பஞ்சபூதத் தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஆலயமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருநாள் மிகவும் விசேஷம். இந்த நாளில் இங்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்கள், கிரிவலம் வந்து இறைவனை வழிபாடு செய்வார்கள்.
அங்கு ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருநாளின் மாலை வேளையில், 2668 அடி உயர மலையில் மகா தீபம் ஏற்றப்படும். ஜோதி வடிவில் உயர்ந்து நின்ற சிவபெருமான் தான், இங்கு மலை வடிவில் இருப்பதாக ஐதீகம்.
அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 4-ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் வெள்ளிக்கிழமை 13-ம்தேதி திருவண்ணாமலை மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபம் 11 நாட்கள் தொடர்ந்து காட்சி அளிக்கும். இந்த மகாதீபம் 20.கி.மீ., தூரம் வரை தெரியும்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் மலை உச்சியில் வருடம் தோறும் கார்த்திகை தீபம் அன்று மலையேற 2000 பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். ஆதார் அடையாள அட்டையுடன் அனுமதி கோருவோருக்கு மட்டுமே மலை ஏற அனுமதி வழங்கப்படும்.
இந்நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையில் ஃபெஞ்சல் புயல் காரணமாக தொடர்ந்து பெய்த கனமழையால் மண்சரிவு ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்தனர். கார்த்திகை தீபத்திருவிழா தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வரும் சூழலில் 7 பேர் உயிரிழந்தது அனைவரையும் சோகத்தை ஆழ்த்தியது.
அடுத்தடுத்து 3 முறை மண்சரிவு ஏற்பட்ட காரணத்தால் பக்தர்களை மலையேற அனுமதிப்பது தொடர்பாக புவியியல் வல்லுநர்கள் 8 பேர் கொண்ட குழு 3 நாட்கள் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். அதிகமானோரை மலை ஏற அனுமதிக்கக்கூடாது என நிபுணர் குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எந்த தடையும் இல்லாமல் திருவண்ணாமலை உச்சியில் மகாதீபம் ஏற்படும் என்றும், தீபம் ஏற்வது மட்டுமே அரசின் நோக்கம் என்றும், சூழ்நிலைகளுக்கு ஏற்றாற்போல் மனித சக்தி பயன்படுத்தப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
மேலும் கார்த்திகை தீபத்திற்கு திருவண்ணாமலை மலையேறுவதற்கு இந்தாண்டு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார். மீண்டும் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி மலையேற அனுமதி இல்லை என்றும் கூறினார்.
மேலே கொண்டு செல்ல வேண்டிய 350 கிலோ எடையுள்ள பொருட்கள், 600 கிலோ எடையும் 40 டின் நெய், திரி உள்ளிட்ட பொருட்கள் கொண்டு செல்ல தேவையான மனித சக்திகள், காவல்துறையினர், வனத்துறையினருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் கூறினார்.
திருவண்ணாமலை சென்று தீப வழிபாடு செய்ய அனைவராலும் இயலாது. அதே நேரம் இறைவனை தங்கள் வீட்டிலும் ஜோதி வடிவில் வணங்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான், கார்த்திகை தீபத் திருநாள் அன்று, அனைவரது வீடுகளிலும் அகல் விளக்கில் தீபம் ஏற்றி வணங்குகிறார்கள். திருவண்ணாமலை மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டதும் தான் அனைவரும் அவரவர் வீடுகளில் தீபம் ஏற்றி வழிபாடு செய்வார்கள்.
திருவண்ணாமலையில் ஏற்றப்படும் மகாதீபத்தை தரிசிப்பதற்கே பல லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிவார்கள். இந்த வருடம் 40 லட்சம் பக்தர்கள் மகாதீபத்தை காண, தரிசனம் செய்ய வருவார்கள் என்று எதிர்பாக்கப்படுவதால் கூடுதலாக 20 சதவீத ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை கார்த்திகை மகாதீபத்தை முன்னிட்டு இன்று முதல் 15-ம்தேதி வரை போக்குவரத்து நெரிசல் ஏதுமின்றி பக்தர்கள் கிரிவலம் செல்ல ஏதுவாக 25 தற்காயிக பேருந்து நிலையங்கள் மற்றும் 116 கார் பார்க்கிங் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.