

உச்சநீதிமன்றம், வாடகைத்தாரரை வெளியேற்றும் நடவடிக்கைகளில் நில உரிமையாளர்களுக்கு என்ன உரிமைகள் உள்ளது என்பதை தெளிவுபடுத்தும் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.
மும்பை, நாக்வாடாவில் உள்ள காமதிபுரா வணிக வளாக கட்டிடத்தின் உரிமையாளர் நியாயமான தனிப்பட்ட தேவையை மேற்கோள் காட்டி, தனது மருமகளின் தொழில் தேவைக்காக அங்கே வாடகைக்கு இருந்தவரை கடையை காலி செய்ய சொன்னார். ஆனால் அந்த வாடகைத்தாரர் காலி செய்ய மறுத்ததை தொடர்ந்து அவரை காலி செய்யக் கோரி கட்டிடத்தின் உரிமையாளர் மும்பை கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கில்.. வாடகைக்கு இருந்தவரை காலி செய்ய சொல்லி கீழ் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து வாடகைத்தாரர் அந்த தீர்ப்பை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர, உயர்நீதிமன்றம் கீழ் நீதிமன்றங்களின் தீர்ப்புகளை ரத்து செய்ததுடன் வாடகைக்கு இருந்தவர் அங்கேயே இருக்கலாம் என்றும் தீர்ப்பு வழங்கியது.
இதனால் விரக்தியடைந்த கட்டிடத்தின் உரிமையாளர் உச்சநீதிமன்றத்தில் கதவை தட்ட, அவரின் மேல்முறையீடு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான வாடகைத்தாரர் தரப்பு வழக்கறிஞர், உரிமையாளருக்கு சொந்தமான வணிக வளாக கட்டிடத்தின் 2-து மற்றும் 3-வது தளங்களில் காலியிடங்கள் உள்ளநிலையில், காலிசெய்ய சொல்லும் கடைக்கு பதிலாக அவற்றை பயன்படுத்தலாம் என்று வாதிட, அதற்கு உரிமையாளர் தரப்பு வழக்கறிஞர் கடுமையாக மறுத்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி, விஜய் பிஷ்னோய் அடங்கிய அமர்வு, கட்டிடத்தின் உரிமையாளர் தரை தளத்தில் உள்ள கடைக்குப் பதிலாக மேல் மாடி குடியிருப்பு இடத்தைப் பயன்படுத்த வேண்டும் என்ற வாடரைத்தாரரின் கருத்துக்கு எதிராக தீர்ப்பளித்தது. மேல் தளம் குடியிருப்புக்கு இயல்புடையது என்றும் ஆனால் தரைத் தளம் வணிக ரீதியாக பொருத்தமானது என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
வணிகத்திற்கான தேவைகள் வேறுபட்டவை மற்றும் நீதிமன்றங்கள் அவற்றை மறுபரிசீலனை செய்யக்கூடாது என்றும் மறுஆய்வு அதிகார வரம்பை மீறி, ஆதாரங்களை நுணுக்கமாக ஆராயவில்லை என்று மும்பை உயர் நீதிமன்றத்தின் அணுகுமுறையை உச்ச நீதிமன்றம் குற்றஞ்சாட்டியது.
உயர்நீதிமன்றம் ஆவணங்களையும் ஆதாரங்களையும் மிக நுணுக்கமாக ஆய்வு செய்யவில்லை என்று விமர்சனம் செய்த உச்சநீதிமன்றம், கீழ் நீதிமன்ற உத்தரவுகள் சட்டவிரோதமாகவோ அல்லது அதிகாரமற்றதாகவோ இருந்தால் மட்டுமே அதை நீக்க வேண்டும் எனவும் தெளிவுபடுத்தியது.
ஒரு கடையின் அல்லது வீட்டின் உரிமையாளர் தனது வீட்டை ஏதாவது ஒரு உண்மையான காரணத்திற்காக பயன்படுத்த நினைத்தால் அதை தடுக்க வாடகைதாரருக்கு எந்த உரிமை இல்லை என்றும், வீட்டு உரிமையாளர் தனது உண்மையான தேவையை நிரூபித்தால், அதை தடுக்க வாடகைதாரருக்கு அல்லது குத்தகைதாரருக்கு எந்த வித உரிமையும் இல்லை என நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
ஒரு குறிப்பிட்ட சொத்து உண்மையிலேயே தேவை என்பதை ஒரு சொத்தின் உரிமையாளர் நிரூபித்தவுடன், மாற்று தங்குமிடத்தை பரிந்துரைக்க வாடகைத்தாரருக்கு எந்தவிதமான உரிமையும் இல்லை என்று கூறி, சுமார் 50 ஆண்டுகளாக ஒரு சொத்தில் வசித்து வந்த வாடகைத்தாரரை வெளியேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
கட்டிடத்தின் உரிமையாளருக்குச் சாதகமாக தீர்ப்பு வந்தபோதும், சுமார் 50 ஆண்டுகளாக வாடகைக்கு வசித்தவரை கருத்தில் கொண்ட உச்சநீதிமன்றம், வளாகத்தை காலி செய்ய 2026 ஜூன் 30-ம் தேதி வரை, அதாவது 6 மாத காலம் அவருக்குக் கால அவகாசம் வழங்கியதுடம், சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது.
நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட நிபந்தனைகள்
குத்தகைதாரர் ஒரு மாத காலக்கெடுவிற்குள் அனைத்து வாடகை நிலுவைத் தொகையையும் செலுத்த வேண்டும்.
குத்தகைதாரர் அவர்கள் வெளியேறும் வரை சரியான நேரத்தில் வாடகை செலுத்த வேண்டும்.
இந்த நிபந்தனைகளை வாடகைத்தாரர் பின்பற்றவில்லையெனில், கட்டிடத்தின் உரிமையாளர், வாடகைத்தாரரை உடனடியாக வெளியேற்றும் ஆணையை அமல்படுத்தலாம் என உத்தரவிட்டுள்ளது.
நில உரிமையாளர்கள் தங்கள் சொந்த சொத்தை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதில், வாடகைத்தாரர் உரிமை கோர முடியாது என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வாடகைத்தாரர் மற்றும் குத்தகைத்தாரர்களுக்கு ஒரு தெளிவான எச்சரிக்கை மணியாகும்.