

திருவண்ணாமலையில் உள்ளது பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில். இது சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகும். சுமார் 1100 ஆண்டுகளுக்கு முற்பட்ட திருவண்ணாமலை கோவில் பல கட்டிட சிறப்புக்களை கொண்டுள்ளது. இந்த கோவிலுக்கு விடுமுறை நாட்களிலும், விசேஷ நாட்களிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு ஊர்களில் இருந்து வந்து வழிபாடு செய்வார்கள். அதேபோல் மாதந்தோறும் வரும் பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையை சுற்றி கிரிவலம் வருவார்கள்.
இந்த கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழா நடைபெற்றாலும் கார்த்திகை மாதத்தில் 10 நாட்கள் நடைபெறும் தீபத்திருவிழா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதேபோல் கார்த்திகை தீபம் என்றாலே நினைவிற்கு வருவது திருவண்ணாமலையில் மலை உச்சியில் ஏற்றப்படும் மகாதீபம் தான். இது போல் மலை உச்சியில் தீபம் ஏற்றி வழிபடும் வழக்கம் வேறு எந்த கோவிலிலும் கிடையாது. அந்த வகையில் இந்தாண்டுக்கான கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான மகாதீபம் நாளை புதன்கிழமை (டிசம்பர் 3-ந்தேதி) ஏற்றப்படுகிறது. நாளை அதிகாலையில் கோவிலில் பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படும்.
திருக்கார்த்திகை தீபத்தன்று மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபம் 11 நாட்கள் அணையாமல் தொடர்ந்து காட்சி அளிக்கும். இந்த மகாதீபம் 20.கி.மீ., தூரம் வரை தெரியும். மலையின் உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக 4,500 கிலோ நெய் ஆவின் பயன்படுத்தப்படுகிறது.
திருவண்ணாமலையில் ஏற்றப்படும் மகாதீபத்தை தரிசிப்பதற்காக நாளை லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிவார்கள். போன வருடம் 15 லட்சம் பக்தர்கள் மகாதீபத்தை தரிசனம் செய்த நிலையில் இந்த வருடம் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் திருகார்த்திகை தீபத்தன்று, மட்டும் அண்ணாமலையார் கோவில் மலையேற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். திருவண்ணாமலை மலை சுமார் 2,668 அடி உயரம் கொண்டது. மலையின் கீழிருந்து மலை உச்சி வரை செல்ல 8 கி.மீ. தூரம் உள்ள மலையை ஏற சுமார் 4 மணி நேரமாகும்.
ஆதார் அடையாள அட்டையுடன் அனுமதி கோருவோருக்கு மட்டுமே மலை ஏற அனுமதி வழங்கப்படும். அந்த வகையில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபம் அன்று மலையேற 2000 பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
இந்நிலையில் கடந்தாண்டு கார்த்திகை தீபத்திருவிழா தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வந்தநிலையில் ஃபெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் திருவண்ணாமலை, மலையில் மண்சரிவு ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்தனர். அதனை தொடர்ந்து அடுத்தடுத்து மூன்று முறை நிலச்சரிவு ஏற்பட்டதுடன், மீண்டும் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக புவியியல் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்தன் காரணமாக கடந்தாண்டு பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்பட்டது. அதேசமயம், மலையில் தீபம் ஏற்ற மேலே கொண்டு செல்ல வேண்டிய பொருட்களை கொண்டு செல்ல தேவையான மனித சக்திகள், காவல்துறையினர், வனத்துறையினருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில், இந்திய புவியியல் ஆய்வு மைய புவியியல் வல்லுனர் குழு அறிக்கையில், கடந்த இரு தினங்களாக ‘தித்வா’ புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் மிக கனமழை பொழிந்துள்ளதால், மலையேறும் பாதை தற்போது உறுதித் தன்மை அற்றும், ஏற்கனவே நிலைச்சரிவு ஏற்பட்ட இடங்களில் மையப் பகுதிகளில் பல்வேறு தளர்வான கற்பாறைகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
எனவே புயல் எச்சரிக்கை மற்றும் வல்லுனர் குழு அறிக்கையின் அடிப்படையில் பக்தர்களின் பாதுகாப்பு கருதி இந்த ஆண்டும் பக்தர்கள் மலையேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பக்தர்களின் பாதுகாப்பை கருதி மாவட்ட நிர்வாகம் எடுக்கும் இந்த நடவடிக்கைக்கு பக்தர்கள் முழு ஒத்துழைப்பு அளித்து மலையேற முயற்சிக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக அறிவிக்கப்படுகிறது.