

‘பாம்புக்கு என்னதான் பால் வார்த்தாலும் நஞ்சைத்தான் கக்கும்; அதுபோலத்தான் திமுக’ என்று மதிமுக அவைத்தலைவர் அர்ஜுன்ராஜ் திமுக மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் கிட்டத்தட்ட 50 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆதிக்கத்தை முறியடித்து விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்துள்ள நிலையில், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு ஒரு இடத்தில் மட்டுமே வென்ற மதிமுகவுக்குள் தனிச்சின்ன விவாதங்கள் வலுத்து வருகின்றன.
திமுக கூட்டணியில் உள்ள மதிமுக தமிழக சட்டசபை தேர்தலில் 4 தொகுதியில் திமுகவின் உதயசூரியன் போட்டியிட்டது. தேர்தல் முடிவில் மதிமுக சீர்காழி தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு அதிருப்தி இருந்தாலும் தற்போதுவரை கூட்டணியில் நீடித்து வருகிறது. ஆனாலும், அவ்வபோது திமுகவுக்கு எதிரான கருத்துகளை மதிமுக தலைவர்கள் கூறி வருகின்றனர்.
இச்சூழலில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அர்ஜுன்ராஜ், திமுக தில்லுமுல்லுகளுக்குச் சொந்தக்காரர்கள் என்றும், அத்தகைய கட்சியுடன் மதிமுக கூட்டணியில் இருக்கக் கூடாது என்றும் தனது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் திமுகவுடன் இருக்கக்கூடாது என்பதே அனைவரின் கருத்து. மதிமுகவை திமுக அழிக்க நினைக்கிறது. நல்லது செய்வதுபோல் தீங்கு செய்கிறது. வைகோ திமுகவை விட்டு விலகி தவெகவுடன் புதிய கூட்டணி அமைக்கும் வரை நடக்கும் அரசியல் நகர்வுகளைத் தாங்கள் தூரத்தில் இருந்தே ரசிக்கப் போவதாகவும் அதிரடியாகப் பேசியுள்ளது திமுக - மதிமுக கூட்டணியில் பெரும் விரிசலையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கூட்டணிக் கட்சியான திமுகவின் மீது மதிமுகவின் முக்கிய நிர்வாகியே இத்தகைய கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
இதற்கிடையே சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் மதிமுகவை திமுக தனது உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட கட்டாயப்படுத்தியது சமூக நீதிக்கு எதிரானது மற்றும் அவமானகரமானது என்று மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி எம்.பி.யுமான துரை வைகோ தனது கடும் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
கூட்டணி தொடர்பான இறுதி முடிவு ஜூன் 27-ம்தேதி நடைபெறும் பொதுக்குழுவில் எடுக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிடம் விஜய்யின் தவெக ஆட்சி எப்படி இருக்கு என கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த வைகோ, ‘அருமையாக இருக்கு.. அவ்வளவு தான்..’ என்றார். இதன் மூலம் தமிழக அரசியல் களத்தில் தவெகவின் செயல்பாடுகள் முக்கிய கவனத்தை பெற்றுள்ளதாக பார்க்கப்படுகிறது.
மேலும், பேசிய அவர், வருகிற 27-ம தேதி மதிமுக பொதுக்குழு கூடவுள்ளது. அப்போது தற்போதைய அரசியல் சூழலை ஆராய்ந்து, அதன் பின்னர் உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி குறித்து அறிவிப்போம். நாங்கள் திமுகவைப் பற்றி எந்தவொரு தவறான கருத்தையும் பேசவில்லை. ஆனால், அவர்கள் சமூக வலைதளங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் எங்களைப் பற்றி அவதூறாகப் பேசி வருகிறார்கள் என பேசியுள்ளார்.
வைகோவின் இந்தக் கருத்தின் மூலம், மதிமுகவிற்கு திமுக மீது அதிருப்தி இருப்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. இதன் மூலம் 27-ம்தேதி நடக்கவுள்ள மதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு தவெக கூட்டணி குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்று அரசியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, திமுகவினர் கூட்டணிக் கட்சிகளைப் பற்றி அவதூறாகப் பேசி வருகின்றனர். காங்கிரஸ் கட்சி ஏற்கனவே திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெக-விற்கு ஆதரவு அளித்துள்ள நிலையில், தற்போது மதிமுகவும் தவெக-வில் இணையும் பட்சத்தில் அக்கட்சியின் பலம் மேலும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவில் விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்றபோது, காங்கிரஸ் கட்சி, திமுக கூட்டணியில் இருந்து விலகி முதலில் ஆதரவு அளித்தது. இதனிடையே, தேர்தலுக்குப்பின் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பல்வேறு கட்சிகள் கூட்டணியில் இருந்து விலகின. மேலும், ஆட்சி அமைக்க தவெகவுக்கு ஆதரவு அளித்த சிபிஐ, சிபிஎம், விசிக, ஐயூஎம்எல் கட்சிகள் அமைச்சரவையிலும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.