

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ எனப்படும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), எஸ்பிஐ கிரெடிட் கார்டை (SBI Credit Card) பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அடுத்த மாதம் அதாவது மே 1-தேதி முதல் சில முக்கியமான மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளதாக அறிவித்துள்ளது.
எனவே, எஸ்பிஐ கார்டு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் இதுகுறித்த தகவல்களை முழுவதுமாக தெரிந்துகொண்டு கூடுதல் செலவுகளை தவிர்ப்பது மிகவும் முக்கியம்.
தாமதக் கட்டணங்கள் (LPC): எஸ்பிஐ வங்கி இதற்கு முன்புவரை தனது வாடிக்கையாளர்களிடம் ரூ.500 வரையிலான நிலுவை தொகைக்கு தாமதக்கட்டணம் (LPC)வசூலிக்கப்படவில்லை. ஆனால் இப்போது, ரூ.100-க்கு மேல் மற்றும் ரூ.500 வரையிலான நிலுவைத் தொகைகளுக்கு, ரூ.100 தாமத கட்டணம் விதிக்கப்படும். ரூ.500-க்கு மேல் மற்றும் ரூ.1,000 வரையிலான நிலுவைத் தொகைகளுக்கு, தாமத கட்டணம் ரூ.500 வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளது. அதேசமயம் உங்கள் நிலுவைத் தொகை ரூ.1,000-ஐ தாண்டினால், தாமதக் கட்டணங்களில் எந்த மாற்றமும் இருக்காது என்று தெளிவுபடுத்தியுள்ளது.
கடைசி தேதிக்குள் குறைந்தபட்ச நிலுவை தொகையையாவது செலுத்த தவறும் வாடிக்கையாளர்களுக்கு, தாமத கட்டணம் விதிக்கப்படும் என்றும் தொடர்ச்சியாக இரண்டு பில்லிங் சுழற்சிகளுக்கு இந்த குறைந்தபட்ச கட்டணத்தை வாடிக்கையாளர் செலுத்தத் தவறும்பட்சத்தில், கூடுதலாக ரூ.100 அபராதம் சேர்க்கப்படும் என்று கூறியுள்ளது. அதுமட்டுமின்றி நீங்கள் நிலுவை தொகையை செலுத்தும் வரை ஒவ்வொரு மாதமும் இந்த கூடுதல் தாமத கட்டணம் தொடரும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
BPCL SBI அட்டை கட்டண விலக்கு: எஸ்பிஐ அறிவித்துள்ள மற்றொரு முக்கிய மாற்றமானது BPCL எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயனர்களை பாதிக்கிறது. BPCL SBI கிரெடிட் கார்டின் ரூ.499 வருடாந்திரக் கட்டணம், வரும் மே 1-ம்தேதி முதல் ஆண்டுச் செலவு ரூ.1 லட்சத்தை எட்டினால் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும்; இது முன்பு நிர்ணயிக்கப்பட்ட ரூ.50,000 என்ற வரம்பிலிருந்து உயர்த்தப்பட்டுள்ளது. சுருக்கமாக செல்வதென்றால், அதே கட்டண தள்ளுபடி பலனை பெற, வாடிக்கையாளர் இனிமேல் ஆண்டுக்கு இரு மடங்கு அதிகமாக செலவு செய்ய வேண்டியிருக்கும்.
பரிசுப் புள்ளிகள் காலாவதியாதல்: 'கேஷ்பேக்' (Cashback) சலுகைகள் மூலம் பெறப்படும் பரிசுப் புள்ளிகள், அந்தத் தொகை கணக்கில் வரவு வைக்கப்பட்ட 90 நாட்களுக்குள்ளும்; 'உடனடித் தள்ளுபடி' (Instant Discount) சலுகைகள் மூலம் பெறப்படும் புள்ளிகள் 120 நாட்களுக்குள்ளும் காலாவதியாகிவிடும்.
பிற சமீபத்திய SBI அறிவிப்புகள்:
IMPS கட்டணங்கள்: பிப்ரவரி 2026 முதல், ரூ.25,000-க்கு அதிகமான மதிப்புள்ள ஆன்லைன் IMPS பரிவர்த்தனைகளுக்கு SBI சேவைக்கட்டணங்களை வசூலிக்கிறது.
தோல்வியுற்ற பரிவர்த்தனைகளுக்கான இழப்பீடு: SBI-இன் கொள்கை ஆவணத்தின்படி, தோல்வியுற்ற ATM பரிவர்த்தனைக்கான தொகையை 5 நாட்களுக்குள் மீண்டும் வாடிக்கையாளரின் கணக்கில் வரவு வைக்கத் தவறினால், தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.100 இழப்பீடாக வழங்கப்படும்.
எஸ்பிஐ அறிவித்துள்ள இந்த மாற்றங்கள், நீங்கள் பணம் செலுத்துவதில் ஏற்படுத்தும் சிறிய தாமதங்கள் கூட இனிமேல் கூடுதல் கட்டணங்களுக்கு வழிவகுக்கும் என்பதுடன் கட்டண விலக்குகளை பெற அதிகமாக செலவு செய்ய வேண்டி இருக்கும் என்பதையும் உணர்த்துகிறது. எனவே தேவையற்ற செலவுகளை தவிர்க்க உங்கள் எஸ்பிஐ கிரெடிட் கார்டை சரியாக மற்றும் முழுமையாக பயன்படுத்துவது மட்டுமே சிறந்த வழியாக இருக்கும்!