

ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் தொடர்பான கூட்டணி கட்சிகளின் தொகுதிப் பங்கீடுகள் குறித்த அறிவிப்புகள் வெளிவரும் நிலையில் தமிழக அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.
ஆளுங்கட்சியாக மக்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அதிரடியாக வழங்கி, 200 தொகுதிகளை வெற்றி இலக்காக வைத்து மீண்டும் ஆட்சியில் அமரும் தீவிரச் செயல்பாடுகளில் இறங்கியுள்ள திமுக, கடந்த 22-ஆம் தேதி முதல் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு குறித்த ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் துவக்கத்தில் இருந்தே நீண்டகால கூட்டணியாக இருக்கும் தேசியக் கட்சியின் காங்கிரஸ் அதிக தொகுதிகளை ஒதுக்க வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக காங்கிரஸ் மற்றும் திமுகவை சேர்ந்த நிர்வாகிகள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தனர்.ஆனாலும் இழுபறியாகவே இருந்து வந்த நிலையில் முன்னாள் நிதி அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் இந்த பிரச்சினைக்கு முடிவு கட்டும் விதமாக இன்று தானே சென்று ஸ்டாலினை நேரில் சந்தித்தார்.
சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த சந்திப்பில் தொகுதிப்பங்கீடு குறித்து சுமூகமான முடிவு எடுக்கப்பட்டதாத் தெரிகிறது. எனினும், சிதம்பரம் காத்திருந்த செய்தியாளர்களிடம் பேசாமல் உடனே சென்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பேச்சுவார்த்தை மூலம் 39 தொகுதிகள் என்ற நிலையிலிருந்து காங்கிரஸ் 36 தொகுதிகள் என இறங்கி வந்துள்ளது என்றும்; 25 + 1 என்ற நிலையிலிருந்து திமுக 29 தொகுதிகள் + 2 ராஜ்யசபா இடங்கள் என உயர்த்தி வழங்க முன்வந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தொகுதிப்பங்கீடு குறித்து காங்கிரஸ் தலைமையிடத்தில் சிதம்பரம் தெரிவித்த பின் கலந்து ஆலோசித்து அதன் பின்னர் தான் தலைமையின் முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
இதற்கிடையே, "தற்போது திமுகவிடம் பேசிக்கொண்டிருக்கிறோம், என்ன நடக்கிறது என்று பிறகு சொல்வோம்" எனத் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். தொகுதிப் பங்கீடு தொடர்பாக முதல்வர் ஸ்டாலினிடம் என்ன பேசப்பட்டது? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, "திமுக கெடு எதுவும் விதிக்கவில்லை; பேச்சுவார்த்தையில் இழுபறி ஏதுமில்லை, கூட்டணி உறுதியாக இருக்கிறது என கூறினார். முழுமையாகப் பேச்சுவார்த்தை முடிந்தபின் முடிவுகள் அறிவிக்கப்படும்" எனவும் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.