நின்ற இதயத்தில் மீண்டும் துடித்த உயிர்: புதிய நுட்பத்தால் பலருக்கு மறுவாழ்வு..!
பொதுவாக சிகிச்சையில் இருப்பவர் மூளைச்சாவு அடைந்து, இதய துடிப்பு இருக்கும்போதுதான் உறுப்பு தானத்திற்காக உள்ளுறுப்புகள் அறுவை சிகிச்சை செய்து எடுக்கப்படும். அதேபோல் ஒருவர் இறந்த பின்பு, குறிப்பிட்ட நேரத்திற்குள் உறுப்புகளை எடுக்காவிட்டால் அதை பயன்படுத்த முடியாது. இந்நிலையில் உறுப்புகள் செயலிழந்தவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் உடல் உறுப்பு தானத்திற்காக டெல்லியில் உள்ள பிரபல மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் இறந்த பெண்ணின் உடலில் ரத்த ஓட்டத்தை உண்டாக்கி ஓர் அரிய மற்றும் அற்புதமான சாதனையை செய்து இருக்கிறார்கள்.
டெல்லியில் உள்ள கீதா சாவ்லி என்ற 55 வயதான பெண்மணி மோட்டார் நியூரான் (Motor Neuron Disease) என்ற நோயால் பாதிக்கப்பட்டு கை, கால்கள் செயலிழந்த நிலையில், துவாரகா பகுதியில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மறுநாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தான் இறந்த பிறகு உடல் உறுப்புகளை தானம் செய்ய வேண்டும் என கீதா சாவ்லி தெரிவித்து இருந்தார்.
பொதுவாக, சிகிச்சையில் இருப்பவர் மூளைச்சாவு அடைந்து, இதய துடிப்பு இருக்கும்போதுதான் உறுப்பு தானத்திற்காக உள்ளுறுப்புகள் அறுவை சிகிச்சை செய்து எடுக்கப்படும்.
ஆனால் கீதா சாவ்லியின் இதய துடிப்பு நின்று, ரத்த ஓட்டம் அடங்கி அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு விட்டதால் டாக்டர்கள் குழுவினர் அவருடைய உடல் உறுப்பு தான விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக, நார்மதர்மிக் ரீஜினல் பெர்பியூஷன் (என்.ஆர்.பி.) எனப்படும் அரிய மற்றும் கடினமான மருத்துவமுறையை பயன்படுத்தி வயிற்றுப்பகுதியில் உள்ள உறுப்புகளை மட்டும் அகற்ற முடிவு செய்தனர்.
அதன்படி அவரது இதயம் செயலிழந்து ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு எக்ஸ்ட்ரா கார்போரியல் மெம்பிரேன் ஆக்சிஜனேட்டரை (ECMO) பயன்படுத்தி நார்மதர்மிக் ரீஜினல் பெர்ஃபியூஷன் (NRP) எனப்படும் அரிய மருத்துவ முறைபடி அவரது வயிற்று பகுதியில் இரத்த ஓட்டத்தை மருத்துவர்கள் மீண்டும் தொடங்கினர். இவ்வாறு செய்வதால் அவரது வயிற்று பகுதியில் உள்ள உறுப்புகளை செயலிழக்கவிடாமல் செய்து அவற்றை பாதுகாப்பாக எடுத்து தானம் செய்ய முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இதன்மூலம் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களை உயிர்ப்பு தன்மையுடன் வைத்து அறுவை சிகிச்சை மூலம் அவற்றை அகற்றி எடுத்தனர்.
அதன்பிறகு கீதா சாவ்லியிடம் இருந்து தானமாக பெறப்பட்ட கல்லீரல் 48 வயது ஆணுக்கும், இரண்டு சிறுநீரகங்கள் இரண்டு முதியவர்களுக்கும் பொருத்தப்பட்டதன் மூலம் அவர்கள் மறுவாழ்வு பெற்றுள்ளனர். இதுதவிர கீதா சாவ்லியின் கண் மற்றும் தோலும் தானமாக கொடுக்கப்பட்டது.
இறந்த உடலில் ரத்த ஓட்டத்தை உண்டாக்கி உறுப்பு தானம் பெற்றது ஆசிய கண்டத்திலேயே இதுதான் முதன்முறை என ஆஸ்பத்திரி தலைவர் டாக்டர் ஸ்ரீகாந்த் ஸ்ரீனிவாசன் கூறினார். மேலும், இறந்த ஒருவரின் இரத்த ஓட்டம் நின்ற பிறகு மீண்டும் அதனை தொடங்கும் மருத்துவ தொழில்நுட்பம் வெற்றிப் பெற்றுள்ளதன் மூலம் இந்தியாவில் உடல் உறுப்புகள் தானம் பல மடங்கு அதிகரிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
உடல் உறுப்பு தானம் என்பது, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் பலரின் உயிரைக் காப்பாற்றும் ஒரு உன்னதமான செயலாகும். இது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் ஏற்படும் உறுப்பு பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய உதவுகிறது.
தமிழ்நாட்டில், உடல் உறுப்பு தானம் செய்தவர்களுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி, உறுப்பு தானம் செய்த கொடையாளர்களின் தியாகத்தை போற்றும் வகையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் 'தியாகச் சுவர்கள்' அமைக்கப்படுகின்றன. மேலும் அரசு சார்பில் அவர்களுக்கு மரியாதை செலுத்தப்படுகிறது.
2024-ம் ஆண்டில் மூளைச்சாவுக்குப் பிறகு மொத்தம் 1,128 பேர் உறுப்பு தானம் செய்திருந்த நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் 268 பேர் மூளைச்சாவு அடைந்த பிறகு உறுப்பு தானம் செய்துள்ளனர். இது முந்தைய ஆண்டை விட 90 சதவீதம் அதிகம். உலகளவில் இந்தியா உறுப்பு தானத்தில் 8-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. உலகளவில், ஒவ்வொரு ஆண்டும் 130,000 க்கும் அதிகமான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன என்று உலக சுகாதார அமைப்பு (WHO) கூறுகிறது.

