

டெல்லி, அரியானா மற்றும் உத்திரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே பணிமூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக அதிகாலை நேரங்களில் வாகன ஓட்டிகள் பலரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டுச் சென்றாலும் பனிமூட்டத்தால் எதிர்வரும் வாகனங்களும், பாதையும் சரியாக தெரிவதில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று அதிகாலை உத்திரபிரதேசத்தின் மதுரா மாவட்டத்திலுள்ள டெல்லி - ஆக்ரா விரைவு சாலையில் கடுமையான பனிமூட்டம் காரணமாக, பேருந்துகள் அடுத்தடுத்து மோதிக் கொண்டதால், விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 7 பேருந்துகள் மற்றும் 3 கார்கள் தீப்பற்றி எரிந்தன.
இந்த விபத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 25 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பனிமூட்டம் குறையும் வரை, அதிகாலைப் பயணத்தை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
கடுமையான பனிமூட்டத்தால் பாதை மட்டுமல்ல, அருகில் வரும் வாகனங்கள் கூட தெரியவில்லை என ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் டெல்லி - ஆக்ரா விரைவு சாலையில் அதிகாலை நேரத்தில் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டதில், முதலில் ஒரு பேருந்தில் மட்டும் தீப்பிடித்தது. இந்தத் தீ அடுத்த சில நிமிடங்களிலேயே மற்ற பேருந்துகளுக்கும் பரவியது. விபத்து நடந்த சிறிது நேரத்திலேயே தீயணைப்பு வாகனங்களும், ஆம்புலன்ஸ்களும் அப்பகுதிக்கு விரைந்தன. விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த விபத்தில் சில வாகனங்கள் முழுமையாக எரிந்துள்ளதால், பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதிலும் சிக்கல் நீடித்து வருகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை 4 மணி அளவில் இந்த விபத்து ஏற்பட்டது என உயிர்த்துளித்த பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “விபத்து நடக்கும் போது அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தோம். முதலில் ஒரு பேருந்து மற்றொரு பேருந்தின் மோதும் போது சத்தம் ஏற்பட்டதில் சிலர் கண்விழித்தனர். ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே பேருந்து பற்றி கொண்டது. கடுமையான பனிமூட்டம் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டது” என அவர் தெரவித்தார்.
தற்போது சம்பவ இடத்தின் தீயை அணைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர் தீயணைப்பு வீரர்கள். இந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்த நிலையில், காயமடைந்த 25-க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து மதுரை மாவட்ட போலீசார் கூறுகையில், “பனிமூட்டம் அதிகரித்து காணப்படுவதால், எதிர்வரும் வாகனங்கள் சரியாக தெரியவில்லை. இதனால் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன. இந்த விபத்தில் 7 பேருந்துகள் மற்றும் 3 கார்கள் முழுவதுமாக எரிந்து விட்டன. இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களை அடையாளம் காணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்துள்ளனர்.