
விவசாயிகளின் கடன் சுமையைக் குறைக்கும் வகையில் குறைந்த வட்டியில் தமிழக கூட்டுறவுத் துறை மூலம் கடன் வழங்கப்படுகிறது. வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வஙகிகள் மூலம் விவசாயிகளுக்கு 7% வட்டியில் பயிர்க் கடன் வழங்கப்படும். கடன் தொகையை உரிய காலத்தில் செலுத்தினால் வட்டி கட்ட வேண்டிய அவசியமில்லை என்பது இத்திட்டத்தின் கூடுதல் அம்சமாகும். விவசாயிகளுக்கு கடன் வழங்க கூட்டுறவுத் துறையின் வேண்டுகோளுக்கிணங்க ரூ.3,700 கோடியை தற்போது விடுவித்துள்ளது நபார்டு வங்கி.
இந்தியன் ரிசர்வ் வங்கயின் வழிகாட்டுதலின் படி, விவசாயிகளுக்கு ரூ.2 இலட்சம் வரையிலான கடனுக்கு பிணையம் ஏதும் கேட்கப்படமாட்டாது. ரூ.3 இலட்சம் வரையிலான கடனுக்கு மட்டுமே பிணையம் கேட்கப்படும். விவசாயக் கடன் தொகையை உரங்கள், விதைகள் மற்றும் பிற விவசாய வேலைகளுக்கு விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தமிழக கூட்டுறவுத் துறை சார்பில் கடந்த 2023-24 ஆம் நிதியாண்டில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ரூ.15,543 கோடி விவசாயக் கடன் வழங்கப்பட்டது. இந்தக் கடன் அடுத்த நிதியாண்டிலேயே ரூ.15,692 கோடியாக உயர்ந்தது. தற்போது 2025-26 நிதியாண்டில் ரூ.17,000 கோடி என்ற இலக்குடன் கூட்டுறவுத் துறை விவசாயிகளுக்கு கடன் வழங்கி வருகிறது.
நடப்பு நிதியாண்டில் ஆகஸ்ட் மாதம் வரை ரூ.4,000 கோடி பயிர்க் கடன் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது முந்தைய நிதியாண்டில் இதே காலகட்டத்தில் வழங்கப்பட்ட கடனை விட ரூ.500 கோடி அதிகமாகும். இந்நிலையில் விவசாயிகளுக்கு கூடுதலாக கடன் வழங்க தேசிய விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கியிடம் (NABARD) ரூ.8,000 கோடியை குறைந்த வட்டிக்கு கடனாக கேட்டது தமிழக கூட்டுறவுத் துறை. தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று தற்போது ரூ.3,700 கோடியை விடுவித்துள்ளது நபார்டு வங்கி.
இதுகுறித்து கூட்டுறவுத் துறை அதிகாரிகள் கூறுகையில், “தமிழக விவசாயிகளின் நலனுக்காக கூட்டுறவுத் துறை தொடர்ந்து பயிர்க் கடன் வழங்கி வருகிறது. தற்போது நபார்டு வங்கியும் ரூ.3,700 கோடியை விடுவித்துள்ளது. விரைவில் நபார்டு வங்கி இன்னும் கூடுதலாக கடன் தொகையை விடுவிக்கும் என எதிர்பார்க்கிறோம். விவசாயிகள் குறைந்த வட்டியில் கடன் பெற கூட்டுறவு வங்கிகளை எப்போது வேண்டுமானாலும் அணுகலாம்” என அதிகாரிகள் தெரிவித்தனர்.
நடப்பாண்டில் விவசாயிகளுக்கு உடனுக்குடன் பயிர்க் கடன் கிடைக்கும் திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தியது. இந்நிலையில் நபார்டு வங்கி மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன் தொகையை அதிகரிக்கவும் தமிழக கூட்டுறவுத் துறை திட்டமிட்டுள்ளது.