தொடர் மண்சரிவு... திருவண்ணாமலை மலையேற பக்தர்களுக்கு அனுமதி கிடைக்குமா?

Tiruvannamalai landslide
Tiruvannamalai landslide
Published on

பஞ்சபூத தலங்களில் திருவண்ணாமலை அக்னி தலமாக விளங்குகிறது. பிரம்மாவும், விஷ்ணுவும் நெருப்பாக நின்ற சிவபெருமானின் அடிமுடி காண முயன்றனர். அந்த நெருப்பு மலையாக மாறியது. அதுவே கோவிலின் பின்னணியிலுள்ள திருவண்ணாமலையாகும்.

கார்த்திகை தீபம் என்றாலே நினைவிற்கு வருவது திருவண்ணாமலையில் மலை உச்சியில் ஏற்றப்படும் மகாதீபம் தான். திருவண்ணாமலையின் சிறப்புகளுக்கு முதன்மையானதாக இருப்பது திருக்கார்த்திகை அன்று மலை உச்சியில் ஏற்றப்படும் இந்த மகாதீபம் தான். இது போல் மலை உச்சியில் தீபம் ஏற்றி வழிபடும் வழக்கம் வேறு எந்த கோவிலிலும் கிடையாது. திருவண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகை தீபத்தை நேரில் பார்ப்பவர்களுக்கு 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம். திருவண்ணாமலை மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டதும் தான் அனைவரும் அவரவர் வீடுகளில் தீபம் ஏற்றி வழிபாடு செய்வார்கள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக மகா தீபம் ஏற்றப்படும் நிகழ்ச்சி வருகிற 13-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபம் 11 நாட்கள் தொடர்ந்து காட்சி அளிக்கும். இந்த மகாதீபம் 20.கி.மீ., தூரம் வரை தெரியும். மலையின் உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக 4,500 கிலோ ஆவின் நெய் பயன்படுத்தப்படும்.

திருவண்ணாமலையில் ஏற்றப்படும் மகாதீபத்தை தரிசிப்பதற்கே பல லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிவார்கள். போன வருடம் 15 லட்சம் பக்தர்கள் மகாதீபத்தை தரிசனம் செய்தனர். இந்த வருடம் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருவண்ணாமலை மலை சுமார் 2,668 அடி உயரம் கொண்டது. மலையின் கீழிருந்து மலை உச்சி வரை செல்ல 8 கி.மீ. தூரம் உள்ள மலையை  ஏற சுமார் 4 மணி நேரமாகும். அண்ணாமலையார் கோவில் மலையில் உச்சியில் வருடம் தோறும் கார்த்திகை தீபம் அன்று மலையேற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். ஆதார் அடையாள அட்டையுடன் அனுமதி கோருவோருக்கு மட்டுமே மலை ஏற அனுமதி வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு 2500 பக்தர்களுக்கு அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. கூடுதலாக மலையேறும் பக்தர்களுக்கு உடல்தகுதி பரிசோதனைக்கு பின்னர் அனுமதி வழங்கலாம் என மாவட்ட நிர்வாகம் முடிவு செய்திருந்தது.

இதையும் படியுங்கள்:
திருவண்ணாமலை வடக்குக் கோபுரத்தை கட்டிய பெண் சித்தர் பற்றி தெரியுமா?
Tiruvannamalai landslide

இந்நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையில் ஃபெஞ்சல் புயல் காரணமாக தொடர்ந்து பெய்த கனமழையால் மண்சரிவு ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்தனர். கார்த்திகை தீபத்திருவிழா தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வரும் சூழலில் 7 பேர் உயிரிழந்தது அனைவரையும் சோகத்தை ஆழ்த்தியது.

அடுத்தடுத்து 3 முறை மண்சரிவு ஏற்பட்ட காரணத்தால் பக்தர்களை மலையேற அனுமதிப்பது தொடர்பாக புவியியல் வல்லுநர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

திருவண்ணாமலையில் மண்சரிவு ஏற்பட்ட நிலையில், வரும் 13-ம்தேதி கார்த்திகை மகா தீபம் கொண்டாடப்பட உள்ளது. தீப மலையில் மண்சரிவால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதா? தீபத்திருவிழாவில் எதுவும் மாற்றங்கள் இருக்குமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

கார்த்திகை தீபத் திருவிழாவின்போது மலை உச்சியில் கொப்பரை கொண்டு செல்லப்பட்டு மகா தீபம் ஏற்றப்படுவது வழக்கம். தீபக் கொப்பரை ஏந்திச்செல்வது, நெய் டின்னை தலையில் சுமந்து மலை உச்சிக்கு கொண்டு செல்வது, திரி கொண்டு செல்வது, தீபம் ஏற்றுவது என தினசரி 300 முதல் 400 பேர் வரை மலையில் ஏறி இறங்குவர்.

மேலும் மலையில் ஏற்பட்ட மண் சரிவினால் மகாதீபத்தின்போது மலைக்கு செல்லும் 2,500 பக்தர்களுக்கு இந்தாண்டு அனுமதி அளிக்கப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இதையும் படியுங்கள்:
வழக்குகளிலிருந்து விடுவிக்கும் காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர்!
Tiruvannamalai landslide

மலையேறும் அனைத்து பாதைகளிலும் மண்சரிவு ஏற்பட்டு புதைக்குழி போல் காட்சி அளிப்பதாகவும், மலையேறும் அனைத்துப் பாதைகளும் மண் சரிந்துள்ளதாகவும் ஆய்வு மேற்கொண்ட வனத்துறையினர் கூறியுள்ளனர். குறிப்பாக மகாதீபம் ஏற்றப்படும் கொப்பரை கொண்டு செல்லும் பாதைகளிலும் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதனால்  மலைஉச்சியில் தீபம் ஏற்ற, மலையேற பக்தர்களை அனுமதிக்க வேண்டாம் என்று வனத்துறையினரின் கோரிக்கை வைத்துள்ளனர்.

புவியியல் வல்லுனர்கள் அண்ணாமலையார் மலையை ஆய்வு செய்துள்ளனர். அவர்களின் ஆய்வு அறிக்கை வெளியான பின்னரே மகாதீபத்தின்  போது மலையின் உச்சிக்கு பக்தர்களை அனுமதிப்பார்களா? இல்லையா? என்பது தெரியவரும். குழு ஆய்வறிக்கைக்கு பின், முதல்வரோடு ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்:
மகாபாரதத்தோடு தொடர்புடைய கட்டடக்கலைக்கு புகழ் பெற்ற தாரகேஸ்வரர் திருக்கோயில்!
Tiruvannamalai landslide

ஆண்டிற்கு ஒருமுறை மலை உச்சியில் ஏற்றப்படும் மகாதீபத்தின்போது மலைஏற அனுமதிக்க வேண்டும் என்பதே பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது. ஆனால் மலையேறும் பக்தர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் பட்சத்தில் அனுமதி மறுக்கப்படும் என்று தெரிகிறது.

எதுவாக இருந்தாலும் ஆய்வு அறிக்கையின் முடிவு வந்த பிறகு தான் தெரியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com