

இந்த நவீன இணைய உலகில் எப்படி மோசடி நடக்கும் என்பதை ஊகிக்கவே முடியாது. ஆனால், நாம் செய்கிற சிறு சிறு தவறுகளையும், அஜாக்கிரதையாக நடந்து கொள்வதையும் தவிர்ப்பதன் மூலம் சில இணைய மோசடிகளைத் தடுக்கவோ தவிர்த்துக்கொள்ளவோ முடியும். அப்படி நடந்தேறிய மோசடியைப் பற்றித் தெரிந்துகொள்வதும் எச்சரிக்கையாக இருப்பதும் மிகவும் அவசியம்.
`உங்களுக்கும் போதை கும்பலுக்கும் தொடர்பிருப்பதாகத் தகவல் வந்திருக்கிறது', 'வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதப் பணம் வந்திருக்கிறது', `கார்டு மேலே இருக்கும் 16 நம்பர் சொல்லு...' `உன் பேங்க் அக்கவுண்ட் லாக் ஆயிடுச்சி' என்ற காரணங்களை சொல்லி மோசடி செய்த காலம் மாறி தற்போது குப்பையில் தூக்கிப்போடப்படும் பார்சல் அட்டைப்பெட்டி மூலம் மோசடி நடப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் ஹோம் டெலிவரிகள் அதிகரித்துள்ள இந்த காலத்தில், டெலிவரி பெட்டிகள் (Delivery Boxes) மற்றும் பார்சல்களை மையமாகக் கொண்டு பல ஆன்லைன் மோசடிகள் நடக்கின்றன.
அதாவது நீங்கள் அமேசான் (Amazon) மற்றும் ஃபிளிப்கார்ட் (Flipkart) போன்ற நிறுவனங்களில் இருந்து ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிய டெலிவரி பெட்டிகளை கவனமாக அப்புறப்படுத்தாவிட்டால், அவை உங்கள் வங்கிக் கணக்கிற்கு நேரடி நுழைவாயிலாக அமையக்கூடும் என்பதை மறக்கவேண்டாம். ஆன்லைன் ஆர்டர் பாக்ஸ் மோசடி என்று அழைக்கப்படும் இந்த மோசடி சமீககாலமாக அதிகரித்து வருகிறது.
இன்றைய உலகில் இணையம் மூலம் தேவையான பொருட்களை வாங்கும் போக்கு அதிகரித்துவிட்டது. மாதந்தோறும் பயன்படுத்தும் மளிகைப் பொருட்களைக்கூட இணையத்தில் வாங்குவோர் அதிகரித்துவிட்டனர். அந்த வகையில் டீத்தூள் முதல் ஐபோன் வரை ஆன்லைனில் ஆர்டர் செய்வது ஆடம்பரம் என்பதைக் கடந்து அத்தியாவசியம் எனக் கருதும் சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.
அப்படி ஆன்லைன் ஷாப்பிங் போர்டல்களில் இருந்து பொருட்களை ஆர்டர் செய்யும்போது, அவற்றை அட்டைப்பெட்டியில் வைத்தோ அல்லது கவரில் வைத்தோ பேக் செய்து அனுப்புவார்கள்.
அப்படி ஷாப்பிங் செய்து வாங்கிய பொருள்களை அட்டைப்பெட்டியிலிருந்தோ, கவரிலிருந்தோ எடுத்தற்குப் பிறகு அந்தப் பெட்டி அல்லது கவரை குப்பையில் தூக்கி எறிந்துவிடுவோம் அல்லவா...அங்கிருந்து தொடங்குகிறது இந்த கண்ணுக்கு தெரியாத மோசடி.
அதாவது நீங்கள் அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் ஷாப்பிங்கில் ஒரு பொருளை ஆர்டர் செய்யும் போது உங்கள் பொருளை பார்சல் அனுப்பும் நிறுவனம் அந்தப் பார்சல் பெட்டியின் அட்ரஸ் ஸ்டிக்கரில் உங்களின் முகவரி, இமெயில் ஐடி, செல்போன் எண் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் ஒட்டப்பட்டிருக்கும்.
நீங்கள் அந்த ஆர்டர் செய்த பொருளை எடுத்த பிறகு பார்சல் பெட்டியை குப்பையில் வீசும் போது இத்தகைய மோசடிக்காரர்கள், வீசப்பட்ட டெலிவரி பெட்டிகளை எடுத்து, உங்கள் தொலைபேசி எண், வீட்டு முகவரி (Address Label) மற்றும் மின்னஞ்சல் ஐடி உள்ளிட்ட உங்கள் தனிப்பட்ட தரவுகளை அணுகுகிறார்கள். மோசடி செய்பவர்கள் குப்பையிலிருந்து இந்த விவரங்களை எடுத்துதான் உங்களை ஏமாற்ற திட்டமிடுகிறார்கள்.
உதாரணமாக உங்கள் பார்சல் பெட்டியில் இருந்து எடுத்த தரவுகளை பயன்படுத்தி உங்களை அழைத்து, வாங்கிய புதுப் பொருள் பற்றிய கருத்தைக் கேட்பார்கள்.
மேலும் உங்கள் அடுத்த ஆர்டரில் கூடுதலாக 10% அல்லது Cashback, Feedback, Reward போன்ற பெயர்களில் தள்ளுபடியைப் பெற நீங்கள் உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டு ஒரு லிங்கை அனுப்புவார்கள்.
ஆப்பர் என்றதும் பெரும்பாலானவர்கள் ஆசையில் அந்த லிங்கை கிளிக் செய்து சிக்கிக்கொள்கிறார்கள். அடுத்த சில நிமிடங்களில் உங்கள் வங்கியில் இருக்கும் பணம் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும். அதன்பிறகு தான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்கிறார்கள்.
பாதுகாப்பாக இருப்பது எப்படி?
பார்சல் பெட்டியின் அப்படியே குப்பையில் தூக்கி எறிவது, உங்கள் தனிப்பட்ட தகவல்களைத் திருட நினைக்கும் மோசடி கும்பலுக்கு (Delivery box scam) வழிவகை செய்யும்.
இதுபோன்ற மோசடிகளிலிருந்து தற்காத்துக்கொள்ள முதலில், உங்கள் டெலிவரி பெட்டிகளிலிருந்து உங்கள் விவரங்கள் இருக்கும் அந்தக் காகிதத்தைக் கிழித்து எடுத்துவிட்டு அட்டைப்பெட்டிகளைத் தூக்கி எறியுங்கள்.
எனவே எந்தவொரு ஆன்லைன் ஷாப்பிங் பார்சல் பெட்டியையும் குப்பையில் தூக்கி எறியும் முன், டெலிவரி ஸ்டிக்கரில் (Shipping Label)உள்ள பெயர், முகவரி, போன் நம்பர் போன்ற தனிப்பட்ட தகவல்களை கண்டிப்பாக கிழிக்கவோ அல்லது அழிக்கவோ வேண்டும். ஒரு சாதாரண டெலிவரி பெட்டி உங்கள் நிதிப் பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்த அனுமதிக்காதீர்கள்.
அல்லது ஸ்டிக்கர் பகுதியை மட்டும் தனியாக கிழித்து, சிறிய துண்டுகளாக கசக்கி குப்பைத் தொட்டியின் அடியில் போட்டு விடலாம்.
பார்சல் பெட்டியின் மேல் உள்ள ஸ்டிக்கரை கிழிக்க முடியவில்லை என்றால், மார்க்கர் (Marker) அல்லது பேனா கொண்டு உங்கள் பெயர், போன் நம்பர் ஆகியவை தெரியாதவாறு முழுமையாக கிறுக்கி விடுங்கள்.
உங்கள் கார்ட்போர்டு பெட்டிகளை [kabadiwala] (பழைய பேப்பர் போடுபவரிடம்) விற்கலாம் அல்லது சிறு சேமிப்புப் பொருட்கள் வைக்கப் பயன்படுத்தலாம்.
அறிமுகமில்லாத நபர்கள் அனுப்பும் லிங்குகளை கிளிக் செய்யாதீர்கள். அதேபோல் OTP அல்லது வங்கி விவரங்களை முன்பின் தெரியாத யாருடனும் பகிர வேண்டாம் என சைபர் கிரைம் அறிவுறுத்தி உள்ளது.