

நம் நாட்டை பொறுத்தவரையில் பெரும்பாலானோர் பொது போக்குவரத்தான ரெயில்களையே அதிகளவு பயன்படுத்துகின்றனர். ஏனெனில், ரெயில் போக்குவரத்தே மிக எளிமையானதாகவும், பலதரப்பட்ட மக்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் மலிவானதாகவும் உள்ளது. அது மட்டுமின்றி, ஆயிரக்கணக்கான கி.மீ. தொலைவிற்கு பயணிப்பதற்கு பேருந்துகளைக் காட்டிலும் ரெயில்களே எளிய மக்கள் மட்டுமின்றி மிடில் கிளாஸ் மக்களுக்கும் ஏற்றதாக உள்ளது. அதாவது, 1000 கி.மீ. தொலைவிற்கோ அல்லது அதற்கு மேலான தொலைவிற்கோ பயணிப்பதற்கு விமானங்களில் பல ஆயிரம் ரூபாய் செலவாகும். தற்போதுள்ள காலகட்டத்தில் பேருந்துகளிலும் கிட்டத்தட்ட அதே அளவிலான தொகையை செலவிட வேண்டியதாக இருக்கிறது. ஆனால், ரெயில்களில் மட்டுமே சில ஆயிரங்கள் செலவழித்தாலே போதும் சுகமான பயணத்தை மேற்கொள்ள முடியும் என்றால் அனைவரின் விருப்ப தேர்வாகவே உள்ளது.
அந்த வகையில் சிலர் ஏதாவது அவசர தேவைக்காக வெளியூர்களுக்கு செல்லும் போது தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்வார்கள்.
ஆனால் தட்கல் டிக்கெட்டை பயணத் தேதிக்கு ஒரு நாள் முன்னதாக மட்டுமே முன்பதிவு செய்யமுடியும். இது கூடுதல் கட்டணத்துடன், ஏசி வகுப்புகளுக்கு காலை 10 மணிக்கும், ஏசி அல்லாத வகுப்புகளுக்கு காலை 11 மணிக்கும் திறக்கப்படும்,
மேலும் இதை IRCTC இணையதளம் அல்லது ரெயில் நிலையங்கள் மூலம் மட்டுமே முன்பதிவு செய்யலாம். அதேநேரம் உறுதிசெய்யப்பட்ட தட்கல் டிக்கெட்டுகளுக்குப் பணம் திரும்பக் கிடைக்காது. ஆனால் காத்திருப்புப் பட்டியலில் இருந்தால், ரெயில்வே விதிகளின்படி கட்டணம் பிடித்தம் செய்யப்படும்.
ஆனால் தட்கல் டிக்கெட் ரத்து செய்யும்போது நாம் செலுத்திய முழுத் தொகையும் பிடித்தம் செய்யப்படுமா, இல்லை ஒரு பகுதியாவது திரும்ப வருமா, எவ்வளவு தொகை பிடித்தம் செய்யப்படும், எவ்வளவு பணம் திரும்ப வரும் என்பதில் பலருக்கும் குழப்பம் உள்ளது. வாங்க அதுகுறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
ஒருவர் பயணி ஸ்லீப்பர் வகுப்பில் ரூ.550 செலுத்தி எடுத்த தட்கல் டிக்கெட் உறுதிசெய்ப்பட்ட (Confirmed) நிலையில், அவர் தவிர்க்க முடியாத காரணங்களால் பயணம் செய்ய முடியாமல் போய், டிக்கெட்டை ரத்து செய்யும் பட்சத்தில் ஒரு ரூபாய்கூட திரும்ப கிடைக்காது. அவர் செலுத்திய முழுத் தொகையும் ரெயில்வேயால் பிடித்தம் செய்து கொள்ளும் என்பது தான் தற்போது வரை உள்ள நடைமுறையாகும்.
ஆனால், அதேசமயம் தட்கல் டிக்கெட் Waiting List அல்லது RAC நிலையில் இருந்து ரெயில் புறப்படும் வரை டிக்கெட் Confirm ஆகவில்லை என்றால், அது தானாகவே ரத்தாகி, ரெயில்வே நிர்வாகம் பயணியின் டிக்கெட் விலையில் ரூ.60 மட்டும் பிடித்தம் செய்து, மீதமுள்ள ரூ.490 தொகையை பயணியின் வங்கி கணக்கிற்கு 2 முதல் 7 வேலை நாட்களுக்குள் திரும்பி அனுப்பிவிடும். அதேபோல் IRCTC Wallet மூலம் முன்பதிவு செய்திருந்தால், பணம் Wallet-க்கே திரும்ப வரும்.
அதேபோல் RAC நிலையில் இருக்கும் தட்கல் டிக்கெட்டை பயணி தானாக ரத்து செய்தாலும் இதே விதி தான். அதாவது ரூ.550 தட்கல் டிக்கெட் எடுத்திருந்தால், ரூ.60 பிடித்தம் செய்யப்பட்டு ரூ.490 திருப்பி வழங்கப்படும்.
சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில், உறுதிப்படுத்தப்பட்ட தட்கல் டிக்கெட்டிற்கும் முழுப் பணமும் திரும்ப கிடைக்கும் வசதியும் உள்ளது. ஆனால் இது பலருக்கும் தெரிவதில்லை. அதாவது, ஒரு பயணி ரூ.2,800 செலுத்தி, AC 2 Tier தட்கல் டிக்கெட் எடுக்கும் பட்சத்தில் அந்த பயணி, பயணிக்கும் ரெயில், தொடக்க ரெயில் நிலையத்தில் இருந்து அதாவது அவர் ஏறவேண்டிய ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் 3 மணி நேரத்துக்கு மேல் தாமதமாக கிளம்பினால், TDR தாக்கல் செய்தால் டிக்கெட்டின் முழுத் தொகையும் திரும்ப பெற முடியும்.
அதேபோல், ஒரு பயணி முன்பதிவு செய்த வகுப்பிற்கு பதிலாக குறைந்த வகுப்பு வழங்கப்பட்டால், வித்தியாசத் தொகை மட்டும் திரும்ப பெறமுடியும்.
எனவே, ரெயிலில் பயணம் செய்வதற்காக தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு முன்பாக அதன் விதிமுறைகளை முன்கூட்டியே நன்றாக அறிந்து கொண்டு முன்பதிவு செய்தால் தேவையற்ற பண இழப்புகளை தவிர்க்க முடியும்.