
தமிழகத்தில் பொதுமக்களின் நன்மை மற்றும் வசதிகளை கருத்தில் கொண்டு, தமிழக அரசின் பதிவுத்துறையில் ஏராளமான சீர்திருத்தங்களும், மாற்றங்களும் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 585 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. தமிழக அரசின் சார்பதிவாளர் அலுவலகத்தில் சொத்துக்கள் வாங்குதல் மற்றும் விற்பனை போன்ற ஆவணங்கள் பதிவு செய்யப்படுகின்றன. அதுமட்டுமின்றி பிறப்பு, இறப்பு சான்றிதழ், சொத்துக்கள் தொடர்பான ஆவணங்கள், திருமண பதிவு மற்றும் பிற சட்ட ஆவணங்களும் இங்கு பதிவு செய்யப்படுகிறது.
அதுமட்டுமின்றி மக்களின் நேரத்தையும், வசதியையும் கருத்தில் கொண்டு தற்போது பத்திர பதிவுத்துறை முழுமையாக கணினிமயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மக்கள் ஆன்லைன் வாயிலாக பத்திர விவரங்கள் பதிவு செய்து, பத்திர பதிவு நேரத்தை முன்பதிவு செய்து, உரிய நேரத்தில் பத்திரப்பதிவுகள் செய்ய முடியும். ஆன்லைன் மூலமாக பல பதிவுகளை செய்ய முடியும் என்றாலும் சொத்துக்களை பத்திர பதிவு செய்ய வேண்டும் என்றால் சார்பதிவாளர் அலுவலத்திற்கு நேரடியாக தான் செல்ல வேண்டும்.
அத்துடன் ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு, 100 டோக்கன்களும்; இரண்டு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 200 டோக்கன்களும் வழங்கப்பட்டு வருகிறது. சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவாகும் ஆவணங்கள், எதிர்காலத்தில் ஏதேனும் சட்டச் சிக்கல்கள் ஏற்படும்போது, ஆதாரமாகப் பயன்படுத்த முடியும். அந்தவகையில், சார்பதிவாளர் அலுவலகங்கள் அனைத்துமே பதிவுத்துறையின் கீழ் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
அதேபோல, சார்பதிவாளர் அலுவலகங்களில் நடைபெறும் நிகழ்வினை, நேரடியாகவே அறிந்து கொள்ள, வீடியோ மூலம் வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. ஆனால் சார்பதிவாளர் அலுவலகங்களில் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களின் மூலம் செயல்பாடுகளை மட்டுமே கண்காணிக்க முடிந்தது. ஆனால் தற்போது வீடியோவுடன் சேர்த்து குரல் பதிவும் பதிவு செய்யப்பட்டு வரும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சார்பதிவாளர்கள் அலுவலகங்களில் சில பதிவாளர்களின் உதவுடன் விண்ணப்பதாரர்களுடன், வெளியாட்களும் உள்ளே வந்து செல்வதால் லஞ்சப்பணம் அதிகளவு புரள்வதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தது. இதனை தடுக்கும் வகையில் வெளியாட்களின் நடவடிக்கையை தடுத்து, அதன்மூலம் லஞ்ச நடமாட்டத்தை வேரறுக்கவே இந்த புதி தொழில்நுட்பத்தை பதிவுத்துறை கொண்டுவந்துள்ளதாக கூறப்படுகிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், சார்பதிவாளர் அலுவலகங்களில் ரூ.20,000க்கு மேல் ரொக்க பணப்பரிமாற்றம் நடந்தால் அதுகுறித்து உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சார்பதிவாளர் அலுவலகங்களில் வீடு, மனை விற்பனை உள்ளிட்ட பதிவுகள் நடைபெறும் போது பணப் பரிமாற்றம் அதிகமாக இருக்கும். ஆனால் சொத்து பரிமாற்றத்தின்போது, அதற்கான விலையாக கொடுக்கப்படும் தொகையில், ரூ.20,000க்கு மேல், ரொக்கமாக கொடுக்கக்கூடாது என்ற விதிமுறை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது என்றாலும் பல இடங்களில் பத்திரங்களில் அதிகளவு பணம் ரொக்கமாக பெறப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் கருப்பு பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், வருமான வரித்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அந்தவகையில் தான் தற்போது சொத்து விற்பனை பத்திரங்களில், ரொக்கமாக பணப்பரிமாற்றம் செய்யக்கூடாது என்றும் அப்படி ஏதாவது நடந்தால், உடனடியாக தங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று வருமான வரித்துறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பதிவுத்துறை ஐஜி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார். இதை அமல்படுத்த பதிவுத் துறைக்கு, உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
எனவே, அனைத்து சார்பதிவாளர்களும், இது விஷயத்தில் மிகவும் கவனத்துடனும், விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றும் பதிவுக்கு தாக்கலாகும் பத்திரத்தில், ரூ.20,000க்கு மேல், ரொக்க பணப்பரிமாற்றம் இல்லாததை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் இது விஷயத்தில் கவனக்குறைவாக செயல்படும், சார்பதிவாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.