சட்டமன்றத்தை அதிரவைத்த விஜய்யின் முதல் உரை.! விஜய் மேஜிக் சட்டசபையிலும் தொடருமா?

CM Vijay
Vijay
Updated on

தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் பொறுப்பேற்ற பிறகு, நேற்று முதன்முறையாக சட்டமன்ற கூட்டத் தொடர் கூடியது. 233 எம்எல்ஏ-க்களும் நேற்று பதவிப் பிரமாணம் செய்து கொண்ட நிலையில், இன்று சட்டமன்ற சபாநாயகராக ஜேசிடி பிரபாகரனும், துணை சபாநாயகராக ரவிசங்கரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சபாநாயகரை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும், தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் செங்கோட்டையனும் நாற்காலியில் அமர வைத்தனர். சட்டப்பேரவை கூட்டத்துடன் இரண்டாவது நாளான இன்று, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் புதிய சபாநாயகருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து முதல் உரையை தொடங்கினர்.

பலரும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் சமமான வாய்ப்பை அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினர். மேலும் பாமக சட்டமன்ற குழுத் தலைவர் சௌமியா அன்புமணி இந்த சட்டப் பேரவை ஜனநாயக முறைப்படி சமமாக நடத்தப்படும் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை என்று தெரிவித்தார்.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், திரைத்துறையில் முதல்வர் விஜய்க்கு, கேப்டன் விஜயகாந்த் தான் அண்ணன் என்றும், விஜயின் தலைமையில் இந்த அரசு நன்முறையில் செயல்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் சமமான வாய்ப்பு வழங்க வேண்டும். நானும் முதல்வர் விஜயும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள் தான். இருப்பினும் அரசியல் அனுபவத்தில் திமுக தான் முன்னணியில் இருக்கிறது. எங்களது அனுபவங்களை முதல்வருடன் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறோம். எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்களை சந்தித்த விஜயின் அரசியல் நாகரிகம் சட்டப் பேரவையிலும் தொடர வேண்டும்” என உதயநிதி தெரிவித்தார்.

அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் மற்றும் சட்டமன்ற குழு தலைவர் எஸ்பி.வேலுமணி ஆகியோர் தனித்தனியே பேசினர். இதன் மூலம் அதிமுகவில் பிளவு ஏற்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. விரைவில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள சூழலில் இபிஎஸ்-இன் பதவிக்கு ஆபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

இதையும் படியுங்கள்:
#BIG NEWS : "திமுகவுடன் கூட்டணி வைக்க துடித்தார் இபிஎஸ்" - சி.வி.சண்முகம் பகிரங்க குற்றச்சாட்டு..!
CM Vijay

அடுத்ததாக தமிழக முதல்வர் விஜய் பேசுகையில், “மக்களே மக்களுக்காக மக்களால் நடத்தும் ஆட்சி மக்களாட்சி. சட்டப் பேரவையில் அனைவரும் சமம். ஒரு கட்சியில் ஒரு உறுப்பினரே இருந்தாலும் கூட அவருக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்படும் அவரது கருத்துக்கும் மரியாதை அளிக்கப்படும்” என தனது முதல் உரையைத் தொடங்கினார் முதல்வர் விஜய்.

சட்டப்பேரவையில் ஆபிரகாம் லிங்கனின் கூற்றை முன்மொழிந்து, மக்களாட்சியின் தத்துவத்தை எடுத்துரைத்த முதல்வர் விஜய்க்கு பெரும்பான்மையான ஆதரவு கிடைத்தது.

இதையும் படியுங்கள்:
3,500 ஊழியர்களுக்கு பணி நீக்கமா? இடமாற்றமா? - மூடப்படும் 717 கடைகளும், எழும் கேள்விகளும்!
CM Vijay
logo
Kalki Online
kalkionline.com