

கச்சா எண்ணெய் விவகாரம் உலகம் முழுவதற்கும் ஒரு முக்கிய பிரச்சினையாகத் தொடர்கிறது. ஈரான்-அமெரிக்கா இடையிலான மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளதால், உலகளவில் கச்சா எண்ணெய் விலை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று (ஜூலை 14) பிரெண்ட் ரக கச்சா எண்ணெய் விலை 3.33% உயர்ந்து, ஒரு பீப்பாய் 86 டாலரை கடந்ததால், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என அஞ்சப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 2020 ஆம் ஆண்டுக்கு பிறகு நேற்று (ஜூலை 14)ஒரே நாளில் சுமார் 10% அளவுக்கு உயர்வை சந்தித்துள்ளது. இதன் காரணமாக, இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
ஹார்முஸ் நீரிணையில் ஈரானிய கப்பல்களை முற்றுகையிடுவதாக ட்ரம்ப் அறிவித்ததை தொடர்ந்து, பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 9.62% உயர்ந்து ஒரு பேரல் 83.32 டாலர் ஆகவும், WTI கச்சா எண்ணெய் விலை 9.4% உயர்ந்து ஒரு பேரல் 78.14 டாலர் ஆகவும் அதிகரித்துள்ளது.
ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுப்போர் தாக்குதல் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி 3 மாதங்களுக்கு ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டது. இதனால் உலகநாடுகளில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
பல நாடுகளில் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. அமைதி பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஹார்முஸ் நீரிணை திறக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, கடந்த மாதம் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட தற்காலிக போர்நிறுத்த உடன்படிக்கை, தற்போதைய மோதல்களால் முற்றிலும் முறியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஹார்முஸ் நீரிணையில் சென்ற வணிகக் கப்பல் ஒன்றின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை அடுத்து மீண்டும் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியது.
இதற்குப் பதிலடியாக, ஈரானில் உள்ள ஏவுகணை தளங்கள், விமானப் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ஆயுதக் கிடங்குகளைக் குறிவைத்து அமெரிக்க ராணுவம் தொடர்ந்து மூன்றாவது நாளாக வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இதனால் மீண்டும் ஹார்முஸ் நீரிணை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் இதற்கு முன் இவ்வாறு செய்தபோது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை (Oil Purchases) ஒரு பீப்பாய்க்கு 120 டாலராக உயர்ந்திருந்தது.
அமெரிக்க-ஈரான் மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளதாலும், ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் மூடப்பட்டதாலும், பிரென்ட் கச்சா எண்ணெய் விலை ஏற்கனவே உயர்ந்துள்ளது. இந்த நிலைமை தொடர்ந்தால், சில நாட்களில் ஒரு பீப்பாய் 100 டாலரை நோக்கி அது உயரக்கூடும். எரிவாயு விலைகளும் அதற்கேற்ப உயரும் என்று PwC இந்தியாவின் எண்ணெய், எரிவாயு, எரிபொருட்கள் மற்றும் வளங்கள் பிரிவின் தலைவர்மனஸ் மஜும்தார் கூறியுள்ளார்.
இதற்கிடையே ஈரானுக்கு துணை நிற்கும் வகையில் யெமன், வளைகுடா பகுதியில் மிக முக்கியமான கடல்வழி பாதையான பாப் அல்-மண்டேப் நீரிணையை (Bab al-Mandeb Strait) முடக்கும் திட்டத்தில் இறங்கியுள்ளது. இந்த நீரிணை அமெரிக்க கண்டத்தில் இருந்து ஆசிய நாடுகளுக்கு வேகமான வர்த்தக பாதையாக இருக்கிறது.
சவுதி அரேபியா தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் ஹர்முஸ் மற்றும் பாம் அல் மண்டெப் ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில் மூடிவிடுவோம் என யெமன் நாட்டின் அன்சருல்லா இயக்கத்தின் அரசியல் குழு உறுப்பினர் முகமது அல்-ஃபரா தெரிவித்துள்ளார்.
முகமது அல்-ஃபரா கூறியபடி, அமெரிக்கா ஈரான் மீதும், சவுதி அரேபியா யெமன் நாட்டின் மீது தாக்குதல் நடத்தினால் இரு வழித்தடங்களும் முடக்கப்படும். இதனால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 200 டாலர் வரையில் உயரும், இதனால் உலக நாடுகளின் பொருளாதாரம் வர்த்தகம் என அனைத்தும் மொத்தமாக முடங்கும் அபாயம் உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.
உலகின் கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் (LNG) சுமார் 20% நீரிணை வழியாகவே செல்கிறது. கச்சா எண்ணெய் தற்போது 81 டாலருக்கு வர்த்தகம் செய்யப்படுவதால், பெட்ரோல் விலை 109 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதுவே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 200 டாலராக உயர்ந்தால் கட்டாயம் பெட்ரோல் விலை 220-230 ரூபாய் வரையில் உயரும் அபாயம் ஏற்படும்.
மீண்டும் தொடங்கிய போர் பதற்றத்தால், பெட்ரோல், டீசல் விலை நேற்று முன்தினம் மீண்டும் உயர்ந்தது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 1.69 ரூபாய் உயர்ந்து, லிட்டர் ரூ.109.46-க்கும், டீசல் விலை லிட்டருக்கு 1.71 ரூபாய் உயர்ந்து ரூ.101.26-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலை ஒரே நேரத்தில் உயர்ந்ததால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இந்த விலை உயர்வு வரும் நாட்களில் தொடரும் என்றே கணிக்கப்பட்டுள்ளதால் சாமானிய மக்கள் கவலையடைந்துள்ளனர்.