

தமிழகத்தில் வரும் ஏப்ரல்-மே மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. அதனை தொடர்ந்து சட்டமன்ற தேர்தல் களம் தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. பிரசாரம், பொதுக்கூட்டம், நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை, விருப்ப மணுக்களை பெறுதல் என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
தமிழக சட்டசபை தேர்தலில் இந்த முறை 4 முனைப்போட்டிக்கே அதிகம் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் கட்சி ஆகியவற்றுக்கு இடையேதான் போட்டி. ஆனால், யார் அணியில் யார் இருப்பார்கள் என்பது தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை முடியும்போதுதான் தெரியவரும்.
இந்நிலையில் வரும் தேர்தலில் ஆட்சியை தக்க வைத்துகொள்ள திமுக அரசு பல்வேறு யுத்திகளை கையாண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அரசு பணியாளர்களையும், மக்களையும் கவரும் வகையில் பல திட்டங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மூன்று நாட்களில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் பற்றி தொகுப்பை இந்த பகுதியில் பார்க்கலாம்.
தமிழகத்தில் பள்ளிக்கல்வி தொடங்கி உயர்கல்வி வரையிலும், வேளாண் வளர்ச்சி முதல் தொழில்துறை வளர்ச்சி வரையிலும், பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு தொடங்கி, ‘நான் முதல்வன்’ திட்டம் வரையிலும், மகளிருக்கு உரிமைத்தொகை தொடங்கி, மாணவர்களுக்கு புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் வரையிலும், துறைதோறும் பல முன்னோடி திட்டங்களை, எல்லார்க்கும் எல்லாம் என்ற அடிப்படையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீட்டி செயல்படுத்தி வருகிறார்.
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் :
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் சி மற்றும் டி பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள், முன்னாள் கிராம அலுவலர்களுக்கு 2024-2025-ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசு வழங்க ரூ.183 கோடியே 86 லட்சம் ஒதுக்கீடு செய்து ஜனவரி 2-ம்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதனால் 9 லட்சத்து 90 ஆயிரம் பேர் பயன் அடைவார்கள்.
இந்த உத்தரவின்படி சி மற்றும் டி பிரிவைச் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.3 ஆயிரம் என்ற உச்சவரம்புக்கு உட்பட்டு மிகை ஊதியம் வழங்கப்படும்.
தொகுப்பூதியம், சிறப்பு கால முறை ஊதியம் பெறும் பணியாளர்கள் மற்றும் 2024-2025-ம் நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாக பணிபுரிந்து, சில்லரை செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழுநேர மற்றும் பகுதி நேரப் பணியாளர்கள் ஆகியோருக்கு 1000 ரூபாய் சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும்
சி மற்றும் டி பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள், முன்னாள் கிராம பணியமைப்பு (முன்னாள் கிராம அலுவலர்கள், கிராம உதவியாளர்கள்) மற்றும் அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கு 1000 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படும்.
அரசு ஊழியர்களுக்கு புதிய வகை ஓய்வூதியம் :
பழைய ஓய்வூதியத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ, போட்டா ஜியோ ஆகிய அமைப்புகள் போராடி வந்தன. இந்நிலையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு கிடைத்து வந்த ஓய்வூதியம் மற்றும் பல்வேறு பலன்களை தொடர்ந்து அளிக்கக்கூடிய புதிய திட்டமாக, "டி.ஏ.பி.எஸ்., தமிழ்நாடு அசூர்டு பென்சன் ஸ்கீம்” செயல்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 3-ம்தேதி உத்தரவிட்டார். இதன் மூலம் அரசு ஊழியர்களின் 22 ஆண்டுகால கோரிக்கை நிறைவேறி உள்ளது.
இந்த புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-
* மாநில அரசு அலுவலர்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும். இதற்கு பணியாளர்களின் 10 சதவீத பங்களிப்போடு, ஓய்வூதிய நிதியத்திற்குத் தேவைப்படும் கூடுதல் நிதி முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும்.
* 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுதோறும் 6 மாதத்திற்கு ஒருமுறை அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படுவதற்கு இணையான அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும்.
* ஓய்வூதியதாரர் இறந்துவிட்டால், அவர் ஏற்கனவே பரிந்துரைத்த குடும்ப உறுப்பினர்களுக்கு அவர் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.
* அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும் போதும், பணிக்காலத்தில் இறக்க நேரிடும் போதும், அவரவரின் பணிக்காலத்திற்கேற்ப ரூ.25 லட்சத்துக்கு மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும்.
* புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டபின், ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதி பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் பணி ஓய்வு பெறும் அனைத்து அலுவலர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும்.
* பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தின் (சி.பி.சி.) கீழ் பணியில் சேர்ந்து, புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் செயல்படுத்தப்படுவதற்கு முன்பு இடைப்பட்ட காலத்தில் ஓய்வூதியம் இன்றி பணி ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும்.
பொங்கல் பரிசு தொகுப்பு :
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் ரேஷன் கடைகள் மூலம் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கப் பணம் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கு தகுதி உள்ளவர்களாக 2 கோடியே 22 லட்சத்து 72 ஆயிரத்து 19 ரேஷன் அட்டைதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
கடந்த இரு ஆண்டுகளாக (2023, 2024) பொங்கல் தொகுப்புடன் ரொக்கப்பணம் வழங்கப்படாத நிலையில், இந்தாண்டு தேர்தல் நடைபெறுதை முன்னிட்டு பொங்கல் தொகுப்புடன் ரொக்கப்பணம் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்த நிலையில் அதை உறுதிபடுத்தும் வகையில் நேற்று (ஜனவரி 4-ம்தேதி) பொங்கல் தொகுப்புடன் ரூ.3000 ரொக்கப்பணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் மக்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்.
10 லட்சம் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி திட்டம் :
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் இன்று (ஜனவரி 5) மாலை 3 மணியளவில் கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்திற்காக 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் ‘உலகம் உங்கள் கையில்’ என்னும் மாபெரும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
இந்த திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் கல்லூரி மாணவர்களுக்கு 20 லட்சம் மடிக்கணினிகள் இரண்டு கட்டங்களாக வழங்கப்பட உள்ளது. முதல் கட்டமாக இன்று அரசு பொறியியல், கலை மற்றும் அறிவியல், மருத்துவம், விவசாயம், சட்டம், பலவகை தொழில்நுட்பக் கல்லூரி, தொழில்துறைப் பயிற்சி போன்ற அனைத்துத் துறைகள் சார்ந்த மாணவர்களுக்கும் 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்படுகிறது.
பொங்கல் பரிசு தொகுப்பை தொடங்கி வைக்கும் முதலமைச்சர்
பொங்கல் பண்டிகைக்கு இந்த ஆண்டு ரேஷன் கடைகளில் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொங்கல் தொகுப்புடன் வேட்டி, சேலை மற்றும் ரூ.3,000 ரொக்கம் வழங்கப்படும் என்று தமிழக அரசு நேற்று (ஜனவரி 4-ம்தேதி) அறிவித்திருந்தது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை வரும் 8ம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க இருக்கிறார். அன்றைய தினம் முதல், வரும் 14ம் தேதி வரை ரேஷன் கடைகளில் ஒவ்வொரு நாளும் சுமார் 400 ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது.
- ஒவ்வொரு நாளும் அரசு புதுப்புது திட்டங்களை அறிவித்து வரும் நிலையில், பணி நிரந்தரம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் பிரச்சனைகளுக்கு வரும் நாட்களில் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். ஏனெனில் இதுபோன்ற போராட்டங்கள் தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தக்கூடாது என்பதில் திமுக மிகவும் கவனமாக செயல்படும் என்றே சொல்லலாம்.
இதற்கிடையே திமுக ஆட்சிக்கு வந்தது முதலே அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியம்கோரி போராடி வரும் நிலையில், இதுவரை அவர்களை திரும்பிக்கூட பார்க்காத அரசு, இப்போது ஏமாற்றும் வகையில் ஒரு மோசடி ஓய்வூதிய திட்டத்தை அறிவித்துள்ளது. வரும் தேர்தலில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற அச்சத்தில் இருக்கும் திமுக, அதிலிருந்து தப்பவே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்று பாமக தலைவர் அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், புதுப்புது திட்டங்களும், எவ்வளவுதான் பரிசு தொகுப்பு தந்தாலும்கூட, அவையெல்லாம் வாக்குகளாக மாறாது, என்று நாம் தமிழர் கட்சி சீமான், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, பாமகவின் சவுமியா அன்புமணி போன்றோர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். தேர்தலை கவனத்தில் கொண்டு மக்களை கவரும் வகையில் திமுக அரசு ஒவ்வொரு நாளும் புதுப்புது திட்டங்களை அறிவித்து வருவதாகவும் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.