்காக இந்த கார்டுகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.
கிரெடிட் கார்டுகளை வழங்கும் நிதி நிறுவனங்கள் நிர்ணயிக்கும் காலக்கெடுவுக்குள் பணத்தை திருப்பிச் செலுத்தும் போது நீங்கள் அபராதம் கட்ட வேண்டியதில்லை. அதாவது வாங்கிய பணத்தைச் செலுத்த தோராயமாக 20 முதல் 50 நாட்கள் வரை வட்டி இல்லாத அவகாசம் (Grace period) கிடைக்கும். அதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால் குறிப்பிட்ட தேதிக்குள் முழுப் பணத்தையும் செலுத்தத் தவறினால், அதிக வட்டி வசூலிக்கப்படும்.
நீங்கள் அதிகளவு கிரெடிட் கார்டை பயன்படுத்துபவராக இருந்தால் இந்த செய்தி உங்களுக்காக தான். முன்னணி தனியார் துறை வங்கிகளான இண்டஸ்இண்ட் பேங்க் (IndusInd Bank) மற்றும் யெஸ் பேங்க் (YES Bank) இன்று முதல் (ஜூன் 15-ம்தேதி) தங்களது கிரெடிட் கார்டு விதிகளில் அதிரடி மாற்றங்களைக் கொண்டு வருகின்றன. தேவையற்ற கூடுதல் கட்டணங்களைத் தவிர்க்கவும், அதிகப்படியான ரிவார்டு பலன்களைப் பெறவும் உங்கள் செலவு முறையை இப்போதே மறுபரிசீலனை செய்வது அவசியம். வங்கி விதிகளில் ஏற்படும் இந்த மாற்றங்களை முன்கூட்டியே தெரிந்துகொள்வது உங்கள் நிதி நிலையைச் சீராக வைத்திருக்க உதவும். வாங்க இப்போ என்னவென்ன மாற்றங்கள் வரவுள்ளது என்று பார்க்கலாம்.
புதிய விதியின்படி, நீங்கள் முழுத் தொகையையும் செலுத்தாமல், 'குறைந்தபட்ச நிலுவைத் தொகையை' மட்டும் செலுத்தினால், மீதமுள்ள தொகைக்கு வட்டி தொடர்ந்து கணக்கிடப்படும்.
அதுமட்டுமல்லாமல், நீங்கள் நிலுவையில் இருக்கும்போது செய்யும் எந்தவொரு புதிய கொள்முதலுக்கும் வட்டி விதிக்கப்படும். தொடர்ச்சியாக இரண்டு மாதங்களுக்கு நீங்கள் கட்டணத்தை முழுமையாகச் செலுத்தும் வரை, வட்டி இல்லாத காலத்தின் பலனைப் பெற முடியாது.
வங்கி தற்போது எரிபொருள் பரிவர்த்தனைகளுக்கான வரம்பைக் குறைத்துள்ளதால் இனி, ஸ்டாண்டர்ட் கார்டுகளில் ஒரு மாதத்தில் பெட்ரோல் மற்றும் டீசலுக்காக ரூ.30,000-க்கு மேல் செலவு செய்தால், நீங்கள் கூடுதலாக 1% ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.
முன்னதாக, இந்த வரம்பு ரூ.50,000ஆக இருந்த நிலையில் தற்போது அந்த வரம்பை ரூ.30,000 ஆக குறைந்துள்ளது. இருப்பினும், பிரீமியம் கார்டுகளுக்கு இந்த வரம்பில் எந்த மாற்றமும் இல்லை. வணிக ரீதியான பயன்பாட்டைக் குறைத்து, தனிநபர் பயன்பாட்டை ஊக்குவிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு மாதத்தில் வாடகைக் கார்கள், ரெயில்கள், பேருந்துகள் அல்லது சுங்கச்சாவடிகளுக்காக ரூ.40,000-க்கு மேல் செலவு செய்தால், அதன் மீது 1% மற்றும் ஜிஎஸ்டி விதிக்கப்படும். இருப்பினும், விமானப் பயணச்சீட்டு முன்பதிவுகளுக்கு இந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
வங்கி அந்நிய செலாவணி மாற்று (DCC) கட்டணத்தை, அதாவது டைனமிக் கரன்சி கன்வெர்ஷன் (DCC) கட்டணத்தை, இண்டஸ்இண்ட் வங்கி பெருமளவில் உயர்த்தியுள்ளது. அட்டையின் வகையைப் பொறுத்து, 1 சதவீத கூடுதல் கட்டணம் + ஜிஎஸ்டி அல்லது 2 சதவீத கூடுதல் கட்டணம் + ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என்று இண்டஸ்இண்ட் வங்கி தெரிவித்துள்ளது. அதாவது ஸ்டாண்டர்ட் கார்டுகளுக்கு, இந்தக் கட்டணம் 1%-லிருந்து 2%-ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டு வணிகர்களுக்கு இந்திய ரூபாயில் கட்டணம் செலுத்தும்போது இந்தக் கட்டணம் பொருந்தும்.
உங்கள் கட்டணத்தைச் செலுத்துவதில் நீங்கள் சிறிது தாமதம் செய்தாலும், இனிமேல் நீங்கள் ஒரு பெரிய அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். நீங்கள்ரூ.501 முதல் ரூ.1,000 வரை செலுத்த வேண்டியிருந்தால், ரூ.350-க்கு பதிலாக ரூ.500 அபராதம் விதிக்கப்படும். அதேபோல், நீங்கள் ரூ.5,001 முதல் ரூ.10,000 வரை செலுத்த வேண்டியிருந்தால், நீங்கள் ரூ.750 அபராதம் செலுத்த வேண்டும். எனவே, வாடிக்கையாளர்கள் உங்கள் கட்டணத்தைச் செலுத்தும் நேரத்தில் கவனமாக இருங்கள்.
அதேபோல் யெஸ் பேங்க் (YES Bank) தனது பல கார்டுகளுக்கு 'செலவு அடிப்படையிலான' லவுஞ்ச் வசதியை அறிமுகப்படுத்துகிறது. அதாவது, இனி லவுஞ்ச் வசதியைப் பயன்படுத்த முந்தைய காலாண்டில் ஒரு குறிப்பிட்ட குறைந்தபட்ச தொகையைச் செலவு செய்திருக்க வேண்டும்.
ஆக்சிஸ் வங்கியும் சமீபத்தில் தனது கிரெடிட் கார்டுகளுக்கான டிராவல் எட்ஜ் வெகுமதித் திட்டத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மேம்படுத்தலை வெளியிட்டிருந்தது.
கடந்த மே மாதத்தில், HDFC வங்கியும், ஏப்ரல் மாதத்தில் எஸ்பிஐ வங்கியும் பல்வேறு மாற்றங்களை அறிவித்திருந்த நிலையில் தற்போது இண்டஸ்இண்ட் பேங்க் மற்றும் யெஸ் பேங்க்கும் (YES Bank) அதிரடி மாற்றங்களை அறிவித்திருப்பது வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடையச்செய்துள்ளது.
இந்திய வங்கிகள் தங்களது செயல்பாட்டுச் செலவுகளைச் சமாளிக்க மேற்கொண்டு வரும் பொதுவான மாற்றங்களின் ஒரு பகுதியாகவே இது பார்க்கப்படுகிறது. இந்த மாற்றங்களைப் புரிந்துகொள்வதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்குச் சாதகமான பேமெண்ட் முறைகளைத் தேர்வு செய்ய முடியும்.