
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 9 ஆம் நாளன்று ‘வெளிநாடுவாழ் இந்தியர் நாள்’ (Pravasi Bharatiya Divas) என்று கொண்டாடப்படுகிறது.
இந்திய அரசால் எல்.எம். சிங்வி என்பவர் தலைமையில் அமைக்கப்பட்ட புலம் பெயர்ந்த இந்தியர்களுக்கான உயர்நிலைக் குழுவின் (HLC) பரிந்துரைகளின்படி, ‘வெளிநாடுவாழ் இந்தியர் நாள்’ கொண்டாட முடிவு எடுக்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டு ஜனவரி 9 அன்று புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில் அப்போதைய இந்தியப் பிரதமர் திரு அடல் பிஹாரி வாஜ்பாய், எல்.எம். சிங்வி குழுவின் அறிக்கையைப் பெற்று, 1915 ஆம் ஆண்டில் ஜனவரி 9 அன்று மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பியதைக் குறிக்கும் வகையில், அந்த நாளை ‘வெளிநாடுவாழ் இந்தியர் நாள்’ என்று அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, 2003 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் பிறந்து, பிற நாடுகளில் சென்று வாழும் இந்தியர்களை நினைவில் கொள்ளும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
இந்தியாவிலிருந்து தென்னாப்பிரிக்காவில் சென்று வசித்து வந்த மகாத்மா காந்தி, அங்கு பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துச் செயல்பட்டதால், அவருக்கு அங்கு கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு அச்சுறுத்தல்கள் தொடர்ந்து வந்து கொண்டேயிருந்தன. அந்நிலையில் அவர், அங்கிருந்து மீண்டும் இந்தியாவிற்குத் திரும்புவது என்று முடிவு செய்தார். 1915 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் நாளன்று பம்பாய் துறைமுகத்தில் காந்தி இறங்கிய நிலையில், முதல் உலகப் போர் கடுமையாகத் தொடங்கியிருந்தது. பிரித்தானிய கட்டுப்பாட்டிலுள்ள நாட்டின் குடிமகன் என்ற முறையில் அவர் அப்போரை ஆதரித்தாலும், இந்தியாவின் எதிர்காலம் பற்றிய கவலை அவருக்கு அதிகமாகவே இருந்தது. பூனாவுக்குச் சென்ற அவர் கோகலேயைச் சந்தித்து ‘இந்தியாவின் தொண்டர்கள்’ அமைப்பில் சேர்ந்து பணியாற்ற விரும்பினார். அதன் பிறகு, கோகலேயின் ஆணைப்படி இந்தியா முழுவதும் பயணம் செய்து, இந்தியாவை அறிய முயன்றார். அவர் எவ்விடத்திற்குச் சென்றாலும் தொடருந்தின் மூன்றாம் வகுப்பில் பயணம் செய்தார். அவர் மக்களோடு மக்களாக இயங்கி வந்ததால், இந்தியாவில் மக்கள் எப்படி வாழ்கிறார்கள்? என்பதை முழுமையாக அறிந்து கொண்டார். தனது வாழ்க்கை முழுவதையும் எளிமையாக மாற்றிக் கொண்டார். எனவே, மகாத்மா காந்தி இந்திய திரும்பிய இந்நாளினை ‘வெளிநாடு வாழ் இந்தியர் நாள்’ என்பதற்கு மிகப் பொருத்தமானதாக அமைந்திருக்கிறது.
இந்நாளில், புலம் பெயர்ந்தோர் தொடர்பான செயல்பாடுகள், கருத்தரங்குகள், நிகழ்வுகள், பட்டறைகள் போன்றவை ஏற்படுத்தப்பட்டு, அதன் வழியாக இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்த மக்களுக்கும், இந்தியாவிற்குமிடையே நிலையான, கூட்டு வாழ்வு மற்றும் பரஸ்பர பலனளிக்கும் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார ஈடுபாட்டிற்கான செயல்பாடுகள் போன்றவை ஒருங்கிணைக்கப்படுகின்றன.
இந்தியாவில், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த புகழ்பெற்ற வெளிநாட்டுத் தலைவர்கள், அரசு மற்றும் பிற பிரமுகர்கள் தலைமை விருந்தினர்களாக அழைக்கப்பட்டுச் சிறப்பு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் நிகழ்வில், மொரிஷியஸ் நாட்டின் பிரதமராக இருந்த சர் அனரூட் ஜக்நாத் என்பவர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு நிகழ்வுகள் நடைபெற்றன. 2025 ஆம் ஆண்டு நடைபெறும் நிகழ்வில் டிரினிடாட் மற்றும் டொபாகோ நாட்டின் குடியரசுத்தலைவர் கிறிஸ்டின் கார்லா கங்காலூ சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க இருக்கிறார்.
இது தவிர, இந்திய வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்ட பிராந்தியங்களில் உள்ள புலம் பெயர்ந்த இந்தியர்களுடன் தொடர்பு கொள்ளவும், அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் திட்டங்களைப் பற்றி அறிந்து கொள்ளவும், இந்தியாவின் வளர்ச்சிக்கு பங்களிக்கவும், அவர்களின் தீர்வுக்காகவும் அவ்வப்போது இந்தியாவிற்கு வெளியேயும் ‘வெளிநாடுவாழ் இந்தியர் நாள்’ கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்கிறது. அமெரிக்கா, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, நெதர்லாந்து, கனடா, மொரிசீயஸ், ஆஸ்திரேலியா, ஐக்கிய அரசு (UK) நாடுகளில் இதுவரை 10 நிகழ்வுகளை நடத்தியிருக்கிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.