தமிழக அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் கௌரவ (Guest) விரிவுரையாளர்களுக்கான சம்பள உயர்வு குறித்து,உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "கௌரவ விரிவுரையாளர்களின் சம்பளம் ரூ.5,000 உயர்த்தப்படுகிறது" எனத் தெரிவித்தார். சமீபத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு வெளியிட்டிருந்த இந்த அறிவிப்பை அமைச்சரின் பேச்சு தற்போது அதை உறுதி செய்துள்ளது.
இதன் மூலம் ரூ.25,000 சம்பளம் பெற்றுக் கொண்டிருந்த அவர்களின் சம்பளம் இனி ரூ. 30,000 வழங்கப்படும் என்றும் மேலும் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணிபுரியும் தற்காலிக விரிவுரையாளர்களுக்கும் ரூ.5,000 சம்பளம் உயர்த்தப்படுகிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
அரசு கல்லூரிகளில் தற்காலிக கல்வி பயிற்சி அளிக்க உதவும் விரிவுரையாளரே கௌரவ விரிவுரையாளர்(Guest Lecturers) என்றழைக்கப்படுகின்றனர். தற்காலிக பணியாளர்களான இவர்களது பணியை நிரந்தரமாக்குவது மற்றும் சம்பளத்தை உயர்த்தித் தருவது தொடர்பான கோரிக்கைகளை அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் தற்போது அவர்களது சம்பள உயர்வு அறிவிப்பு வந்துள்ளது. இருப்பினும்
பல ஆண்டுகளாக Guest Lecturers நிரந்தரப்படுத்தவும் கோரிக்கை வைத்து வருவதும் ஆனால் அரசு நேரடியாக நிரந்தரப்படுத்தல் அறிவிப்பு வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சம்பள உயர்வு அறிவிப்பு கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஒருபுறம் மகிழ்ச்சியை அளித்தாலும், பணி நிரந்தரம் (Regularisation) குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது அவர்களின் நீண்ட கால கவலையாக உள்ளது. தற்காலிகப் பணியாளர்களாகவே தொடரும் இவர்களுக்கு, வாழ்க்கைச் செலவுகளைச் சமாளிக்க இந்த ரூ.5,000 உயர்வு ஒரு சிறிய நிவாரணமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சம்பள உயர்வு விவரம்:
இந்த அறிவிப்பின் மூலம் இதுவரை ரூ.25,000 சம்பளம் பெற்று வந்த விரிவுரையாளர்களுக்கு, இனி ரூ.30,000 வழங்கப்படும். இதேபோல், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணிபுரியும் தற்காலிக விரிவுரையாளர்களுக்கும் ரூ.5,000 சம்பளம் உயர்த்தப்பட உள்ளது. பாடம் மற்றும் பணிநேரத்தின் அடிப்படையில் ஏற்கனவே ரூ.30,000 வரை பெற்று வந்தவர்களுக்கு, இந்த உயர்வுடன் சேர்த்து இனி ரூ.35,000 வரை கிடைக்க வாய்ப்புள்ளது. இதில் சரியான தொகை என்பது கல்லூரி, பணிநேரம், பணிக்காலம் ஆகியவற்றைப் பொறுத்து மாறும் வாய்ப்பு உள்ளது.
அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி (TNPSC) மூலம் நிரப்பும் பணிகள் ஒருபுறம் நடந்தாலும், தங்களுக்குப் "பணிக்கால முன்னுரிமை" வழங்கி நிரந்தரப்படுத்த வேண்டும் என்பதே இவர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது. ஊதிய உயர்வுடன் பணி நிரந்தரமும் உறுதியானால்தான் முழு மகிழ்ச்சி என்கின்றனர் கௌரவ விரிவுரையாளர்கள்.