சதுரகிரி என்பது விருதுநகர் மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஒரு புனிதமான மலைப் பகுதியாகும். சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் என இரண்டு சுயம்பு லிங்க கோவில்கள் உள்ளன. எந்த இடத்திலேயும் இல்லாத அளவுக்கு சதுரகிரி மலையில் மட்டும் தான் இரட்டை லிங்கங்கள் ஒரே இடத்தில் காணப்படுகிறது. இந்த கோவில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் உள்ளது. சதுரகிரி என்ற பெயர், நாலாபுறமும் மலைகள் சூழ்ந்துள்ளதால் இந்த பெயர் வழங்கப்பட்டது. மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள சதுரகிரி மலைக் கோயிலுக்கு விருதுநகர் வத்திராயிருப்பு பகுதியில் இருந்து செல்வது எளிமையான பாதையாகும்.
நாலாபுறமும் மலைகள் சூழ்ந்துள்ளதால் 'சதுரகிரி' என அழைக்கப்படுகிறது. ஒட்டு மொத்த மலைகளின் அமைப்பு, சதுர வடிவில் இருப்பதால் இப்பெயர் என்பதும் ஒரு கூற்று.
எல்லா சிவன் கோவில்களிலும் சிவலிங்கம் நேராக இருக்கும். ஆனால் சதுரகிரியில் உள்ள சிவலிங்கம் மட்டும் சாய்ந்த கோணத்தில் சுயம்பு லிங்கமாக காட்சி தருவது இக்கோவிலின் சிறப்பு.
கோரக்கர், சட்டைமுனி போன்ற சித்தர்கள் தவம் செய்வதற்காகவும் தத்துவ ஆராய்ச்சி செய்வதற்காகவும் இங்கு வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என நம்பப்படுகிறது. இங்கு உள்ள இயற்கை எழிலும் நிசப்தமும் நமக்குள் ஆழமான அமைதியை உண்டாக்குகின்றன. இது தியானம் செய்யவும், மவுனம் மேற்கொள்ளவும் விரும்புகிறவர்களுக்கு உகந்த இடம் ஆகும். மிகுந்த திகைப்பூட்டும் இந்த மலைகளில், இன்னமும்கூட சித்தர்கள் சிவபெருமானை வணங்கி வருவதாக நம்பப்படுகிறது.
வருடந்தோறும் ஆடி அமாவாசை, தை அமாவாசை மற்றும் சிவராத்திரி போன்ற நாட்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கூடி விரதமிருந்து நடைபயணம் மேற்கொண்டு சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோவில்களில் சிறப்பு வழிபாடு செய்து மன அமைதியையும், தெய்வீக மேன்மையையும் கிடைக்கப் பெறுகிறார்கள். மாத அமாவாசை நாட்களில் 5 ஆயிரம் பக்தர்கள் வரை தாணிப்பாறை வழியாக மலையேறிச் செல்வர். ஆடி அமாவாசை போன்ற முக்கிய நாட்களில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வார்கள்.
மன்னர் திருமலை நாயக்கர் ஆட்சிகாலத்தில் சாப்டூர் பாளையக்காரராக இருந்த இராமகாடையா நாயக்கர் என்பவரால் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சந்தன மகாலிங்கம் கோவில்கள் கட்டப்பட்டன. 1950-ம் ஆண்டு வரை இக்கோவில் சாப்டூர் பாளையக்காரர் பராமரிப்பில் இருந்து வந்தது. இம்மலை பகுதி 1950-ம் ஆண்டுக்குப் பிறகு வனத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.
இந்த கோவிலுக்கு கடந்த காலங்களில் தினந்தோறும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 10 பக்தர்கள் வரை உயிரிழந்தனர்.
இவ்வளவு சிறப்புகள் நிறைந்த இந்த கோவில் இதனை அடுத்து மாதந்தோறும் வரும் பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசையை உள்பட 4 நாட்களுக்கு மட்டுமே பக்தர்கள் மலையேறி சென்று வழிபாடு செய்ய வனத்துறை அனுமதி அளித்து வந்தது. இப்படி அனுமதிக்கப்பட்ட நாட்களில் எதிர்பாராத விதமாக திடீரென மழை பெய்தாலும், ஆற்றுப்பகுதியில் நீர்வரத்து அதிகரித்தாலும் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படும். இந்த நிலையில், தினமும் சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி வழங்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் சில வழிகாட்டு நெறிமுறைகளுடன் சதுரகிரி கோவிலுக்கு தினமும் பக்தர்களை அனுமதிக்கலாம் என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அதன்படி தினசரி பக்தர்கள் மலையேறி சென்று சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமியை தரிசனம் செய்ய விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. தினமும் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலுக்கு காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே சோதனைச்சாவடி வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். மாலை 4 மணிக்குள் மலையில் இருந்து திரும்பி வந்துவிடவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உரிய அனுமதியின்றி எவரேனும் மலையில் தங்கி இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சதுரகிரி மலைக்கு அனுமதிக்கப்பட்ட பாதை வழியாக மட்டுமே பக்தர்கள் செல்ல வேண்டும். வேறு எந்த பகுதியிலும் நுழையக்கூடாது. மலையேற்ற பாதைகளிலும், அதன் சுற்றுப்புறங்களிலும் குப்பைகள் கொட்டுவது தடை செய்யப்பட்டு உள்ளது. மேலும் பக்தர்கள் தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பாலித்தீன், பிளாஸ்டிக் போன்ற பொருட்களை மலைப்பகுதிக்கு எடுத்துச் செல்லக்கூடாது. பக்தர்கள் இரவில் கோவில் வளாகப் பகுதியில் தங்குவதற்கு அனுமதி கிடையாது. மதுரை ஐகோர்ட்டு வழிகாட்டுதல்களை முழுமையாக பின்பற்றி பக்தர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.