
பிளஸ்2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பலரும் கல்லூரியில் எந்தப் படிப்பை படிக்க வேண்டும் என கிட்டத்தட்ட உறுதி செய்து இருப்பார்கள். ஆன்லைனில் கல்லூரி சேர்க்கைக்கும் விண்ணப்பித்து இருப்பார்கள். இருப்பினும் ஒருசில மாணவர்கள் தாங்கள் விரும்பிய படிப்பிற்கு இன்னமும் விண்ணப்பிக்காமல் இருக்கின்றனர். அவ்வகையில் சட்டப் படிப்பில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பை வழங்கி இருக்கிறது தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் (TNDALU).
இதன்படி, சட்டக் கல்லூரிகளில் 3 ஆண்டுகளுக்கான சட்டப் படிப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பானது ஆர்வமுள்ள மாணவர்களுக்கு கூடுதல் நேரத்தை வழங்கவும், விண்ணப்ப செயல்முறையை எளிதாக்கவும் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள சட்டக் கல்லூரிகள் பலவும் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ளன. இந்தக் கல்லூரிகளில் 2025-2026 சட்டப் படிப்பிற்கான சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஜூலை 25 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துடன் இணைந்திருக்கும் அனைத்து சட்டக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டப் பள்ளிகள் அனைத்திலும் சட்டப் படிப்பு சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 3 ஆண்டுகள் எல்எல்பி மற்றும் 3 ஆண்டுகள் எல்எல்பி (ஹானர்ஸ்) சட்டப் படிப்பிற்கான மாணவர்கள் சேர்க்கைக்கு ஜூலை 25 ஆம் தேதி, மாலை 5:45 மணி வரை விண்ணப்பிக்கலாம். சட்டத் துறையில் ஆர்வமுள்ள மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் இந்த அரிய வாய்ப்பைப் தவறாது பயன்படுத்திக் கொள்ளுங்கள். மேலும், www.tndalu.ac.in என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்”.
தகுதி மற்றும் விண்ணப்பக் கட்டணம் உள்ளிட்ட மற்ற விவரங்கள் ஆன்லைனில் கொடுக்கப்பட்டுள்ளன. முன்னதாக மாணவர் சேர்க்கை தேதி முடிவடைந்த நிலையில், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று பல்கலைக்கழகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கூடுதல் நேரத்தின் மூலம் மாணவர்கள் விண்ணப்பத்தில் செய்யும் தவறுகளைத் தவிர்த்து, சரியாக விண்ணப்பிக்க ஏதுவாக இருக்கும்.
சட்டப் படிப்பிற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியாக மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கல்விச் சான்றிதழ்கள், பிளஸ்2 மதிப்பெண் பட்டியல் மற்றும் அடையாள அட்டை உள்ளிட்ட தேவையான ஆவணங்களை மாணவர்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்கு முன்பு வழிகாட்டுதல்களை நன்றாக படித்துப் பார்க்கும்படி மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.