சுந்தர்லால் பகுகுணா ஒரு முக்கிய இந்திய சுற்றுச்சூழல் ஆர்வலர். இமயமலைப் பகுதியில் உள்ள காடுகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட சிப்கோ இயக்கத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருந்தார். சுற்றுச்சூழல் செயல்பாட்டிற்கான அவரது பங்களிப்புகள் இந்தியாவுக்கு அப்பாலும் நீடித்த பாரம்பரியத்தை விட்டுச் சென்றுள்ளன. உலகம் முழுவதிலும் அறியப்பட்டவர்.
சமூக சீர்திருத்தவாதி: உத்தரகாண்டில் ஜனவரி 9, 1927ல் பிறந்த பகுகுணா சிறுவயதில் இருந்து காந்தியக் கொள்கைகளால் ஆழமாகக் கவரப்பட்டார். மனைவி விமலா பென்னுடன் கல்வி மற்றும் சமூக சீர்திருத்தத்தில் கவனம் செலுத்தினார். அதற்காக ஒரு ஆசிரமத்தை நிறுவினார். குடிப்பழக்கம், சாதியப் பாகுபாடு மற்றும் பாலின சமத்துவம் போன்ற பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டார்.
சிப்கோ இயக்கத்தில் பகுகுணாவின் பங்களிப்பு: 1970களில் தொடங்கப்பட்ட சிப்கோ இயக்கத்தில் பகுகுணாவின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. சிப்கோ என்ற சொல்லுக்கு தழுவுதல் என்று பொருள். இது வனப் பாதுகாப்பில் சமூகத்தின் அர்ப்பணிப்பை குறிக்கிறது. 1970ல் உத்தரகாண்டில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளம் கிராம மக்களுக்கு ஒரு விழிப்புணர்வைக் கொண்டு வந்தது.
காடு அழித்தல், நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள பலவீனமான தொடர்புகள் குறித்து சிப்கோ இயக்கம் பிரச்சாரம் செய்தது. மூன்று ஆண்டுகள் கழித்து பகுகுணா மற்றும் சக சமூக ஆர்வலர்கள் இயற்கையைக் காக்க வேண்டும் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். குறிப்பாக, மரங்களைப் பாதுகாப்பதில் இறங்கினர்.
1927 வனச் சட்டத்தை திருத்துவதில் சிப்கோ இயக்கம் முக்கியப் பங்கு வகித்தது. இது உள்ளூர் பாதுகாப்பு முயற்சிகளை வலுப்படுத்தியது மற்றும் வள மேலாண்மையில் சமூக ஈடுபாட்டை அதிகரித்தது. இந்த மாற்றம் இந்தியாவில் இயற்கை வளக் கொள்கைகளுக்கு மிகவும் பொறுப்பான அணுகுமுறையை வளர்த்தது.
மரங்களுக்கு ராக்கி: இமயமலையில் உள்ள மரங்களை வெட்டுவதைத் தடுக்க சிப்கோ இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டபோது இமயமலையில் உள்ள பெண்களும் இயக்கத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறினர். மரங்களை கட்டித்தழுவி, அவற்றை வெட்ட விடாமல் செய்தனர். ரக்ஷாபந்தன் பண்டிகையின்போது சகோதரனின் மணிக்கட்டில் சிவப்பு நூல் கட்டுவது இந்துக்களின் வழக்கம்.
அதேபோல, மரங்களின் பட்டைகளை அவர்கள் கட்டியணைத்துக் கொண்டது மரங்களுக்கு ராக்கி கட்டுவதைப் போல இருந்தது. ஆண்களும் பெண்களும் மரங்களைத் தழுவி சங்கிலியால் கட்டிக் கொண்டனர். உலகின் மிக உயரமான மலையில் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட நெருக்கடி மற்றும் பேரழிவை உலகத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்ற இயக்கமாக இது விளங்கியது.
நடைப் பயணம்: 1981லிருந்து 83 வரை பகுகுணா இமயமலைப் பகுதி முழுவதும் சுற்றுச்சூழல் பிரச்னைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த காஷ்மீர் முதல் கோஹிமா வரை 5000 கிலோ மீட்டர் நடைப் பயணத்தை மேற்கொண்டார். இந்த பயணம் பல்வேறு சமூகங்கள் எதிர்கொள்ளும் சூழலியல் சவால்கள் ஒன்றோடு ஒன்று இணைந்திருப்பதை வலியுறுத்தியது.
அணை கட்டுவதற்கு எதிர்ப்பு: பகுகுணா பெரிய அணைகள் கட்டும் திட்டங்களுக்கு எதிராகவும் குரல் கொடுத்தார். அத்தகைய கட்டுமானங்கள் அழிவுகரமான சுற்றுச்சூழல் தாக்கங்களை ஏற்படுத்தும் மற்றும் உள்ளூர் சமூகங்களை இடமாற்றம் செய்யும் என்று வாதித்தார். அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக 56 நாட்களுக்கும் மேலாக உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த விருதான பத்ம விபூஷன் உட்பட பல விருதுகளைப் பெற்றார். 1981ல் காடு அழிப்புக்கு எதிரான பயனுள்ள நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும் வரை பத்மஸ்ரீ விருதை நிராகரித்தார்.
பூமியின் மனிதன்: இயற்கை ஆர்வலராக மட்டுமின்றி, அவர் ஒரு எழுத்தாளராகவும் பத்திரிக்கையாளராகவும் விளங்கினார். சுற்றுச்சூழல் பிரச்னைகள் குறித்த கட்டுரைகளை எழுதினார். சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் பின்னிப்பிணைந்த நிலையான வாழ்வாதாரங்களுக்கான அவரது ஆழ்ந்த அர்ப்பணிப்பை அவரது எழுத்துக்கள் பிரதிபலிக்கின்றன. மே 21, 2021 அன்று கொரோனாவின்போது அவர் காலமானார். ஆனால், அவர் பூமியின் மனிதனாக என்றும் நினைவு கூறப்படுகிறார்.