HMPV வைரஸ் காரணமாக திருப்பதியில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர். நாயுடு அறிவித்துள்ளார்.
ஆபத்தான வைரஸ்களில் ஒன்றான HMPV வைரஸ் தற்போது மக்களை அச்சுறுத்தி வருகிறது. குழந்தைகள், வயதானவர்கள், குறைந்த நோயெதிர்ப்பு தன்மை கொண்டவர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுகிறது. கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து சென்னையிலும் இந்த நோய் பரவியுள்ளது. இந்த வைரஸ் குறித்து அச்சப்பட வேண்டாம் என்று பலர் கூறினாலும், மக்கள் இந்த வைரஸ் குறித்து அச்சப்படுகிறார்கள். கர்நாடகாவில் இந்த வைரஸ் பரவலை அடுத்து மாஸ்க் கட்டாயம் என்று சொல்லப்பட்டது.
அந்தவகையில் தற்போது திருப்பதிக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
வைகுண்ட ஏகாதசி திருவிழா நாளை முதல் வரும் 19ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த நாட்களில் ஏழுமலையான் கோவிலின் சொர்க்கவாசல் திறந்து வைக்கப்படும். இதனால் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
ஏற்கனவே நேற்று இரவு திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலியாகினர். இது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இப்படியான நிலையில், வைரஸால் ஏற்பட்டு யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காகவும், வைரஸ் மற்றவர்களுக்கு பரவக்கூடாது என்பதற்காகவும் மாஸ்க் அணிய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் சொர்க்கவாசல் வழியாக ஏழுமலையான் தரிசனம் செய்ய, முன்கூட்டியே டிக்கெட்டுகள் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்களுக்கான இலவச தரிசன டோக்கன்கள் திருப்பதியில் உள்ள 8 கவுண்டர்களில் அல்லது திருமலையில் உள்ள ஒரு கவுண்டரில் பெறலாம்.
இந்த நாட்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த 3 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
பக்தர்களுக்கு வழங்கப்பட்ட அறிவுரை:
தரிசனத்திற்கு முன்பே பதிவு செய்திருக்க வேண்டும். சமூக இடைவெளியை பராமரிக்க வேண்டும். முகக்கவசம் தவறாமல் அணிய வேண்டும்.
பக்தர்களுக்கு வழங்கப்பட்ட இந்த அறிவுரைகளை பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.