

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மாநில அரசியலில் தொடர்ந்து பரபரப்பான மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் தவெகவை நோக்கி நகர்ந்து வருவது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசல் மற்றும் தேர்தல் தோல்விகள் காரணமாக முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட பல முக்கிய தலைவர்கள் ஒவ்வொருவராக கட்சித்தாவலில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் அதிமுகவில் இருந்து சமீபத்திய நாட்களில் முன்னாள் அமைச்சர்கள் எம்.சி. சம்பத், என்.ஆர். சிவபதி, கடம்பூர் சி. ராஜு, மற்றும் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் உள்பட முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் உட்பட சுமார் 300-க்கும் மேற்பட்டோர் அடுத்தடுத்து தவெகவில் இணைந்துள்ளனர்.
அதனை தொடர்ந்து கடந்த ஜூன் 10-ம்தேதி யாரும் எதிர்பார்க்காத திருப்பமாக, அதிமுக முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மத்திய கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான பெஞ்சமின் திமுகவில் இணைந்து அரசியல் களத்தை அதிரவிட்ட நிலையில் நேற்று அதிமுகவில் கொள்கை பரப்பு துணை செயலாளராக இருந்த நடிகை கௌதமி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது அதிமுகவிற்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கட்சித் தலைமையின் மீதுள்ள அதிருப்தி, எடப்பாடி பழனிசாமியின் சர்வாதிகாரப் போக்கு மற்றும் உட்கட்சிப் பூசல்கள் காரணமாக இவர்கள் விலகியதாகத் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தேர்தல் தோல்வியைச் சந்தித்தபோது, அதற்கான பொறுப்பைத் தானே ஏற்றுக்கொண்டார். ஆனால் தற்போதைய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தோல்விக்கான காரணங்களை இன்னும் தேடிக்கொண்டே இருக்கிறார். தோல்விக்கான பொறுப்பை ஏற்காமல் பிற காரணங்களைச் சுட்டிக்காட்டுவது கட்சியை மேலும் பலவீனப்படுத்தியுள்ளது.
அதிமுகவில் மூத்த தலைவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கப்படுவதில்லை. கட்சிக் கூட்டங்களில் பொதுச்செயலாளர் மட்டுமே பேச அனுமதிக்கப்படுகிறார். மற்ற நிர்வாகிகளின் கருத்துகள் புறக்கணிக்கப்படுகின்றன. மேலும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் பணம் மற்றும் செல்வாக்கு கொண்டவர்களுக்கு மட்டுமே தேர்தல் வாய்ப்புகள் வழங்கப்படுவதாகவும், கட்சிக்காக நீண்டகாலமாக உழைத்தவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று விலகியவர்கள் கூறியுள்ளனர்.
எடப்பாடி பழனிசாமியின் சர்வாதிகார அணுகுமுறையால்தான் அதிமுக தொடர்ந்து தேர்தல் தோல்விகளைச் சந்தித்து வருகிறது. அதிமுகவை வழிநடத்த வேண்டிய தலைமைப் பண்பு தற்போதைய தலைமையிடம் இல்லை என்பதாலேயே பல நிர்வாகிகளும் தொண்டர்களும் விரக்தியடைந்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் சண்முகம் உட்பட பல முக்கிய மூத்த தலைவர்கள், எடப்பாடி பழனிசாமி தலைமையின் கீழ் கட்சியின் வாக்கு வங்கி குறைந்து வருவதாகவும், சர்வாதிகாரப் போக்கு நிலவுவதாகவும் பகிரங்கமாகத் தெரிவித்துள்ள நிலையில், கட்சியை மறுசீரமைக்கும் பணியில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். மாவட்ட வாரியாக நிர்வாகிகளை சந்தித்து கருத்துக்களை கேட்டு வருகிறார்.
அந்த வகையில், நிர்வாகிகள் இடையே நடந்த கூட்டத்தில், கட்சியின் எதிர்காலம் மற்றும் புதிய தலைமுறைக்கு பொறுப்புகள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசப்பட்டது. தமிழக அரசியலில் விஜய், உதயநிதி ஸ்டாலின், அண்ணாமலை என்று களம் மாறி இருப்பதால், இளம் தலைவரின் அவசியத்தை அதிமுக உணர்ந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
அப்போது சில நிர்வாகிகள், எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் பழனிசாமியை அதிகாரப்பூர்வமாகக் கட்சிக்குள் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, இளைஞரணி செயலாளர் அல்லது தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் போன்ற முக்கிய பொறுப்புகளில் ஒன்றை வழங்கினால், இளம் தலைமுறையினரை அதிமுகவுடன் இணைக்க முடியும் என்று அவர்கள் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.
தற்போது அரசியல் களத்தில் இளைஞர்களின் பங்கு அதிகரித்து வருவதால், அதிமுகவிலும் புதிய முகங்கள் முன்னிலைப்படுத்து வகையில் மிதுனுக்கு ஒரு பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்ததாக தெரிகிறது. ஆனால் தனக்கு அதில் விருப்பம் இல்லை என்றும், இந்த விவகாரம் குறித்து மேலும் யாரும் பேச வேண்டாம் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், துணைப் பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி உள்ளிட்ட சிலர் மிதுன் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி தற்போது தனது மகன் அரசியலில் வருவதற்கு விருப்பம் இல்லை என்று தெரிவித்திருந்தாலும், அவர் தான் கேபி முனுசாமி போன்றவர்கள் மூலம் இதுபோன்ற கருத்துகளை பேசவிட்டு மகனை கட்சிக்குள் கொண்டு வரலாமா? வேண்டாமா? என கட்சியினர் இடையே பல்ஸ் பார்க்கிறார் என்றும், ஆதரவு இருந்தால் சேர்த்துக் கொள்ளலாம், எதிர்ப்பு வந்தால் பின்வாங்கி விடலாம் என நினைத்திருப்பதாக அதிமுகவை சேர்ந்த சிலர் கருந்து தெரிவித்துள்ளனர்.
மிதுன் பழனிசாமி கடந்த 10 ஆண்டுகளாக எடப்பாடியின் நிழலிலேயே வளர்ந்தவர். அவரின் திறமைகள் என்ன என்று கூட அதிமுகவினருக்கு தெரியாது. இதனால் மிதுன் பழனிசாமி வந்தாலும், அதிமுகவை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர முடியுமா என்ற விவாதங்களும் தொடங்கி இருக்கின்றன.
இதனிடையே, தன் மகன் மிதுன் பழனிசாமியை அரசியலுக்குக் கொண்டுவரவும், கட்சியை ஒரு குடும்பத்தின் பிடியில் கொண்டுசெல்லவும் எடப்பாடி பழனிசாமி நாடகம் ஆடுவதாக அதிமுக மூத்த தலைவர் சிவி சண்முகம் கடுமையாக விமர்சித்திருந்தார். கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் மூத்த தலைவர்களைப் புறக்கணித்துவிட்டு, தனது மகன் மிதுன் பழனிசாமியை அரசியலுக்குக் கொண்டுவரும் நோக்கில் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நாடகங்களை அரங்கேற்றி வருகிறார்.
கனவுலகத்தில் இருந்து இபிஎஸ் முதலில் வெளியே வரவேண்டும். தொண்டர்களால் உருவான இயக்கம், தற்போது ஒரு குடும்பத்தின் பிடிக்குள் அதிமுக சென்று கொண்டிருக்கிறது. ஈபிஎஸ் தலைமையில் அதிமுக சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் தோல்வியை சந்தித்துள்ளது. சீட்டுக்கட்டு போல கட்சி சரிவை சந்தித்துள்ளது. கேள்வி எழுப்பியதால் தொடங்கப்பட்ட கட்சியில் தற்போது கேள்வி கேட்கக்கூடாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான போக்குகளுக்கு எதிராக சி.வி. சண்முகம் வெளிப்படையாகக் குரல் கொடுத்து வருவது, அதிமுகவில் மீண்டும் உட்கட்சிப் பூசலைத் தீவிரப்படுத்தியுள்ளது.