

தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற இன்னும் ஓரிரண்டு மாதங்களே இருக்கும் நிலையில் கட்சிகள் தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் திமுக முதன்மை செயலாளர் கே.என். நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்ச் 9ஆம் தேதி திருச்சியில் 10 லட்சம் கழக நிர்வாகிகள் கலந்து கொள்ளும் மாபெரும் நிர்வாகிகள் சந்திப்பு மாநாட்டை இந்தியாவே வியந்து பார்க்கும் அளவிற்கு ஏற்பாடுகளை செய்து மிக பிரமாண்டமாக நடத்துவதற்கு தயாராகிக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.
திருச்சியில் சிறுகனூர் பகுதியில், திமுகவின் 12 வது மாநில மாநாடு 'ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்' என்ற தலைப்பில் மார்ச் 9, 2026 அன்று அமைச்சர் கே.என். நேருவின் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. 500 ஏக்கர் நிலப்பரப்பில், 10 லட்சம் தொண்டர்கள் பங்கேற்கும் வகையில், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திமுக முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேரு, மேயர் மு.அன்பழகன் மற்றும் மாவட்டச் செயலாளர்களுடன் இணைந்து சிறுகனூர் அருகே மாநாட்டுப் பணிகளை நேரடியாக ஆய்வு செய்து வருகிறார்.
சமயபுரம் மாரியம்மன் பூச்சொரிதல் விழாவையொட்டி மார்ச் 8ம் தேதியிலிருந்து 9ஆம் தேதிக்கு மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கே.என். நேரு தன்னுடைய அறிக்கையில் கரைபுரண்டு ஓடும் காவிரியாய், தடை போட முடியாத கடல் அலையாய் திருச்சியில் திரள்வோம்..திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைப்போம் என்று தெரிவித்துள்ளார். இந்த மாபெரும் மாநில மாநாட்டில் அனைத்து தலைமைக்கழக நிர்வாகிகள், கழகச் செயலாளர்கள், அமைப்பாளர்கள், சட்டமன்ற-நாடாளுமன்ற உறுப்பினர்கள், செயற்குழு-பொதுக்குழு உறுப்பினர்கள் என கழகத்தின் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். இந்த மாபெரும் மாநாட்டிற்கான முன் ஏற்பாடுகளை சிறப்பாக செய்திடும் வகையில் அந்தந்த மாவட்ட, மாநில நிர்வாகிகள் கூட்டங்களை நடத்தி திருச்சி மாநாட்டில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை, வாகன வசதிகள், செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த வேண்டும் என்றும், வாகன நிறுத்தும் வசதி, போக்குவரத்து வழித்தட ஏற்பாடுகளை முன்கூட்டியே திட்டமிட வசதியாக அந்தந்த மாவட்டங்களில் இருந்து மார்ச் 1ஆம் தேதிக்குள் அனைத்து விவரங்களையும் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
அத்துடன் மாநாட்டில் அனைத்து கழக நிர்வாகிகளும் கலந்து கொள்வதுடன், கழகத்தலைவர் உரையை முடிக்கும் வரையில் ராணுவ கட்டுப்பாட்டுடன் இருப்பதற்கும் வழி காட்டுவதுடன், மாநாட்டுத் திடலுக்கு சரியான நேரத்திற்கு வந்து விடுவதையும் உறுதி செய்திட வேண்டும். மாவட்டத்தின் கடைசி வாகனம் மாநாடு நோக்கி கிளம்பிய பிறகு தான் மாவட்ட செயலாளர்கள் மாநாட்டிற்கு கிளம்ப வேண்டும் என்று கூறியவர், கழகத் தலைவரை மீண்டும் முதலமைச்சராக்க சூளுரைப்போம். மீண்டும் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைப்போம் என்று தெரிவித்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வெற்றியை உறுதி செய்யவும், முதல்வர் ஸ்டாலினின் ஆட்சியைத் தொடர வலியுறுத்தியும் இந்த மாநாடு ஒரு பெரிய சக்தியை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.