ஈரானைச் சேர்ந்த பிரபல பாடகருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக பிரபலங்கள் சர்ச்சைகளில் சிக்கிக்கொள்வர். பொது இடங்களில் சட்டவிரோதமாக பேசியோ அல்லது கருத்துக்களை கூறியோ சர்ச்சைகளில் சிக்கிக்கொள்வர். ஒன்றிரண்டு முறைக்கு பின்னர் அவர்களே கருத்துக்களை பொது இடங்களில் பகிர்வதை குறைத்துக்கொள்வர். ஆனால், இங்கு ஈரானில் ஒரு பாடகர் தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கிக்கொண்ட நிலையில், தற்போது அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆம்! 37 வயதான பாடகர் அமீர் உசைன் மக்சவுத்லூ அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டார். ஈரானின் இளைய தலைமுறையினரின் அரசியல் மற்றும் சமூக அம்சங்களைப் பற்றி வெளிப்படையாக பேசி வந்தார். இவற்றில் சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டு வந்த இவர், சட்டத்தில் இருந்து தப்பித்தான் வந்தார். ஆனால், நபிகள் நாயகத்தை அவமதித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்குத் தொடரப்பட்டது. ஈரான் ஒரு இஸ்லாமிய நாடு என்பதால், இங்கு நபிகள் நாயகம் பற்றி அவமதித்து பேசியது பெரும் குற்றமாக கருதப்படும்.
இதோடு நிறுத்திக்கொள்ளாமல், அவர் மேலும் சில சர்ச்சைகளில் மாட்டிக்கொண்டார். அதாவது விபச்சாரத்தை ஊக்குவிப்பது மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்வது உள்ளிட்ட வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.
இத்தனை வழக்குகளில் சிக்கி வந்த இவர் தேடப்பட்டு வந்தார். ஒவ்வொருமுறையும் சர்ச்சையில் மாட்டும்போதும், தப்பிச் சென்றுக் கொண்டே இருந்தார். 2018 முதல் துருக்கியின் இஸ்தான்புல்லில் இருந்தார். பின்னர், துருக்கிய போலீசார் அவரை டிசம்பர் 2023 இல் ஈரானுக்கு நாடு கடத்தினர்.
பின்னர் இவர் மீதான வழக்குகள் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. தெய்வ நிந்தனை வழக்கில், பாடகர் அமீர் ஹொசைன் மக்சூத்லூ குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பு மேல்முறையீடு செய்யப்பட்டது. அதன்பின்னரே பாடகருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசாங்கம் வாதிட்டது. இந்த வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு மரண தண்டனை விதித்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆனால், இது இறுதியானது இல்லை என்றும், இதனை எதிர்த்து மேல் முறையீடு செய்யலாம் என்றும் கூறப்பட்டிருக்கிறது.