நாட்டில் முதன்முறையாக டிஜிட்டல் பண மோசடியில் ஈடுபட்ட 9 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது மேற்கு வங்க உயர் நீதிமன்றம். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு சைபர் குற்றங்களை எதிர்க்கப் போராடும் போலீஸாருக்கு கிடைத்த பாராட்டாக பார்க்கப்படுகிறது.
தொழில்நுட்ப வளர்ச்சியால் டிஜிட்டல் பயன்பாடு நாட்டில் அதிகரிக்கத் தொட்ங்கியுள்ளது. இதில் எந்த அளவிற்கு சாதகம் உள்ளதோ, நாம் எச்சரிகையாக இல்லாவிட்டால் அதே அளவிற்கு பாதகமும் உண்டு. அதில் ஒன்று தான் டிஜிட்டல் பண மோசடி. மக்களிடையே ஆன்லைன் பணப்பரிவர்த்தனை அதிகமான பிறகு, இதனைப் பயன்படுத்தியே ஒரு கும்பல் பண மோசடியிலும் ஈடுபடத் தொடங்கி விட்டது. இந்தியா முழுக்க ஆன்லைனில் பணத்தை இழந்தவர்கள் ஏராளம். இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஆன்லைன் பண மோசடியில் ரூ.1 கோடியை தான் இழந்து விட்டதாக ஓய்வுபெற்ற விஞ்ஞானியான பார்த்தா குமார் முகர்ஜி, சைபர் கிரைமில் புகார் கொடுத்தார். இந்த வழக்கைத் தீவிரமாக விசாரத்த போலீஸார் ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஹரியானா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் மொத்தம் 13 பேரை கைது செய்தனர். இதில் குஜராத்தைச் சேர்ந்த 2 பேர், ஹரியானாவைச் சேர்ந்த 3 பேர் மற்றும் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த 4 பேர் என மொத்தம் 9 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
ஹாகித் அலி ஷேக், ஜதின் அனுப், ரூபேஷ் யாதவ், பதான் பானு, அசோக், இம்தியாஸ் அன்சாரி, ஷாருக் ரபிக் ஷேக், ரோஹித் சிங் மற்றும் சாஹில் சிங் ஆகிய 9 பேர் குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்களின் மீது ஆள்மாறாட்டம் மற்றும் பண மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
போலீஸார் அளித்த ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கியது மேற்கு வங்க உயர் நீதிமன்றம். விசாரணையின் முடிவில் ஆன்லைன் பண மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகள் 9 பேருக்கும் ஆயுள் தண்டனையை விதித்து அதிரடி உத்தரவைப் பிறப்பித்தது. சைபர் குற்றவாளிகளுக்கு நாட்டிலேயே ஆயுள் தண்டனை அளிப்பது இதுவே முதன்முறை. இதன்மூலம் சைபர் குற்ற நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா தனது முதல் மைல்கல்லை எட்டியுள்ளதாக சைபர் கிரைம் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
மேற்கு வங்க உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து அரசு வழக்குரைஞர் பிவாஸ் சட்டர்ஜி கூறுகையில், “கடந்த பிப்ரவரி மாதத்தில் போலீஸார் சைபர் குற்றம் தொடர்பான விசாரணையை முடித்தனர். அன்றைய தினத்தில் இருந்து தீர்ப்புக்காக காத்துக் கொண்டிருந்தேன். 9 பேருக்கும் ஆயுள் தண்டனை கிடைத்திருப்பது சைபர் குற்ற வரலாற்றில் முக்கிய மைல்கல்” எனத் தெரிவித்துள்ளார்.