
இன்றைய பொருளாதார உலகில் பெரும்பாலான பொதுமக்களுக்கு வங்கிக் கணக்கு அவசியமான ஒன்றாக உள்ளது. தற்போது அனைத்தும் டிஜிட்டல் மயமாகி விட்டதால், வங்கிக் கணக்கைப் பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இதனால் அவ்வப்போது உங்கள் வங்கிக் கணக்கில் கேஒய்சி சரிபார்ப்பு செய்ய வேண்டும். இதன்படி நாட்டில் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் வருகின்ற செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் கேஒய்சி அப்டேட்டை செய்ய வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு சில விதிமுறைகளை வகுத்துள்ளது போலவே, வாடிக்கையாளர்களுக்கும் சில விதிமுறைகளை வகுத்துள்ளன. இந்த விதிமுறைகளைக் கடைபிடித்தால் நம்முடைய வங்கிக் கணக்கு பாதுகாப்பாக இருக்கும். டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ள இன்றைய காலகட்டத்தில், நாம் கவனக்குறைவாக இருந்தால் சைபர் கிரைம் மோசடியில் சிக்கிக் கொள்வோம்.
வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் கேஒய்சி சரிபார்ப்பை மேற்கொள்ள ஜூலை 1 முதல் செப்டம்பர் 30 வரை கால அவகாசம் வழங்கியது ரிசர்வ் வங்கி. இந்தக் காலக்கெடு முடிவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், வாடிக்கையாளர்கள் விரைந்து கேஒய்சி சரிபார்ப்பைச் செய்ய வேண்டும் என ரிசர்வ் வங்கி மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.
ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள், அந்தந்த வங்கிக் கணக்கில் தனித்தனியாக கேஒய்சி சரிபார்ப்பை மேற்கொள்ள வேண்டும். மேலும் தேவையில்லாத வங்கிக் கணக்குகளை உடனே மூடி விடுவது நல்லது. இதன்மூலம் பல்வேறு இழப்புகளை நம்மால் தவிர்க்க முடியும். உங்களுடைய வங்கிக் கணக்கை செயலில் வைத்திருக்க கேஒய்சி சரிபார்ப்பு அவசியமாகும். இதனை விரைந்து மேற்கெள்ளுமாறு வங்கிகள் தரப்பில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. இதில் வங்கிக் கணக்கைப் புதுப்பிக்கும் செயல்முறையும் அடங்கியுள்ளது.
முதலீடு மற்றும் சேமிப்புக்கு மட்டுமின்றி அரசுத் திட்டங்களில் பயன்பெறவும் வங்கிக் கணக்கு அவசியம் என்பதால், கேஒய்சி சரிபார்ப்பு இன்றியமையாத ஒன்றாகும். பொதுவாக பலரும் வங்கிக் கணக்கைத் தொடங்கும் போது வங்கிகளின் மூலம் கேஒய்சி சரிபார்ப்பு செய்யப்படும். அதன்பின் யாரும் இதனைச் செய்திருக்க மாட்டார்கள். ரிசர்வ் வங்கி கால அவகாசம் வழங்கும் போதே கேஒய்சி சரிபார்ப்பை முடித்து விடுவது நல்லது.
நீங்கள் முகவரி மாற்றம் செய்தால் அதனை கேஒய்சி சரிபார்ப்பில் அப்டேட் செய்ய வேண்டும். பான் கார்டு, ஆதார் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாக்காளர் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை வங்கிக் கிளைக்கு எடுத்துச் சென்று கேஒய்சி சரிபார்ப்பைச் செய்யலாம். முகவரியில் எந்தவித மாற்றமும் இவ்லையென்றால், சுய அறிவிப்பு மட்டும் போதும்.
கேஒய்சி சரிபார்ப்பை மேற்கொள்ளவில்லை என்றால், உங்கள் வங்கிக் கணக்கு மூடப்படும் அபாயமும் உள்ளது என்பதை வாடிக்கையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். கேஒய்சி தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் (https://rbikehtahai.rbi.org.in/) பார்வையிடவும்.