அல்பேனியா, உலகில் முதன்முறையாக ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்பை அமைச்சராக நியமித்து வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளது.
இந்த மெய்நிகர் அமைச்சரின் பெயர் டயெல்லா (Diella), அதாவது அல்பேனிய மொழியில் "சூரியன்" என்று பொருள். இந்த அமைச்சர், ஊழலுக்கு எதிராகப் போராடுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளார் என்று அல்பேனிய பிரதமர் எடி ராமா அறிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த தேர்தலில் தனது சோஷலிஸ்ட் கட்சிக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்ததையடுத்து, புதிய அமைச்சரவையை அறிமுகப்படுத்திய ராமா, டயெல்லாவுக்கு முக்கிய பொறுப்புகளை வழங்கினார்.
பொதுமக்கள் மத்தியில் வெளிப்படைத்தன்மையையும், ஊழலற்ற அரசாங்கத்தையும் உறுதிப்படுத்தும் வகையில், பொது டெண்டர்களை கண்காணிப்பதே டயெல்லாவின் முக்கியப் பணியாகும்.
"டயெல்லா, எங்கள் அமைச்சரவையில் உடல்ரீதியாக இல்லாத, ஆனால் மெய்நிகராக AI மூலம் உருவாக்கப்பட்ட முதல் உறுப்பினர்" என்று ராமா அறிமுகப்படுத்தினார். அல்பேனியாவில் பொது டெண்டர்கள் "100% ஊழலற்றதாக" இருக்க டயெல்லா உதவுவார் என்றும் அவர் கூறினார். நான்காவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள ராமா, பொது டெண்டர்கள் தொடர்பான அனைத்து முடிவுகளையும் டயெல்லா பொறுப்பெடுத்துக் கொள்வார் என்றும், இதன் மூலம் ஒவ்வொரு பொது நிதியும் "முற்றிலும் வெளிப்படைத்தன்மையுடன்" நிர்வகிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அல்பேனியாவில், பொது டெண்டர் நடைமுறைகள் நீண்ட காலமாக ஊழல் புகார்களின் ஆதாரமாக இருந்து வருகின்றன. 2.8 மில்லியன் மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டில், போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் மூலம் ஈட்டப்படும் பணத்தை சட்டப்பூர்வமாக்கும் கும்பல்களின் மையமாக அல்பேனியா உள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும், இங்குள்ள அரசியல் அதிகார மட்டத்திலும் ஊழல் பரவலாகக் காணப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் அல்பேனியா சேருவதற்கான முக்கிய நிபந்தனைகளில் ஒன்று, பொது நிர்வாகத்தில் ஊழலுக்கு எதிரான போராட்டம். 2030-க்குள் அல்பேனியாவை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைக்க ராமா திட்டமிட்டுள்ளார். இந்த சூழலில், டயெல்லாவின் வருகை ஒரு முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
டயெல்லா முதன்முதலில் கடந்த ஜனவரி மாதம் 'இ-அல்பேனியா' (e-Albania) என்ற தளத்தில் AI மூலம் இயங்கும் மெய்நிகர் உதவியாளராக அறிமுகப்படுத்தப்பட்டார். பாரம்பரிய அல்பேனிய உடையில் தோன்றும் இவர், குரல் கட்டளைகள் மூலம் குடிமக்கள் மற்றும் வணிகங்களுக்கு அரசு ஆவணங்களைப் பெறுவதற்கு உதவுகிறார். மின்னணு முத்திரைகளுடன் ஆவணங்களை வழங்குவதன் மூலம், அவர் அதிகாரத்துவ தாமதங்களைக் குறைத்து வருகிறார்.
இதுவரை, டயெல்லா 36,600 டிஜிட்டல் ஆவணங்களை வழங்கியுள்ளார், மேலும் இந்த தளம் மூலம் கிட்டத்தட்ட 1,000 சேவைகளை வழங்கியுள்ளார் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில மாதங்களுக்கு முன்பு, அல்பேனியாவில் விரைவில் டிஜிட்டல் அமைச்சர் அல்லது AI பிரதமர் கூட வரலாம் என்று ராமா கூறியிருந்தார். ஆனால் அந்த நாள் இவ்வளவு விரைவாக வரும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை.
இந்த மெய்நிகர் அமைச்சரின் செயல்பாட்டை மனிதர்கள் எவ்வாறு மேற்பார்வையிடுவார்கள் அல்லது இந்த AI ரோபோவை யாராவது தவறாகப் பயன்படுத்த முடியுமா என்பது குறித்து அரசு எந்த விவரங்களையும் தெரிவிக்கவில்லை.
இது குறித்த விளக்கங்கள் இன்னும் வெளிவரவில்லை. இந்த நிலையில், டயெல்லா அல்பேனியாவின் ஊழல் சிக்கலுக்கு எவ்வாறு தீர்வு காண்பார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.