நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே நம் நினைவுக்கு வருவது புத்தாடை, சுவையான பலகாரங்கள், உறவினர்களின் வருகை மற்றும் பட்டாசுகளின் சத்தம் தான். தீபாவளி பண்டிகையில் பட்டாசு வெடிப்பது என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, அது ஒரு அலாதியான மகிழ்ச்சியையும், கொண்டாட்ட மனநிலையும் நமக்குள்ளே வரவழைக்கும்.
தீபாவளி அன்று சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவருக்கும் பட்டாசு வெடிப்பதுதான் பேரானந்தம். பெரியவர்கள் பட்டாசு வெடிக்கும் போது, தங்களது சிறுவயது தீபாவளி நினைவுகளுக்கும், அந்த மழலைக்கால சந்தோஷத்திற்கும் கணநேரம் சென்று விடுகிறார்கள்.
தீபாவளித் திருநாளை முழுமையாக்குவதில் பட்டாசுகளுக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. அதே நேரத்தில், பட்டாசுகளை பாதுகாப்பாகவும், மற்றவர்களுக்கும் (குறிப்பாக முதியவர்கள் மற்றும் செல்லப் பிராணிகள்) பாதிப்பு இல்லாத வகையிலும் வெடித்துக் கொண்டாடுவது இந்த மகிழ்ச்சியை இன்னும் பல மடங்கு அதிகரிக்கும்!
எனவே, பட்டாசுகளை வெடிக்கும்போது பாதுகாப்பாக மிகுந்த எச்சரிக்கையுடன் வெடிக்க வேண்டும். குறிப்பாக, குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்கும்போது மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் இருப்பது அவசியம்.
பட்டாசு வெடிக்கும்போது பாதுகாப்பாக இருக்க நாம் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான செய்ய வேண்டியவைகள் மற்றும் செய்யக்கூடாதவைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
பட்டாசு பாதுகாப்பு - செய்ய வேண்டியவை(Do's) :
* பெரியவர்கள் கண்காணிப்பில் மட்டுமே குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
* பட்டாசு வெடிக்கும்போது கண்களைப் பாதுகாக்கும் வகையில் பொருத்தமான பாதுகாப்புக் கண்ணாடிகளை அணிவது நல்லது.
* உரிய அனுமதி பெற்ற கடைகளில் இருந்து பட்டாசுகளை வாங்க வேண்டும். சேதமடைந்த, ஈரமான அல்லது காலாவதியான பட்டாசுகளைப் பயன்படுத்தக் கூடாது.
* வீடுகள், வாகனங்கள், மின்கம்பிகள், மின்சாதனங்கள் என எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
* பட்டாசு வெடிக்கும் போது உடல் உறுப்புகளில் ஒட்டாத, தீப்பற்றாத பருத்தி (Cotton) ஆடைகளை மட்டுமே அணிந்து வெடிப்பது பாதுகாப்பிற்கு நல்லது.
* சிறு குழந்தைகள் பட்டாசு வெடிக்கும்போது அருகில் பெரியவர்கள் அவர்களின் நேரடிக் கண்காணிப்பில் மட்டுமே இருக்க வேண்டும்.
* பட்டாசு வெடிக்கும்போது கண்களையும் காதுகளையும் பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
* அதேபோல் பட்டாசு வெடிக்கும் போது கால்களில் செருந்து அணிந்து கொள்வது நல்லது.
* முதலுதவிக்கு பட்டாசு வெடிக்கும் போது அருகில் ஒரு வாளியில் தண்ணீர் வைத்து கொள்வது நல்லது. சிறு தீயாக இருந்தாலும் வாளிகளில் இருந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்துவிடுங்கள்.
* பட்டாசுகளைப் பற்றவைக்க நீண்ட ஊதுவத்தி அல்லது பத்திக்குச்சியைப் பயன்படுத்தவும்; உடலைத் தூரமாக வைத்து சாயந்த நிலையில் நின்று பற்றவைக்கவும்.
* எக்காரணம் கொண்டும் தீப்பெட்டியிலிருந்து கிழித்து நேரடியாக பட்டாசு வெடிக்க கூடாது. முகம், கண்கள் பட்டாசுக்கு அருகில் இல்லாமல் தூரமாக வைத்து நெருப்பு பொறி ஏற்ற வைக்க வேண்டும்.
* வீட்டின் உட்பகுதியில் பட்டாசுகளை வெடிக்காமல் காற்றோட்டமான மற்றும் திறந்த வெளி மைதானங்களில் மட்டும் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
* சில்க், நைலான், பாலியஸ்டர் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய ஆடைகளையோ அல்லது புடவை, வேட்டி மற்றும் நீளமான உடைகளை அணிந்து கொண்டு பட்டாசு வெடிப்பதை தவிர்ப்பது நல்லது. கூடுமானவரை உடம்பில் படும்படியாக இறுக்கமான ஆடைகளை அணியவேண்டும்.
* நெருக்கமாக, மிக அருகருகில் நின்று பட்டாசுகளை வெடிக்காமல் சிறிது இடைவெளி விட்டு நின்று மட்டுமே வெடிக்க வேண்டும்.
* பயன்படுத்திய கம்பி மத்தாப்புகள் மற்றும் வெடிக்காத பட்டாசுகள் மீது தண்ணீர் ஊற்ற வேண்டும்.
* பட்டாசுகளை வெடிக்கும் இடத்தில் கனமான துணி போர்வை வைத்திருங்கள்.
* ராக்கெட் போன்ற பட்டாசுகளை கைகளில் பிடித்து வெடிக்காமல் நேர்நிலையில் வைத்து தான் வெடிக்க வேண்டும்.
* வெடித்த பட்டாசு குச்சிகள் மற்றும் மத்தாப்புகளை மண் நிறைந்த வாளியில் போடுவது பாதுகாப்பானது.
* பட்டாசுகள் நவீன ரகமாக இருந்தால் அதன் லேபிளை படித்து சரியான முறையில் வெடிக்க செய்ய வேண்டும்.
* பட்டாசுகள் உரிமம் பெற்ற நிறுவன தயாரிப்புகள் மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும்.
செய்யக் கூடாதவைகள் (Don'ts) :
* குழந்தைகள், முதியோர், நோயாளிகளை கவனத்தில்கொண்டு மருத்துவமனை, முதியோர் இல்லங்கள் உள்ளிட்ட இடங்களில் அதிகம் ஒலியெழுப்பும் பட்டாசுகளை வெடிக்காமல் தவிர்க்க வேண்டும்.
* செல்லப் பிராணிகள் அருகில் பட்டாசு வெடிக்காதீர்கள்.
* வெடிக்க வேண்டிய பட்டாசுகளைச் சட்டை அல்லது கால்சட்டைப் பைகளில் போட்டு வைக்கக் கூடாது.
* பட்டாசு பற்றவைக்கும் போது குனிந்து, முகம் பட்டாசின் அருகில் இருக்கும்படி வெடிக்க வேண்டாம்.
* பூந்தொட்டி, மத்தாப்பு அல்லது எந்த ஒரு பட்டாசையும் கையில் பிடித்தபடி பற்றவைக்கவோ, கைகளில் பிடித்து தூக்கி போடவோ கூடாது.
* வாகனங்கள், பெட்ரோல் பங்க் அல்லது மருத்துவமனைகளுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்கவும்.
* பற்றவைத்த பட்டாசு வெடிக்காமல் நின்றுவிட்டால், அதன் அருகில் மீண்டும் சென்று சோதிக்கவோ அல்லது மீண்டும் கொளுத்தவோ கூடாது. அதேபோல் வெடிக்காத பட்டாசுகள் கீழே இருந்தால் அதை கைகளால் எடுக்க வேண்டாம்.
* பட்டாசுகளில் உள்ள மருந்தை எடுத்து பற்றவைக்கக்கூடாது.
* எந்த காரணத்தை முன்னிட்டும் வீட்டுக்குள், வீட்டு வாசலிலேயே பட்டாசுகளை பற்றவைக்கக் கூடாது.
* பட்டாசு நிறைந்த பையை, கிச்சன் போன்ற எளிதில் தீப்பிடிக்கும் இடங்களில் வைக்க வேண்டாம்.
* கால்சட்டை பை, சட்டை பாக்கெட்டுகளில் பட்டாசுகளை வைக்க வேண்டாம்.
* கண்ணாடி பாட்டில்கள், காலி பெட்டிகளை அடுக்கி அதன் அடியில் பட்டாசுகளை வைத்து வெடிப்பது ஆபத்தானது.
* வெடித்த பட்டாசுகளை சாதாரண குப்பையில் போடக்கூடாது.
* எரியும் பட்டாசுகளுக்கு அருகில் குனிந்து பார்ப்பது, வெடித்த பட்டாசுகளின் பாகங்களை உடனடியாகக் கையால் தொடுவது போன்ற செயல்களையும் தவிர்க்க வேண்டும்.
* பட்டாசு வெடித்த இடங்களில் எஞ்சியிருக்கும் காகிதங்கள் மற்றும் பிற கழிவுகளைச் சுத்தம் செய்வதற்கு முன், அவை முழுமையாக அணைந்துவிட்டன என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
* பட்டாசு வெடிக்கும் போது கைகளில் சானிடைசர் (Hand Sanitizer) பயன்படுத்துவதோ அல்லது அருகில் வைத்திருப்பதோ முற்றிலும் கூடாது (இது எளிதில் தீப்பற்றும்).
விபத்து ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
பட்டாசுகளால் தீக்காயம் ஏற்பட்டால், பாதிக்கப்பட்ட பகுதியை உடனடியாகக் குளிர்ந்த ஓடும் நீரில் சுமார் 20 நிமிடங்கள் குளிர்விக்க வேண்டும். ஐஸ்கட்டி, எண்ணெய், பற்பசை அல்லது வீட்டில் தயாரிக்கப்படும் பொருட்களைத் தீக்காயத்தின் மீது தடவக்கூடாது. தோலில் ஒட்டிய ஆடைகளை வலுக்கட்டாயமாக அகற்றக் கூடாது.
கண்ணில் பட்டாசுத் துகள் பட்டால், கண்ணைத் தேய்க்கவோ அழுத்தவோ கூடாது. உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும். கடுமையான தீக்காயம், முகம் அல்லது கண்ணில் காயம், மூச்சுத்திணறல் போன்றவை ஏற்பட்டால் அவசர மருத்துவ உதவியைப் பெற வேண்டும். பட்டாசு காயங்களில் பாா்வை இழப்பு ஏற்படுவதற்கு 50 சதவீதம் அலட்சியமே காரணம். உரிய விழிப்புணா்வுடன் செயல்பட்டால், அத்தகைய பாதிப்புகளைத் தவிா்க்கலாம்.
தீபாவளி பண்டிகையையொட்டி, பட்டாசு தீக்காயங்களை எதிர்கொள்ள சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 25 படுக்கைகள் கொண்ட சிறப்பு தீக்காய சிகிச்சைப் பிரிவு உள்பட தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் செயல்படும் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
- தீபாவளியின் உண்மையான மகிழ்ச்சி என்பது நாமும் நம்மைச் சுற்றியிருப்பவர்களும் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதில்தான் இருக்கிறது. சிறிய கவனக்குறைவுகூட பெரிய விபத்துக்கு வழிவகுக்கும் என்பதை நினைவில் கொள்வோம்.
இந்த தீபாவளிக்கு பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்போம், பண்டிகையை இனிமையாக கொண்டாடுவோம்!